Home இலங்கை ஈழத்துக் கூத்தரங்கம் – எந்தவித ஆராய்ச்சியும் இன்றி எழுதப்பட்டுள்ள திரு சமுத்திரனின் விமர்சனம்! து.கௌரீஸ்வரன்!

ஈழத்துக் கூத்தரங்கம் – எந்தவித ஆராய்ச்சியும் இன்றி எழுதப்பட்டுள்ள திரு சமுத்திரனின் விமர்சனம்! து.கௌரீஸ்வரன்!

by admin

ஈழத்துக் கூத்தரங்க ஆய்வு வரலாற்றில் மீளுருவாக்கம் என்ற சொல்லின் முன்மொழிவு, அதன் கருத்துநிலை குறித்து எந்தவித ஆராய்ச்சியும் இன்றி எழுதப்பட்டுள்ள திரு சமுத்திரனின் விமர்சனம்!

ஈழத்தில் நாடகமும் அரங்கியலும் எனும் கற்கையில் ஈடுபடும் மாணவர்கள் ஈழத்துப் பாரம்பரிய அரங்குகள் தொடர்பாகப் படிக்கும் போது குழப்பகரமான புரிதல்களைப் பெற்றுக்கொள்ளும் நிலைமை வலுவாகக் காணப்படுகின்றது. விசேடமாக பாரம்பரிய அரங்குகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வறிவு நடவடிக்கைகள் பற்றி ஆராயும் போது அங்கே பல்வேறு குழப்பங்கள் நிலவுவதையும், திரிபுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். குறிப்பாக ஈழக்கூத்தின் மீளுருவாக்கம் பற்றிய கற்றலில் ஈடுபடும் போது இச்சவால்களை எதிர்கொள்ளும் நிலைமை காணப்படுகின்றது. கூத்து மீளுருவாக்கம் தொடர்பாகக் கற்றறிய முற்படும் ஒருவர் கூத்து மீளுருவாக்கம் எவ்வாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டியதும் யதார்த்தமாகியுள்ளது.

இத்திரிபுபடுத்தலுக்கு மேலும் ஒரு உசாவுகையினை வழங்கும் விமர்சனமாகவே ‘மௌனகுருவின் கூத்த யாத்திரை – கொண்டதும் கொடுத்ததும் – நூல் விமர்சனம்!’ என்ற தலைப்பில் திரு சமுத்திரன் (பேராசிரியர் என்.சண்முகரெத்தினம்) அவர்கள் எழுதி குளோபல் தமிழ் நியுஸ் இணைய ஊடகத்தில் வெளியாகியுள்ள குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஈழத்துக் கூத்தரங்க ஆய்வு வரலாற்றில் மீளுருவாக்கம் என்ற சொல்லின் முன்மொழிவு, அதன் கருத்துநிலை குறித்து எந்தவித ஆராய்ச்சியும் இன்றி எழுதப்பட்டுள்ள ஒரு விமர்சனமாகவே இது காணப்படுகின்றது. இக்கட்டுரையில் இவ்விடயம் பற்றி உரையாட முனைகிறேன்.
இதனை 1960 களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன், வாலிவதை எனும் நான்கு ஆற்றுகைகள் பற்றி விளக்கமளித்த அந்தச் செயற்பாடுகளில் பங்குபற்றிய அறிஞர்களின் கருத்துக்களை ஆதாரங்களாகக் கொண்டு நாம் ஆரம்பிக்கலாம்.

இந்தவகையில் இது ஒரு தமிழ் தேசிய அரங்கினை உருவாக்குவதற்கான முன்னெடுப்பு முயற்சி என்று கூறிய அதேவேளை இது கூத்துமீட்டெடுப்பு, நாட்டுக்கூத்தின் நாடகமுறை, கூத்தின் மீள்கண்டுபிடிப்பு, நவீனமயமாக்கம், செம்மையாக்கம், கூத்துப்புனருத்தாரணம், கூத்துப்புத்தாக்கம், நாட்டுக்கூத்தின் மறுமலர்ச்சி எனவும் பல்வேறு சொற்பதங்களுடாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இவற்றினைப் பின்வரும் மேற்கோள்கள் வாயிலாக அறியமுடிகின்றது.

‘1950 களிற்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களால் இன்று கூத்துத்தான் நம்நாட்டுத் தமிழர்களின் தேசியக்கலை வடிவம் என்று கூறுபவர்கள் வந்துவிட்டார்கள்’, ‘நாட்டுக்கூத்து நாடக முறைமையாகிய மாற்ற வரலாற்றினூடே தமிழ் மக்களிடையே நிலவிய பண்பாட்டு வேறுபாடுகளின் சிதைவையும், தமிழுணர்வின் வளர்ச்சியையும் அவதானித்துக் கொள்ளலாம்.’ ‘1960 – 62 இல்… வித்தியானந்தன் கூத்து மீட்டெடுப்பு முயற்சியிலிறங்கியிருந்தார்’, ‘கர்ணன்போர் இந்த மீட்டெடுப்பு முயற்சியின் முதற்படியாயிற்று’. (சிவத்தம்பி. கா, 1992, முன்னுரை நாடகம் அரங்கியல் பழையதும் புதியதும், முதல்பதிப்பு 1992, இரண்டாம்பதிப்பு 2005, மீளச்சு 2007)

‘கலைக்கழகத்தின் தோற்றம், வித்தியானந்தனின் வருகை, நாட்டுக்கூத்தின் மறுமலர்ச்சி’, ‘1957ல் இருந்து அடுத்த ஒரு தசாப்த காலம் வரை ஈழத்து நாடக உலகிலே பாரம்பரியக் கூத்துக்களைப் பேணுகிற, அவற்றை நவீனப்படுத்துகிற தன்மைகளே பிரதான போக்குகளாக அமைந்தன’, ‘நாட்டுக் கூத்தினை வளர்த்ததோடு அவற்றைப் புதிதமைத்து நகர்ப்புறப் பார்வையாளருக்கு ஏற்ப செம்மையான வடிவத்தில் அளித்த பணியையும் சு.வித்தியானந்தன் செய்தார்.’, ‘கூத்து மரபின் ஆடல் பாடல் பிசகாது கூத்திற் பயன்படும் அதே வாத்தியங்களை கையாண்டு மரபு பிறழாது இக்கூத்துக்களைச் செம்மைப்படுத்தினார்’,’தனித்துவமான இலங்கைத்தமிழ் மக்களின் தேசிய நாடகத் தேடலுக்குப் பேராசிரியர் வித்தியானந்தன் முன்னோடியானார்’ (மௌனகுரு.சி, 2004, ஈழத்துத்தமிழ் நாடக அரங்கு, இரண்டாம் பதிப்பு, குமரன் அச்சகம், கொழும்பு)

