உலகம் பிரதான செய்திகள்

அணு நீர்மூழ்கி ஒப்பந்த விவகாரம்: தூதர்களைத் திருப்பி அழைத்தது பிரான்ஸ்! நெருக்கடி வலுக்கிறது!

(படம் :பிரான்ஸின் வெளியுறவுத்துறைஅமைச்சர் Jean-Yves Le Drian)

பிரான்ஸுக்கு வழங்க இருந்த அணுநீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பு ஒப்பந்தத்தை திடீரென அமெரிக்காவிடம் ஒப்படைத்த அவுஸ்திரேலியாவின் செயல் பாரிஸில்அரச உயர்மட்டத்தில் பெரும் அதிருப்திஅலைகளை உருவாக்கி உள்ளது.

ஒப்பந்தத்தை அமெரிக்காவிடம் கைமாற்றுவது குறித்து பிரான்ஸிற்கு எந்த வித முன்னறிவித்தலையும் அவுஸ்திரேலியா வழங்கவில்லை என்றும் இந்த விவகாரத்தில் ஆஸி அரசின் திடீர் குத்துக்கரணம் பிரெஞ்சுத் தரப்பினரை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கி விட்டிருக்கிறது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவும் தனது நேச அணியான பிரெஞ்சுத் தரப்புக்கு அறிவிக்காமலேயே நீர் மூழ்கி கப்பல் ஒப்பந்தத்தை மிக ரகசியமாகத் தனது கைக்குப் பறித்தெடுத்துக் கொண்டுள்ளது.இரண்டு நேச நாடுகளாலும் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்கின்ற பிரான்ஸ் இது”முதுகில் குத்துவது போன்ற ஒருசெயல்” என்று காட்டமாகக் கருத்து வெளியிட்டிருக்கிறது.

அதன் எதிரொலியாக அவுஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளுக்கான தனது தூதர்களை பாரிஸ் திருப்பி அழைத்திருக்கிறது. அரசுத் தலைவரது உத்தரவின்படி இருநாடுகளுக்கான தூதர்களும் திருப்பிஅழைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-இவ் லு ட்ரியன்(Jean-Yves Le Drian)நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கிறார்.

ஒப்பந்தத்தை அமெரிக்காவுக்கு வழங்கும் முடிவை அவுஸ்திரேலியப் பிரதமர் கடந்த புதனன்று காலையிலேயே பிரான்ஸின் அதிபருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினார் என்று ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கு அணு நீர்மூழ்கிகளைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தை அதிபர் பைடன் மறுநாள் வியாழக்கிழமை வெள்ளை மாளிகை செய்தியாளர் மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தனக்குக் கிடைக்கவிருந்த ஒப்பந்தம் கைமாறியதுபற்றி பைடன் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்பதற்கு பிரான்ஸுக்கு ஓரிரு மணி நேர அவகாசமே இருந்தது என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா – அவுஸ்திரேலியா இரு நாடுகளினதும் இறுதி நேர செயற்பாடுகளால் ஏமாற்றப்பட்டதான உணர்வு பாரிஸ் தரப்பிடம் மிக ஆழமாகக் காணப்படுகிறது. தனது முக்கியமான வெளியுறவுத் தீர்மானங்களில் ஜரோப்பிய ஒன்றியத்தை விலத்தி முடிவுகளை எடுத்த முன்னாள் ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கையையே பைடன் நிர்வாகமும் பின்பற்றுவதை இந்த விவகாரம் எடுத்துக் காட்டுவதாக பிரான்ஸ் கருதுகின்றது.

மேற்கு நாடுகளுக்குள் இவ்வாறு ராஜதந்திர மட்டங்களில் பெரும் நெருக்கடிஏற்படுவது மிக அரிதான நிகழ்வாகும். அதிகரித்துவருகின்ற சீனாவின் செல்வாக்குகளை எதிர்கொள்வதில் மேற்குநாடுகள் தங்களுக்குள் அணி பிரிவதை இந்த நெருக்கடி எடுத்துக் காட்டுவதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள தனது தூதர்களை பிரான்ஸ் திருப்பியழைப்பது இதுவே முதல் முறை ஆகும் வோஷிங்டனில் பிரெஞ்சுத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமெரிக்க-பிரான்ஸ் நட்புறவைக் குறிக்கும் விழா ஒன்று ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் எழுச்சியை எதிர்கொள்ளவதற்கான உத்திகளில் ஐரோப்பாவை விலக்கி விட்டு நேரடியாக அப்பிராந்தியத்தில் அவுஸ்திரேலியாவுடன் கைகோர்த்துச் செயற்படுவதற்கு அமெரிக்கா அவசரப்படுகிறது.

அதற்காக “ஐந்து கண்கள்”(FiveEyes) என அழைக்கப்படும் ஆங்கிலமொழி பேசும் ஐந்து நாடுகளின் புலனாய்வுக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதும் அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது. ஜந்து கண்கள் (FiveEyes) என்பது அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, அமெரிக்கா, பிாித்தானியா ஆகிய ஐந்து நாடுகளது உளவுத்துறைக் கூட்டணி ஆகும்.

பிரான்ஸின் கைக்குக் கிடைக்கவிருந்த மிகப்பெரும் நிதி வருவாயுடன் தொடர்புடையஅணு நீர்மூழ்கி ஒப்பந்தம் கடைசி நிமிடத்தில் கைநழுவியதற்குப் பின்னால் இந்த”ஐந்து கண்கள்” கூட்டணியின் செயற்பாடுகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

———————————————————————

பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.