Home இலக்கியம் மலையக கூத்துக்களின் வளர்ச்சியில் பொன்னர்சங்கர் கூத்து ஓர் அறிமுகம் ரவிச்சந்திரன் சாந்தினி.

மலையக கூத்துக்களின் வளர்ச்சியில் பொன்னர்சங்கர் கூத்து ஓர் அறிமுகம் ரவிச்சந்திரன் சாந்தினி.

by admin

இலங்கைக்கு குடிபெயர்ந்த மலையக தோட்ட தொழிலாளர்கள் தங்களது உழைப்பை மட்டும் இங்கு கொண்டு வரவில்லை. தமது பாரம்பரிய கலைகளையும் இங்கு கொண்டு வந்தனர். சமீப காலம் வரை இக்கலைகள் எம்மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருந்தன. அவர்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டன. காலையில் எம்மவர்களை துயில் எழுப்ப ‘காலை தப்பு’ அதன் பின்னர் வேலைத்தளத்திற்கு செல்வதற்கு ‘பிரட்டுத்தப்பு’. வேலை முடிந்து வீடு செல்வதற்கு மாற்று ஓசையுடன் கூடிய தப்பு. காவடியாட்டம், கரகாட்டம், திருவிழாக்கள், சமயக்கிரியைகள், சடங்குகள் போன்றவற்றிற்கு வெவ்வேறு சுருதி கொண்ட தப்பு. இப்படியாக பதினாறு வகை தப்போசைகள்.

மேலும் மாலை மயங்கி இரவு தொடங்கிவிட்டால் தொழிலாளர் வாழும் லயங்களில் ஏதாவது ஒரு காம்பிராவில் ஒருவர் மகாபாரதம், நல்லத்தங்காள் கதையை ராகத்துடன் வாசிக்க மற்றவர்கள் சூழ்ந்திருந்து இரசிக்கும் காட்சி அன்றிருந்தது. சமய உணர்வும், கேளிக்கையும், உடற்பயிற்சியும், சிலம்பாட்டம், கோலாட்டம், கும்மி, கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், இவற்றைவிட உடுக்கு, சங்கு, தண்டை இன்னோரன்ன மலையகத்திற்கே உரிய ஆட்டங்களும் வாத்தியங்களும் மக்கள் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துள்ளன.
“அர்சுனன் தபசு, பொன்னர் சங்கர் கூத்து, காமன்கூத்து” என மாசிபிறந்து விட்டால் கூத்துக்கள் குதூகலிக்கும். காலை முதல் மாலைவரை வேலை செய்து கலைத்துப்போன உடலுக்கும் உள்ளத்திற்கும் வெண்சாமரை வீசுவதாக இக்கூத்துக்கள் இடம்பெறுகின்றன. ஒருவர் தன்னை மறந்து இவ்வாறான கலையில் தன்னை ஈடுபடுத்தி இன்பம் காணும் வேட்கையாகவே இக்கூத்துக்கள் காணப்படுகின்றன.

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் காணப்பட்ட அடக்கு முறைகளும் கெடுபிடிகளும் உழைப்புக்கேற்ற ஊதியமின்மையாலும் அதிகம் பாதிக்கப்பட்டு துன்பக்கேணியில் கிடந்துழன்ற தொழிலாளர்களுக்கு மன ஆறுதலையும் மகிழ்ச்சியையும் வாழ்க்கையில் நம்பிக்கையையும் அளித்தவை நாட்டாரியற் கூறுகளேயாகும். தொழிலாளர்கள் தம் முன்னோரிடமிருந்து பெற்றுக்கொண்ட விலைமதிக்க முடியாத பெரும் சொத்து இவையாகும். மலையக தொழிலாளர்கள் வெந்துழன்ற போதும் மலையகத்தில் அடிக்கடி இடம்பெறும் செயல்களினால் வெகுவாக பாதிக்கப்பட்டப் போதும் தம் முன்னோர் அளித்த அரும் செல்வமாகிய நாட்டாரியற் கூறுகளை பேணிப்பாதுகாப்பதில் முனைப்பாக நிற்றல் மனந்திறந்து பாராட்டத்தக்கதாகும்.

இந்நாட்டாரியற் கூறுகள் தாலாட்டுப்பாடல்கள், தொழிற்பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், கரகம், காவடி, கும்மியாட்டம், கோலாட்டம் என நீண்டு செல்கின்றன. இந்நாட்டாரியற் கூறுகளில் ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான பண்புகளும் சுவையும் எம்மவர்களிடம் இழையோடிருப்பது நாட்டாரியலின் வெற்றியாகும். அந்த வகையில் இந்நாட்டாரியற் கூறுகளில் ‘கூத்துக்கள்’ பெற்றுள்ள இடம் தனித்துவமாக காணப்படுகின்றமை, கூத்துக்கள் மலையக மக்களிடத்தில் பெற்றுள்ள செல்வாக்கினை எடுத்தியம்புகின்றன.