‘கூத்தரங்கின் புத்தாக்கம் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் பங்கு’, ‘ஈழத்துத்தமிழரின் நாடகப் பாரம்பரியத்தை மீள்கண்டுபிடிப்புச் செய்தவராக பேராசிரியர் சு.வித்தியானந்தன் கருதப்படுகிறார்’ (மௌனகுரு.சி,1992, நாடகம் அரங்கியல் பழையதும் புதியதும், முதல்பதிப்பு 1992)
1960 களிலிருந்து இரண்டாயிரமாவது ஆண்டு வரை இத்தகைய கருத்து விளக்கங்களும் வியாக்கியானங்களும் பதிவு செய்யப்பட்டும் பரவலாக்கப்பட்டும் வந்துள்ளன. குறிப்பாகப் பேராசிரியர் சு.வித்தியானந்தனுடன் கூத்து மீளுருவாக்கம் என்ற சொல் தொடர்புபடுத்தப்படாத நிலைமையிலேயே இப்பதிவுகள் காணப்படுகின்றமை முக்கிய கவனத்திற்குரியது.

இங்கு பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் 1992 ஆம் ஆண்டு தான் வெளியிட்ட நாடகம் அரங்கியல் பழையதும் புதியதும் என்ற நூலில் பின்னோக்கிய தேடலும் முன்னோக்கிய பாய்ச்சலும் என்ற கட்டுரையில் மீளுருவாக்கம் செய்தல் பற்றிக் கூறியுள்ளதானது அவர் கொண்டிருந்த நவீன கருத்தியலின் செல்வாக்கிற்குட்பட்ட ஒரு அபிப்பிராயமாகவே காணப்படுகின்றது.

‘சரித்திரச் சான்றுகள் கலை வரலாற்றுச் சான்றுகள், ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு கூத்தின் உடைகள், ஒப்பனை, அரங்கு என்பன மீள் உருவாக்கஞ் செய்யப்பட வேண்டும். தமிழர்களின் ஆடல், பாடல், இசை ஆகியவற்றில் நடைபெற்ற ஆராய்ச்சியின் துணைகொண்டு கூத்தின் இவ்வம்சங்கள் பாரம்பரிய செந்நெறி மரபுக்கியையச் செம்மைப்படுத்தப்பட வேண்டும். தமிழரின் நாடக ஆய்வு, இலக்கிய ஆய்வு ஆகியவற்றின் துணைகொண்டு கூத்தின் கதையமைப்பு, பாடல்கள் என்பன மேம்படுத்தப்பட வேண்டும். மீள் உருவாக்கம் செய்யப்பட வேண்டும். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் வந்த இசைக்குறிப்புக்களை ஆதாரமாகக் கொண்டு தனது சரித்திர அறிவையும் ஏனைய பிறதுறை அறிவுகளையும் இணைத்து விபுலானந்தர் பண்டைத் தமிழரின் யாழ்களை மீள் உருவாக்கம் செய்தது போல, பண்டைய மனிதரின் தாடை எலும்புகளை வைத்து மானிடவியலாளர்கள் ஏனைய அறிவுத்துறையுதவியுடன் புராதன மனிதனை வரைந்தது போல, தொல்பொருள் சான்றுகளை வைத்து சரித்திர காலத்துக்கு முற்பட்ட பெரும்பெரும் மிருகங்களை வரைந்தது போல எமக்கு இன்று கிடைக்கும் கூத்துக்களையும் மேற்குறிப்பிட்ட அறிவுத் துறைகளையும் ஆதாரமாக வைத்து தமிழர் மத்தியில் செந்நெறித் தன்மையோடு முன்னர் வழக்கிலிருந்த (சோழர் காலத்திலிருந்த கூத்தை இலக்காக வைத்து) கூத்தைக்கண்டுபிடிக்க வேண்டும். ஒரு வகையில் கேரள அறிஞர்களும், கன்னட அறிஞர்களும் இத்துறையில் இவ்வாறு ஈடுபட்டதன் விளைவாக கதகளி, யஷகானம் போன்ற கூத்துக்களை செந்நெறிக் கலைகளாக உருவாக்கினர். இதேபோல் ஈழம் வாழ் தமிழரும் தம் பண்பாடுகளையும், கலைகளையும் பிரதிபலிக்கக்கூடிய ஒரு மரபுவழி தேசிய நாடகம் ஒன்றை உருவாக்கலாம். பின்னோக்கிய தேடலானது அத்தகைய ஒரு நாடக உருவாக்கத்திற்கு உதவும். இது தனியொருவர் முயற்சியால் முடிவதன்று. பல்துறை அறிஞர்களினதும் கூட்டு முயற்சியாலேயே சாலும். அவ்வண்ணம் கண்டு பிடிக்கப்படும் கூத்தைத் தமிழரின் பாரம்பரியச் சின்னமாகக் காட்சிக்கு வைக்க முடியும்.’ (மௌனகுரு.சி,1992, பழையதும் புதியதும், விபுலம் வெளியீடு 1, மட்டக்களப்பு, பக்கம் 143,144)
மேற்படி 1992 இல் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் கூறியுள்ள மீளுருவாக்கமானது பழையதை மீளக்கொண்டு வந்து நூதனசாலைக்குரியதாக்கும் கருத்தியலுடன் தொடர்புபட்ட அவருடைய அபிப்பிராயமாகும் என்பதை உறுதிப்படுத்த முடிகின்றது.

