Home உலகம் ஊடகவியலாளரது அரசியல் ஆசை : அவரது ரீ.வி. நிகழ்ச்சி பறிபோனது!

ஊடகவியலாளரது அரசியல் ஆசை : அவரது ரீ.வி. நிகழ்ச்சி பறிபோனது!

by admin


பிரபல ஊடகவியலாளர்கள் தேர்தல் காலங்களில் அரசியலில் குதிக்கப் போவதாகச் செய்திகளைக் கசியவிடுவதுண்டு.பரபரப்புக்காக அல்லது தங்கள் செல்வாக்கை,அதன் பிரதிபலிப்புகளை அறிவதற்காகச் சிலர் அவ்வாறு கதை விடுவதும் பின்னர் அவர்களாகவே அதை மறுத்து அறிக்கை விடுவதும் புதிதல்ல.


பிரான்ஸில் தீவிர வலதுசாரியான ஊடகவியலாளர் எரிக் செமூர் அதிபர் தேர்த லில் போட்டியிட ஆசைப்பட்டதால் தனது பிரபலத்துக்குக் காரணமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இருந்து தூக்கப்பட்டிருக்கிறார்.


எரிக் செமூர் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்ற பல செய்திகள் அண்மைய நாட்களாக வெளியாகி அரசியல் தரப்புகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அவரும் லேசாக அதனைஒப்புக் கொண்டார். அவரது விருப்பத்தைஅறிந்துகொண்ட இளம் ஆதரவாளர்கள்
தேர்தல் செலவுக்கு நிதி சேகரிக்கவும் தொடங்கிவிட்டனர். பாரிஸ் நகரில் அவரது படத்துடன் தேர்தல் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.இன்னமும் தனதுதீர்மானத்தை அவர் முறைப்படி அறிவிக்
கவில்லை. அதற்குள் தனது தொலைக் காட்சி நிகழ்ச்சியில் எதிர் அரசியல் தரப்புகளைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்.


பிரான்ஸில் Le Conseil supérieur de l’audiovisuel என்ற ஒலி மற்றும் காட்சிஊடக அதிகாரசபை எரிக் செமூரின்நடவடிக்கைகளைக் கண்காணிக்கத்தொடங்கியது.அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தனது தனிப்பட்ட அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்துகிறார்
என்று அதிகாரசபை கருதுகிறது.


செமூரின் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகின்ற’சி நியூஸ்’ (CNews) தொலைக்காட்சியின் நிர்வாகம் அதிகாரசபையின் அழுத்தத்தை அடுத்து எரிக் செமூரைக் குறிப்பிட்ட அந்த அரசியல் விவாத நிகழ்ச்சியில் இருந்து நீக்கியுள்ளது. லட்சக்கணக்கான பார்வையாளர்களைக்கவர்ந்த அந்த நிகழ்ச்சிக் களத்தை அவர் இழக்க நேரிட்டுள்ளது.


63 வயதுடைய எரிக் செமூர்(Éric Zemmour)பிரான்ஸில் மரீன் லூ பென்னை விஞ்சிய தீவிர தேசிய வலதுசாரியாக அடையாளப்படுத்தப்பட்டவர். ‘லூ பிஹாரோ'(Le Figaro) என்ற வலது சார்புப் பத்திரி
கையின் பத்தி எழுத்தாளரான அவர்தேசிய அரசியல் விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கின்ற தொலைக்காட்சிநிகழ்ச்சிகள் ஊடாகப் பல லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்தவர்.


காட்சி ஊடகம் மூலமாக வெளிநாட்டுக் குடியேறிகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கடும் வாய்மொழித் தாக்குதல்களை நடத்தி வருபவர். இனவாதம் கக்குகின்ற அவரது உரையாடல்கள் மனித உரிமை பேணுவோரால் அடிக்கடிக் கண்டிக்கப்படுவதுமுண்டு. புதிய தாராளமயமாக்கல் (neoliberalism) கொள்கைகளால் பிரான்ஸ் நாடு அருகிமறைந்து வருகிறது. இன்னும் சில காலத்தில் அது வெளிநாட்டுக் குடியேறிகளதுதேசமாகவே விளங்கும் – என்று எரிக்செமூர் தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். “பிரான்ஸ் மிகவும் அவலமான நிலையில் உள்ளது. எனது விருப்பத்துக்குரிய பிரான்ஸ் மறைந்துபோய்க் கொண்டிருக்கிறது” – என்று அவர் அடிக்கடிக் கூறிவருகிறார்.


2022 ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும்அதிபர் தேர்தலில் மக்ரோனும் மரீன் லூ பென்னும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்று கணிப்பிடப்படுகிறது. ஆனால் மரீன் லூபென்னைத் தோற்கடிப்பதை இலக்காகக் கொண்டே எரிக் செமூர் காய் நகர்த்திவருகின்றார்
எனச் சொல்லப்படுகிறது. அவர் தேர்தல்களத்தில் இறங்கும் பட்சத்தில் தீவிரவலதுசாரிகளுக்கு ஆதரவான வாக்குகள்இரண்டாகப் பிளவுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மரீன் லூ பென்னின் கனவுகளுக்கு அது பலத்த பின்னடைவை உருவாக்கலாம்.மரீன் லூ பென்னுக்கு மாறாக வேறு ஒரு வேட்பாளர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறநேர்ந்தால் அது மக்ரோனின் வெற்றிவாய்ப்புக்கும் சவாலாகிவிடலாம்.


எது எவ்வாறாயினும் எரிக் செமூர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கடைசி நேரத்தில் அறிவித்துவிட்டு மீண்டும் ஊடகப் பணிக்கே திரும்பிவிட்டால் இந்தக் கணிப்புகள் பொய்த்துவிட
லாம்.


(படம் :பாரிஸ் நகரில் தேர்தல் விளம்பரப்
பலகைகளில் செமூரின் படத்துடன் கூடியதேர்தல் சுவரொட்டிகள்)

குமாரதாஸன். பாரிஸ்.
14-09-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More