இவ்விதமிருக்க 2002/2003 காலப்பகுதியில் கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான கருத்து விளக்கங்கள் கூத்து மீளுருவாக்கம் செயற்பாடும் கோட்பாடும் என்று முன்வைக்கப்பட்டதன் பின்னரிலிருந்து அதுவரைக்கும் 1960 களில் மேற்கொள்ளப்பட்ட அரங்க நடவடிக்கைகளை கூத்து மீளுருவாக்கம் என்று சுட்டிக்காட்டாத அறிஞர்கள் 1960 களிலிருந்து கூத்து மீளுருவாக்கம் ஆரம்பித்துள்ளதாக புதிய வியாக்கியானங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளமையினைக் காணமுடிகின்றது. இவ்வாறு புதிதாக பேராசிரியர் சு.வித்தியானந்தனின் செயற்பாடுகளை கூத்து மீளுருவாக்கமாக வலிந்து கூற முற்படுவதானது பின்வரும் முடிவுகளுக்கு அரங்கியல் ஆய்வாளர்களை அழைத்துச் செல்கின்றது.

  1. ஈழத்துப்பாரம்பரிய அரங்க அறிவியலின் இயங்கியல் வரலாற்றில் பரிணமித்துள்ள பிரதானமான இருவேறு கருத்து நிலைகளுடன் கூடிய புதிய போக்குகள் பற்றி, அவற்றின் கருத்தியல் தளம் தொடர்பாகத் தெளிவாகவும் விளக்கமாகவும் அரங்கியல் கற்கையில் ஈடுபடும் மாணவர்கள் பெற்றுக் கொள்வதைத் தடுக்கும் காரியமாகவே இருக்கின்றது.
  2. ஈழத்துக் கூத்து ஆய்வு வரலாற்றில் நடைபெற்றுள்ள காத்திரமான ஆய்வு நடவடிக்கைகளைத் திரிபுபடுத்திச் சிதைக்கும், இருட்டடிப்புச் செய்யும் நேர்மையீனமான புலமைத்துவச் செயற்பாடு என்பதை வெளிக்காட்டுகின்றது.
  3. ஏறத்தாழ நான்கு தசாப்தங்களாகப் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் செயற்பாடுகள் தொடர்பான தமது வியாக்கியானங்களில் கூத்து மீளுருவாக்கம் என்ற சொல்லையே உச்சரிக்காதவர்கள் புதிய கருத்துநிலையுடன் முன்மொழியப்பட்டுள்ள கூத்து மீளுருவாக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்த முனைவதானது அவர்கள்; ஏற்கெனவே மேற்கொண்ட விளக்கங்களும், வியாக்கியானங்களும் கருத்தியல் தளமின்றி வெற்றுக் கோசங்களால் சோடிக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.
  4. பேராசிரியர் சு.வித்தியானந்தனின் கருத்தியலையும் அவருடைய செயற்பாடுகளையும் சரியாக விளங்கிக்கொள்வதைத் தடுக்கும் செயல்களாகவே இவை உள்ளன. அதாவது பேராசிரியர் சு.வித்தியானந்தன் தான் வாழ்ந்த காலத்தில் செல்வாக்குப்பெற்றுத் திகழ்ந்த நவீன சிந்தனைகளுக்கமைய காலத்தின் நிர்ப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டு நேர்மையாகச் செயலாற்றிய தன்மையை விடுத்து அவர் கருத்தியலின்றி இயங்கினார் என்றவாறான புரிதலுக்கு இட்டுச் செல்வதாகவும் இருக்கின்றது.
    இத்திரிபுபடுத்தலை கூத்து ஆய்வு வரலாற்றில் 1960 களில் சு.வித்தியானந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளினதும், 2002/2003 காலப்பகுதியில் சீலாமுனையில் மேற்கொள்ளப்பட்ட கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு முன்மொழியும் கருத்துக்களினதும் கருத்தியல் விளக்கங்களையும் அவற்றின் வித்தியாசங்களையும் அறிந்து கொள்வதினூடாக மேலும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

அதாவது 1960 களில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையானது பாரம்பரிய ஆற்றுகைக் கலைகளைப் புதிய மத்தியதர வர்க்கத்தின் நுகர்வுப் பண்பாட்டிற்கேற்ற வகையில் மாற்றியமைத்த செயற்பாடாகும். இதனைப் பேராசிரியர் சு.வித்தியானந்தன் பின்வருமாறு கூறுகின்றார்.


‘நாட்டுக் கூத்துக்களைக் கற்றோர் மத்தியில் அறிமுகப்படுத்தும் வேலையையும், அவற்றைச் செம்மைப்படுத்தும் வேலையையும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலேதான் செய்யக்கூடியதாக இருந்தது. 1950 களுக்குப் பின்னர் இலங்கையில் வாழ்ந்த சிங்கள – தமிழ் மக்களிடையே தத்தமது கலாசாரங்களைப் பேண வேண்டுமென்ற தேசிய உணர்வு வேகமாக ஏற்பட்டது. 1960 க்குப் பின்பு இலவசக்கல்வி ஏற்பட்டதனாலும், தாய்மொழிக்கல்வி முறை அமுல்படுத்தப்பட்டதனாலும் கிராமப்புற மாணாக்கர்கள் பெருமளவுக்குப் பல்கலைக்கழகம் வந்தனர். இத்தகைய கனிந்த சூழ்நிலைகளே பேராதனையில் கூத்துக்கள் தயாரிக்க காலாயின.’

‘பேராதனையில் நாம் முதலில் மேடையிட்ட நாடகம் கர்ணன்போர் ஆகும். இது ஒரு வடமோடி நாடகம். மட்டக்களப்பிலே இந்நாடகம் விடிய விடிய ஆடப்பட்டு வந்தது. இதனை நாம் நேரம் கருதி 1.5 மணிநேரமாகச் சுருக்கினோம். நீண்ட வரவு ஆட்டங்களைச் சுருக்கினோம். விருத்தத்தின் பின்னால் சபையோர் இழுக்கும் இழுவையைக் குறைத்தோம். வட்டக்களரி மரபினை ஒரு பக்கக் களரிக்கு மாற்றினோம். மத்தளம் சல்லரியுடன் உடுக்கு, சவணிக்கை முதலிய நாட்டு இசைக்கருவிகளைப் பயன்படுத்தினோம். பிற்பாட்டுப் பாடும் சபையோரை ஒழுங்காக வேடமிட்டு மேடையில் நிறுத்தினோம். வட்டக்களரியின் மத்தியில் நிற்கும் அண்ணாவியார் மேடையின் ஓரம் நிறுத்தப்பட்டார். உணர்ச்சி பாவத்தோடும், சொற்களுக்கு அழுத்தம் கொடுத்தும் பாட மாணவர் பயிற்றப்பட்டனர். நடிப்புக்கு மிகமுக்கியத்துவம் கொடுத்தோம் (மட்டக்களப்பு நாட்டுக் கூத்துக்களில் நடிப்பு முக்கிய இடம்பெறுவதில்லை). ஆடை அணிகளில் கவனம் செலுத்தினோம். நவீன ஒளியமைப்பை நாடகத்தின் கருவையும், பாத்திரங்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தப் பயன்படுத்தினோம். முக்கியமாக, பெண்களையே பெண் பாத்திரங்களை ஏற்கவும் வைத்தோம்.’

செம்மைப்படுத்தப்பட்ட இக்கூத்துக்கள் மூன்று பக்கமும் அடைக்கப்பட்டதும், நவீன ஒலி, ஒளி, ஆசனம் கொண்டதுமான நவீன அரங்குகளில் படித்த மத்தியதர வகுப்புப் பார்வையாளருக்குக் காட்டப்பட்டன. அவர்களால் இந்நாடகங்கள் வெகுவாக இரசிக்கவும்பட்டன. (வித்தியானந்தன்.சு, 1990, நாடகம் நாட்டாரியற் சிந்தனைகள் கட்டுரைத் தொகுப்பு, தமிழகம் வெளியீடு, தெல்லிப்பளை, பக் 50,52,57)

மேற்படி பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் தான் மேற்கொண்ட கலையாக்கச் செயல்கள் தொடர்பாகக் கூறியுள்ள விளக்கமானது, காலனித்துவ ஆட்சியின் தாக்கத்தினால் காலனித்துவ ஆதிக்கத்தின் கீழிருந்த பல்லினப் பல்பண்பாட்டுத் தன்மைகள் கொண்ட நாடுகளில் எழுச்சிபெற்ற நவீன அடையாள அரசியலின் விளைவாக, புதிய மத்தியதர வர்க்கத்தை மையப்படுத்தி உருவாக்கம் பெற்ற நுகர்வுக்கலாசாரத்திற்குரிய கலைப்படைப்பாக்கம் என்பதைத் தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. அத்தோடு இந்தக்கலைச் செயற்பாடானது பொது உடமையாக பயிலப்பட்டு வரும் உள்ளுர்க் கலை வடிவங்களைத் தனியார் உடமைகளாக மாற்றியமைக்கும் தன்மை கொண்டது என்பதும் கவனிக்கத்தக்கது. உலக நாடக ஆய்வறிவு வரலாற்றில் மேற்படி அடையாள அரசியலின் பாற்பட்டு நடைபெற்றுள்ள உள்ளூர்க் கலைகளின் நவீனமயமாக்கம் குறித்தும் இதையொத்த நடவடிக்கைகள் பலவற்றைப் பற்றியும் அறியக்கிடைக்கின்றது.

இவ்வாறு காலனித்துவ ஆட்சியும் அதனால் வேர்கொண்ட காலனியச் சிந்தனைகளும் கட்டமைத்த நவீன பண்பாடுகள் தொடர்பாகவும் அதிலிருந்து விடுதலை பெறும் காலனியநீக்கம் சம்பந்தமாகவும் ஆய்வறிவாளர்கள் பலர் தமது விமரிசனங்களை முன்வைத்துள்ளார்கள்.

‘காலனியாதிக்கத்தைத் தொடர்ந்து நவீன காலனித்துவம் வந்தது இவற்றின் காரணமாக முன்னைய காலனி நாடுகளில் மொழி, இலக்கியம் முதலியவற்றிலும். அதுமட்டுமல்லாமல் அரசியல், சமூக விழுமியங்கள், கல்விக் கொள்கைகள், சட்டங்கள், நிர்வாக முறைகள் மற்றும்; தேசியம், பண்பாடு ஆகியவை குறித்த கருத்தமைவுகள் நவீனத்துவம் உள்ளிட்ட புதிய சொல்லாடல்கள் முதலியவற்றிலும் ஐரோப்பிய மாதிரி வடிவங்கள் (models) போற்றப்பட்டன, ஆதிக்கம் செலுத்தின. உணர்வு நிலையிலும் செயல்பாட்டு நிலையிலும் சுயங்கள் பணிந்து போய்த் தாழ்த்தப்பட்டன. மரபுகள் மழுங்கடிக்கப்பட்டன’, ‘மண்ணின் மரபோடு உயிர்த்துக் கிடக்கும் நாட்டுப்புறப் பாடல்கள், இசை வடிவங்கள், கதை சொல்லுகிற முறைமைகள், தொன்மங்கள் முதலியவற்றைப் பொருத்தமற்றவை என்று காலனித்துவ நிலைப்பாடு நிராகரித்தது. அவற்றிடத்தில் தன்னுடையவற்றை அது இறக்குமதி செய்தது. (நடராசன்.தி.சு, 2017)
‘புறவயப்படுத்தும் போது அல்லது பொதுமைப்படுத்தும் போது ஓர் ஒற்றை மையம் உருவாகிறது. அந்த ஒற்றை மையத்தினுள் சமூகக் குழுக்களின் அடையாளங்கள் அனைத்தும் கரைக்கப்பட்டு விடுகின்றன அல்லது ஒடுக்கப்பட்டு விடுகின்றன. அந்த ஒற்றை மையம் உண்மை என்பதாகவும் அல்லது உயர்தரம் கொண்டதென்பதாகவும் ஆக்கப்பட்டு சகல சமூகக் குழுக்களும் தமது அடையாளங்களை அந்த ஒற்றை மையம் நோக்கித் தகவமைத்துக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றன. அந்த ஒற்றை மையம் சகலரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஒரே பொது விதிக்குள் சகலமும் கொண்டுவரப்படுகின்றன.'(முத்துமோகன்.ந,1998)

‘காலனித்துவவாதி தனது வடிவில் காலனித்துவத்திற்கு உட்பட்ட மக்களையும் நாட்டையும் வடிவமைத்தான். அந்த மக்களுக்கும் நாடுகளுக்கும் தனது விருப்பப்படி பெயரிட்டான்’,(நுகுகி வா தியாங்கோ) என்று மதிப்பிடும் அதேநேரம் ‘பல நூற்றாண்டு உறுப்பிய நீக்கம், அந்நியமாதல் போன்ற கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான சுய முனைப்பு (எங்களை நாங்களே தெளிவாகப் பார்த்தல்'(நுகுகி வா தியாங்கோ), ‘பிந்தைய காலனிய சூழலில் இருக்கின்ற நாம் காலனியத்தின் அனைத்து வகையான முன்னெடுப்புக்களையும் கட்டவிழ்த்து மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும் காலனியத்தை அழித்து அதிலிருந்து விடுபடுதல் (decolonization) என்பதைக் கவனமாகச் செய்ய வேண்டும்’ (பக்தவத்சல பாரதி,2017) என்று பரிந்துரைத்தனர்.

இந்தவகையில் காலனிய நீக்கத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பண்பாடுகளைக் கட்டவிழ்த்து அவற்றைக் காலனிய நீக்கஞ்செய்து மீளக்கட்டமைத்தல் எனுஞ் செயற்பாட்டில் அக்கறை செலுத்தி வருகின்றார்கள். இச்செயற்பாடுகள் மீளுருவாக்கம் செய்தல் எனும் கருத்துநிலையுடன் சம்பந்தப்பட்டதாக இருந்து வருகின்றன. அதாவது காலனிய நீக்கக் கருத்தியலுடன் முன்னெடுக்கப்படும் மீளுருவாக்கமானது பிற்போக்கான அம்சங்கள் கொண்ட பழமைக்குத் திரும்புவதுமல்ல பழைமையை மீளக் கொண்டுவருவதுமல்ல மாறாக உள்ளூர்ப் பண்பாடுகளிடையே தொட்டுணரக் கூடியதாகவும், தொட்டுணர முடியாததாகவும் ஆழமாக வேரூன்றியுள்ள காலனிய ஆதிக்கக் கூறுகளைக் களைந்து, காலனித்துவத்தால் சிதைக்கப்பட்ட உள்ளுர்ப் பண்பாடுகளின் சாதகமான விடயங்களைக் கவனத்திற்கொண்டு புதிய சூழ்நிலைகளுக்கும் வாழ்வியலுக்கும் சவால்களுக்கும் ஏற்ப அவற்றை மீளக்கட்டமைக்கும் செயற்பாடாகும். இதற்காக இங்கு பங்குகொள் ஆராய்ச்சி முறைமை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பங்குகொள் ஆராய்ச்சியின் அவசியத்தை பேராசிரியர் கே.என்.பணிக்கர் பின்வருமாறு விபரிக்கின்றார்.

‘ஒருவரிடம் அல்லது ஒரு குழுவிடமிருக்கும் தவறான பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டுமாயின் ஆழமான தொடர்பின் மூலம்தான் இது சாத்தியமாகிறது. அதனைக்காலப்போக்கில் உரையாடலாக, விவாதமாக மாற்றி பிழையான நம்பிக்கைகளை அகற்ற முடியும். இதன்மூலம் மட்டுமே பகுத்தறிவை மக்களிடம் வளர்த்தெடுக்க முடியும். ஆனால் நடைமுறையில் இவ்வாறு செய்ய நாம் தவறியிருக்கிறோம்.


எதையும் முட்டாள் தனமானது என்று எடுத்த எடுப்பிலேயே மற்றவர்களின் நம்பிக்கையை நாம் நிராகரித்திருக்கிறோம்’, ‘முதலில் மக்கள் மீது நம்பிக்கை கொண்டு பங்குபெறுதல் என்ற முறையில் இதற்கு மதிப்பளிக்க வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சமுதாயத்திற்கு எதிரான தடைகள் இதில் எவ்வாறெல்லாம் அடங்கிக் கிடக்கின்றன என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். குறைபாடுகளை எந்த மக்களும் உடனே ஏற்றுக்கொண்டுவிட மாட்டார்கள். அதற்கு இடைவிடாத முயற்சியும் குறிப்பிடத்தக்க காலமும் தேவைப்படும். ஆனால் முற்போக்கு இயக்கங்களும் பகுத்தறிவுப் பார்வை கொண்டவர்களும் கடந்த காலத்தில் இதனை கவனமெடுத்துச் செயல்படுத்துவதில் போதிய கவனமற்றிருந்திருக்கிறார்கள். கூடுதல் பொறுமையுடன் செய்ய வேண்டிய பணிகள் இவை.'(பணிக்கர்.கே.என்,2006)

இவ்வாறு 2006 இல் பேராசிரியர் கே.என். பணிக்கர் கூறிய செயற்பாடு 2002/2003 காலப்பகுதியில் ஈழக்கூத்து மீளுருவாக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக இருக்கின்றது. காலனியநீக்க கருத்தியலுடன் பாரம்பரிய ஆற்றுகைக் கலைகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பங்குகொள் ஆராய்ச்சிச் செயற்பாடாக இது ஈழக்கூத்து மீளுருவாக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

‘இலங்கைக் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையினைச் சேர்ந்த விரிவுரையாளர் சி.ஜெயசங்கர் அவர்கள் தன்னுடைய முதுதத்துவமாணி பட்டத்திற்கான ஆய்வுச் செயற்பாடாக, மட்டக்களப்பிலுள்ள நீண்ட வடமோடிக்கூத்துப் பாரம்பரியங்களைக் கொண்ட கிராமங்களுள் ஒன்றாகவுள்ள சீலாமுனைக் கிராமத்துக் கூத்துக் கலைஞர்களுடன் இணைந்து மேற்கொண்ட கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு புதிய பார்வையில் எமது பாரம்பரிய அரங்குகளின் மீளுருவாக்கம் குறித்த அறிவியலைச் செயலாகவும் கொள்கையாகவும் முன்வைக்கும் செயற்பாடாக அமைந்துள்ளது.’, (கௌரீஸ்வரன்.து,2007)

ஈழக்கூத்தரங்க ஆய்வறிவு வரலாற்றில் முதன்முதலாகக் கூத்துமீளுருவாக்கம் என்பதை பங்குகொள் ஆராய்ச்சியாக முன்மொழியும் இவ்வாய்வு 2002/2003 ஆம் வருடங்களில் ஈழத்தின் மட்டக்களப்பிலுள்ள சீலாமுனை எனும் ஊரிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


‘ஜெயசங்கர் கூத்தை அதனை ஆடும் மக்களைக் கொண்டு சமூக அரங்காக மாற்றி கூத்தை மீளுருவாக்கும் வகையில் தன் ஆய்வை மேற்கொண்டுள்ளார்’. ‘சீலாமுனை எனும் கிராமத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு வாழும் மரபுவழிக் கலைஞர்களுடனும், அக்கிராம மக்களுடனும் இணைந்து தம் ஆய்வை இவர் மேற்கொண்டுள்ளார்’ (மௌனகுரு.சி, 2007)

‘கூத்து மீளுருவாக்கம் என்பது காலங்காலமாகக் கூத்தை ஆடிவருபவர்களுடன் இணைந்து கூத்தை சமகாலத்திற்குரியதாக ஆக்குவதாகும். இங்கு கூத்து என்பது செயற்பாடாக முன்னெடுக்கப்படுகின்றது. கூத்தில் ஏற்படுத்தும் மாற்றம் அதை ஆடி வரும் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றத்துடன் தொடர்புபடுகிறது. கூத்து இங்கு கலை என்பதற்கும் அப்பால் தொடர் கலைச்செயற்பாடாகின்றது. சமுதாய அரங்காக மீளவும் மளிர்விக்கப்படுகின்றது. சுயாதீனமான சமூக உருவாக்கத்திற்கான கலைவழிச் செயற்பாடாகப் பரிணமிக்கின்றது.'(மௌனகுரு.சி, 2007), பாரம்பரியக் கலைஞர்களை மையப்படுத்திய இத்தகைய பங்குகொள் ஆராய்ச்சி தமிழ்ப் பாரம்பரிய அரங்க அறிவியல் வரலாற்றில் ஒரு முன்னோடி ஆய்வுச் செயற்பாடு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனைப் பின்வரும் மேற்கோள்கள் சுட்டி நிற்கின்றன.

‘மரபான கதையாடல்களை மீள்பார்வை செய்து மேடையேற்றுவதென்பது தமிழ்நாட்டின் நவீன நாடகச்சூழலில் இருந்துவருகிற ஒரு விடயந்தான். ஆனால் மரபான கூத்துக்கலையில் இங்கு அப்படி எதுவும் நடந்துவிடவில்லை’ (பிரளயன், 2012)

‘பாரம்பரியக் கலைவடிவங்களைப் பயின்று வருகின்ற சமூகங்களை வலுப்படுத்தும் வகையிலும் சமுதாயமயப்படுத்தும் வகையிலும் மீளுருவாக்கம் செய்வதன் மூலம் கலையைச் சமகாலத்திற்குரியதாக ஆக்கும் வகையிலும் அதைப்பயின்று வரும் மக்களை சமகால உலகை எதிர்கொள்ளத்தக்க வகையிலும் சுயாதீனமானவர்களாக வாழத்தக்க வகையிலுமான சமூக மாற்றமொன்றைப் பற்றிய சிந்தனையோ சிந்தனைக் கீற்றோ அரை நூற்றாண்டு கால கூத்துக் கற்கைகள் வரலாற்றில் அடையாளங் காண முடியாததொன்றாக இருக்கிறது’ (ஜெயசங்கர்.சி,2011)

இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தில் முதல்முறையாக 2002/2003 இல் முன்னெடுக்கப்பட்ட கூத்து மீளுருவாக்கத்தின் சாராம்சத்தை அதனை முன்னெடுத்த ஆய்வாளர் பின்வருமாறு சுட்டிக்காட்டுகின்றார்.
‘பல்கலைக்கழக ஆய்வாளர்தம் ஆய்விற்கு தகவல் வழங்கிகளாகவும், கூத்தைச்செம்மைப்படுத்தும், நவீனமயப்படுத்தும், மீட்டெடுக்கும் அறிஞர்தம் கலைப்பணிக்கு சம்பளத்திற்கு மத்தளம் அடிப்பவர்களாகவும், ஆட்டங்கள் பாட்டுக்களைப் பயிற்றுவிப்பவர்களாகவும், நிதி வழங்கல் நிறுவன உதவியில் இயங்கும் கலை நிறுவனங்களில் ஊழியத்திற்காக வாங்கப்பட்டவர்களாகவும் உள்ள பாரம்பரியக் கூத்துக்கலைஞர் தங்களுக்காக தாங்களே சமூதாயமாக இயங்கிவந்த பாரம்பரியத்தன்மையை மீட்டுக்கொள்ளவும், சமகாலத்திற்குரிய வகையில் பாரம்பரியமாக கட்டமைக்கப்பட்டு வந்த விழுமியங்களை உரையாடலுக்குக் கொண்டு வந்து (உதாரணம்: சாதி பெண் ஏற்றத்தாழ்வுகள்) அவர்களது சூழலில் அவர்களாலேயே முன்னெடுக்கப்படும் வகையிலான கலைச்செயற்பாட்டு எத்தனந்தான் கூத்து மீளுருவாக்கமாகும். (ஜெயசங்கர்.சி,2011)

‘திறந்த வெளியில் மனிதர்கள் கூடிக்களிக்கும் களங்களாக கூத்தரங்குகளை சமகால நோக்கில் வலிமையாகப் பயன்படுத்துவதே கூத்து மீளுருவாக்கத்தின் நோக்கமாகும்’ , ‘தங்கிவாழ் நுகர்வுச் சமூகங்களாக உலகைப் பொதி செய்து வரும் பன்னாட்டு நிறுவனமயப்பட்ட உலகமயமாக்கச் செயற்பாடுகளுக்கு மாற்றான உள்ளூர் மயப்பட்டதும் உலகந் தழுவியதுமான கல்வி, கலை, பண்பாட்டுச் செயல்வாதங்களுக்கு சமாந்தரமான பங்குகொள் அரங்க ஆய்வுச் செயற்பாடாகவே கூத்து மீளுருவாக்கம் என்ற கருத்துருவாக்கம் அரங்கச் செயற்பாடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது’.(ஜெயசங்கர்.சி,2011)
கூத்துமீளுருவாக்கம் எனும் இந்த அரங்கச் செயற்பாட்டின் ஆக்கபூர்வமான விளைவுகளை வெளிக்காட்டும் வகையில் பங்குகொள் ஆய்வில் பங்குபற்றிய பாரம்பரியக் கலைஞர்களின் கருத்துக்கள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு பின்வருவனவற்றைக் காணலாம். முதலில் கூத்துப்பனுவல்களைப் பங்குகொள் ஆராய்ச்சியூடாக மீளுருவாக்கிய ஏட்டண்ணாவியாரின் பதிவு ‘1990 ஆம் ஆண்டில் நாங்கள் தர்மபுத்திரன் என்னும் கூத்தை அரங்கேற்றியபோது அதன் கதை ஓட்டத்தின் கரு தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெற்ற யுத்தமென்றும் பாண்டவர்கள் எல்லா விடயங்களிலும் தர்மவான்கள் என்றும் கௌரவர்கள் எல்லா விடயங்களிலும் அதர்மவான்கள் என்றும் சித்தரித்திருந்தோம். இதுவே காலம் காலமாகச் சொல்லப்பட்டு வந்த கதை. பாரதக்கதை பற்றிய புதிய சிந்தனைகள், ஏற்பட்ட பிற்பாடே அக்கதைகளில் உள்ள சில ஒடுக்குமுறைகள் எங்களுக்குப் புரியத்தொடங்கியது.
இச்சிந்தனைகள் மூலமாகப் பிறந்ததே சிம்மாசனப்போர் என்ற வடமோடிக் கூத்தாகும். சிம்மாசனப்போர் என்ற கூத்தின் பாடல்களை நான் எழுதத் தொடங்கிய போது புதிய சிந்தனைகளால் சாதிகளைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தப்பட்ட பாடல்களை முற்றாக நீக்கினேன்.’

‘பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டம் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடந்த போராட்டமல்ல அரசு உரிமைக்கே நடந்த போராட்டமாக கதையைச் சித்தரித்து இப்போராட்டத்தினால் அனேகமாக அப்பாவி மக்களே அநியாயமான மரணங்களைத் தழுவிக் கொண்டனர் போன்ற சம்பவங்களை சித்திரித்துக்காட்டியது. இக்கொடிய யுத்தம்தான் நேர்மையான முறையில் நடைபெற்றதா என்றால் அதுதான் இல்லை. யுத்தம் ஆரம்பமாகும் முதலே மாயவன் தந்திரத்தால் அரவானைக் களப்பலி கொடுத்தது துவக்கம் துரியோதனனை யுத்ததர்மம் மீறி வீமன் நாபிக்கும் கீழ் அடித்துக் கொன்றதுடன் முடிவடைந்த யுத்தத்தில் எத்தனை யுத்ததர்மங்களை இரு பகுதியாருமே மீறினார்கள்’ (சிவநாயகம்.செ,2007)

‘அப்பாடல்களைத் திருத்துவதற்காக திரு.சி.ஜெயசங்கர் அவர்களும், நானும், கூத்தில் பல அனுபவங்களைப்பெற்ற பல அண்ணாவிமார்களும், மூத்த கூத்துக் கலைஞர்களும் பல பண்டிதர்களும் ஒருமித்து இருந்து ஒவ்வொரு பாடல்களையும் ஆராய்ந்து தேவையான திருத்தங்களைச் செய்து இக்கதையை மீளுருவாக்கிய செயற்பாட்டின் மூலம் உருவானதே சிம்மாசனப்போர் என்ற வடமோடிக் கூத்தாகும்’ (சிவநாயகம்.செ,2007) சீலாமுனைக்கூத்து மீளுருவாக்கத்தில் பங்குபற்றிய கூத்துக்கலைஞர் சி.விஜேந்திரன் என்பவரின் பதிவு ‘கூத்த நல்லா ஆடினா பாடினா மட்டும் போதாது அதில சொல்லப்படுற விசயங்களையும் கவனிக்கொணும் என்று விளங்கி கூத்தை மாத்தியமைப்பமே என்று எல்லாரும் சேர்ந்தம். கூத்தில மாற்றம் செய்யிறதெண்டுறது கூத்த கூத்தில்லாம செய்யிறதில்ல. கூத்திர அடிப்படைய மாத்தாம, அதேநேரம் கட்டாயம் மாத்தவேண்டிய கருத்துக்களை மாத்தி மீள உருவாக்கிறதுதான் அது’, ‘நம்ம வழமையா ஆடிவார கூத்தைப் பார்த்தா, அதில ஒருசில சாதியினரை உயர்த்தியும் ஒருசில சாதியினர குறைச்சும் பார்க்கிற நிலைமையிருக்கு. உதாரணமா கூத்தில வாற பறையர் பாத்திரத்த எடுத்துப்பார்த்தா, குடிச்சி வெறிச்சித்து ஏதோ புலம்பிற இழிவான பாத்திரமாத்தான் சொல்லியிருக்காங்க. நாமளும் அதையே திரும்பத் திரும்ப ஆடிவந்திருக்கம். நாங்க எல்லாப் பாத்திரத்தையும் போல பறையர் பாத்திரத்தையும் கௌரவமான ஒன்றா மீளுருவாக்கினம். இதேபோல பெண்களை அடக்கி ஒடுக்கி அவங்கள ஒரு பொம்மையா நடத்துறது. அவங்கள பாலியல் பண்டமா சித்தரிக்கிறது, ஆண்கள் தங்கட விருப்பத்திற்கேற்ப நடத்துறதுதான் கூத்திலயும் இருக்கு. ஆம்பிளயலே கூத்துக்கள அதிகம் எழுதினது, பொம்பிளப் பாத்திரங்களைக்கூட அவங்களே ஆடி வந்ததால இப்பிடிச் செய்ய லேசா இருந்திருக்கு போல. நாங்க இப்பிடியான விசயங்களை கதைச்சி விளங்கி பொருத்தமா மீளுருவாக்கினம்’ (விஜேந்திரன்.சி,2012) இவ்விதமாக முன்மொழியப்பட்டு ஆக்கபூர்வமான விளைவுகளைக் கொண்டுவந்த கூத்து மீளுருவாக்கமானது பேராசிரியர் சு.வித்தியானந்தன் முன்னெடுத்த நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட செயற்பாடு என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகின்றது. இவ்விடத்தில் பேராசிரியர் கே.என் பணிக்கர் வலியுறுத்தும் கருத்து கவனத்திற்குரியதாகின்றது.

‘கலை இலக்கிய நடவடிக்கைகளில் பங்கேற்பது என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளாமல் பண்பாட்டு நடவடிக்கைகளின் அனைத்திலும் இடதுசாரிகள் பங்கேற்க வேண்டும். கலாசார தலையீட்டிற்கும், கலாசாரத்தில் தலையிட்டு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் இடையேயான வேறுபாடுகளை முதலில் கண்டறிதல் அவசியம்’ (பணிக்கர்.கே.என்,2006) எனவே கூத்து மீளுருவாக்கம் என்ற சொல்லினுடாக முன்மொழியப்படும் கலாசாரத்தில் தலையிட்டு மாற்றத்தைக் கொண்டுவரும் ஆய்வறிவு நடவடிக்கையினைப் பற்றிப் புதிய தலைமுறையினர் தெளிவாக விளங்கிக் கொள்வதைச் சிக்கலாக்கும் விதத்தில் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் கூத்து மீளுருவாக்கம் என்று கதையாடல்களைப் புனைவதானது காணப்படுகின்றது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. இது புலமைத்துவ நேர்மை குறித்து எம்மைச் சிந்திக்க வைக்கின்றது. பாரம்பரிய அரங்க அறிவியல் வரலாற்றில் கூத்து மீளுருவாக்கத்தின் திரிபுபடுத்தல்கள், திரிபுபடுத்துனர்கள் குறித்து பதிவாக்கத்தையும் செய்கின்றது.

இத்தகைய திரிபுபடுத்தல் நடவடிக்கையில் இணைந்துகொண்ட விமர்சகராகவே திரு சமுத்திரன் (பேராசிரியர் என்.சண்முகரெத்தினம்) அவர்கள் தன்னுடைய ‘மௌனகுருவின் கூத்த யாத்திரை – கொண்டதும் கொடுத்ததும் – நூல் விமர்சனம்!’ எனும் தலைப்பிலான கட்டுரை ஊடாகத் தன்னை வெளிக்காட்டுகின்றார். குறிப்பாக ஈழத்துக் கூத்தரங்க ஆய்வறிவியலில் கருத்தியல் வித்தியாசங்களும் வாத விவாதங்களும் நடைபெறுகின்றன என்பது பற்றித் தெரிந்திருந்தும், கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆராய்ச்சியினூடாக முன்மொழியப்பட்டுள்ள கருத்துநிலை சார்ந்து அடிப்படைப் புரிந்து கொள்ளல்கள் எதுவுமின்றி, ஈழத்துக் கூத்து ஆய்வு வரலாற்றில் மீளுருவாக்கம் என்ற சொல்லின் முன்மொழிவு குறித்து எந்தவித ஆராய்ச்சியும் இன்றி, ஆய்வறிவு மற்றும் கருத்தியல் தளங்களில் சொற்களின் அரசியல் பற்றிய பிரக்ஞை எதுவுமின்றி திரு சமுத்திரன் அவர்கள் தன்னுடைய விமர்சன உரையில் கூத்து மீளுருவாக்கம் எனும் சொல்லை நிறையவே பயன்படுத்தியுள்ளார்.

‘இங்கே கூத்தில் மௌனகுருவுக்கு ஆர்வத்தை, அறிவை, கூத்தாடும் ஆற்றலை ஊட்டிய மட்டக்களப்பு அண்ணாவிமாரையும் கூத்தின் மறுமலர்ச்சிக்கும் மீளுருவாக்கத்திற்கும் நூலாசிரியரின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்களித்த பேராசிரியர்களையும் வேறு பல கலைஞர்களையும் சந்திக்கிறோம்.’, ‘இவ்வாறு கூத்துக் கலையைப் பயின்று அதில் திறமை மிக்கவராக வளர்ந்த மௌனகுரு அந்தக் கலையின் முற்போக்குரீதியான மீளுருவாக்க விருத்திக்கும் பரவலுக்கும் தான் ஆற்றிய பங்கினை விவரமாகப் பதிவிடுகிறார். நிலப்பிரபுத்துவ, சாதிய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் கூத்து மரபினைக் கேள்விக்குள்ளாக்கி முற்போக்குச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் வகையில் புதிய உள்ளடக்கங்களைக் கொண்ட கூத்து நாடக மரபின் மீளுருவாக்கத்தின் முன்னணிப் பங்காளிகளில் ஒருவர்.’, ‘மௌனகுருவின் கூத்துக்கலை மீளுருவாக்க நடைமுறையை நோக்குமிடத்து அவர் ஒரு திறந்த மனப்பாங்குடன் ஒரு இயங்கியல்ரீதியான கோட்பாட்டின் ஒளியில் செயல்படுவதைக் காணுகிறோம்.'(சமுத்திரன், 2021)
குறிப்பாக ‘கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பிரிவினால் மேடையேற்றப்பட்ட மீளுருவாக்கக் கூத்துகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை. அவற்றின் பிரதிகளையும் நான் பார்த்ததில்லை. ஆயினும் ஈழத் தமிழரின் கூத்துக்கலையின் மீளுருவாக்கம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன என்பதில் சந்தேகமில்லை.’ (சமுத்திரன், 2021) என்று கூறியபடி ஒருபக்கத்துக் கருத்துக்களை மாத்திரம் கவனத்திற்கொண்டு திரு சமுத்திரன் அவர்கள் மீளுருவாக்கம் தொடர்பாகக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளமையானது உள்ளுர்க் கலை மரபுகள் தொடர்பாக அறிவின் அதிகாரத்தில் உள்ளவர்கள் அவைபற்றிய ஆராய்ச்சி எதுவுமின்றி கருத்துக்களைக் கட்டமைக்கலாம் என்ற துணிவைக் கொடுக்கும் முதலாளிய சர்வாதிகாரத் தன்மைமிக்க புலமைத்துவ விமரிசன மரபின் நீட்சியாகவே உள்ளது எனலாம்.
து.கௌரீஸ்வரன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More