இனி மலையகத்தில் கூத்துக்களின் வளர்ச்சியையும் அது பெற்றிருக்கும் செல்வாக்கினையும் எடுத்து நோக்கும் போது இந்நாட்டின் நாகரீகத்தையும் பண்பையும் உயிர்ப்பையும் ஓங்கி வளர்த்த பெருமை கிராமங்களுக்குரியது. கிராமங்கள் இயற்கைக்கு மிக அருகாமையில் இருக்கின்றமையால் அவை வாழ்வில் என்றும் உயிரூற்றுடன் நெருங்கிப் பிணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய கிராமங்களில் வாழும் மக்களால் வளர்க்கப்பட்ட அழகிய கலைகளே கிராமிய கூத்துக்களாகும். இவை பொதுமக்களின் விலைமதிக்க முடியாத பெறும் சொத்தாகும்.
கூத்து என்பது நாட்டுப்புற கலைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. அதிக ஒப்பனைகள் இன்றி திறந்த வெளி அரங்குகளில் கிராமிய கூத்துக்கள் நடைபெறும்.

ஆதிகால மனிதன் நாளாந்தம் தான் செய்து வந்த தொழிலை ஓய்வு பெற்ற நேரங்களில் அபிநயங்களோடு செய்து பார்க்க முற்பட்டான். அபிநயத்தோடு கூடிய தொழிலானது கூத்தாக உருப்பெறலாயிற்று. இக்கூத்துக்கள் கிராமிய மக்களின் வாழ்க்கை வரலாற்றையும், மக்களின் மனப்பாங்குகளையும், சமய அடிப்படையிலான கொள்கைகளையும் வெளிக்காட்டுகின்றன. இவ்வாறு கூத்து நிகழ்த்துபவர்களை ‘கூத்தாடிகள்’ என்றுஅழைத்தனர்.

‘கூத்தாடிகிழக்கேபார்ப்பான்
கூலிக்காரன்மேற்கேபார்ப்பான்’

மேற்படி பழமொழி கூத்துக்கள் விடியும் வரை நடைபெறுவதையே உணர்த்துகின்றது. ஓர் இரவை மக்கள் இனிதாக கழிக்கக் கூடியதாகவே கூத்துக்கள் ஒழுங்கு செய்யப்படும். மலையகத்தில் காமன்கூத்து, பொன்னர் சங்கர், அருச்சுனன்தபசு, இராமர் கூத்து, மதுரைவீரன் போன்ற பல்வேறு கூத்துக்களும் காணப்படுகின்றன. இவற்றில் மலையகத்தில் பெரிதும் பிரபல்யம் அடைந்து வரும் கூத்து காமன்கூத்தாகும். ஏனையவை அனைத்தும் வழக்கொழிந்து வருகின்றவையே. அந்நியரின் பிடியில் சிக்கி துவண்டிருந்த மலையக தொழிலாளர்களுக்கு இக்கூத்துக்கள் பெரிதும் தமது இன்னல்களை மறந்து சற்று நேரம் இன்பத்தில் லயித்து இளைப்பாறும் ஆசனங்களாகவே காணப்பட்டன. இவ்வாறு வளர்ச்சியடைந்து வந்த இந்த கூத்துக்கள் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெற்று வந்தன. ஆனால் பிற்பட்ட நவீனமயமாக்கல், நகரமயமாக்கல் மோகத்தினால் மக்களுக்கு கூத்துக்களின் பால் ஈடுபாடு அருகியே வருகின்றது. அந்தவகையில் அருகிவரும் கூத்துக்களில் ஒன்றாகிய பொன்னர் சங்கர் கூத்தை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகின்றது.

கூலித்தொழிலுக்காக வந்த மக்கள் தாம் வாழ்ந்த கிராமங்களின் சாதியமைப்பிற்கேற்ப கலை, கலாசார பண்பாடுகளையும் தம்முடன் கொண்டு வந்தனர். இவ்வகையில் இம்மக்கள் தம் வாழ்வோடு இணைந்த கூத்துக்களில் ஒன்றான பொன்னர் சங்கர் கூத்தினையும் கொண்டுவந்தனர். இக்கூத்தானது தமிழகத்தில் இடம் பெற்ற கூத்தினை அடியொட்டியதாகவும் மலையகத்திற்கே தனித்துவமானதாகவும் காணப்படுகின்றது.

கிருமக்கொலையிலே முதல்முதலில் இக்கூத்து ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து வந்தவரான அழகன் என்பவர் தன் வறுமை காரணமாக இக்கூத்துப் பாடல்களைப் பாடி ஆடிக்கொண்டு லயன்கள் வழியாக அரிசி, காசு வாங்கிக் கொண்டு வந்த போது அங்குள்ள மக்கள் அதன்பால் ஈர்க்கப்படவே சில பெரியவர்களும் இளைஞர்களும் இதனை முன்னின்று நடத்தினர் எனவும் அவரையே ஆசிரியராக கொண்டு ஆட்டங்களையும் பாடல்களையும் கற்று 1946 – 1949 காலப்பகுதியிலே முதன்முதலில் இக்கூத்தாட்டாத்தினை ஆரம்பித்ததாகவும் கூறுகின்றனர்.

இனி பொன்னர் சங்கர் கதையை எடுத்து நோக்கும் போது இக்கூத்தினை அண்ணன்மார் கதை அல்லது அண்ணன்மார் வரலாறு என்றும் அழைப்பதுண்டு. பொன்னரும் சங்கரும் இக்கூத்தின் கதாநாயகர்களாக அமைவதால் இருவரதும் பெயரைக்கொண்டு இக்கூத்து அழைக்கப்படுகின்றது. இவர்களது வாழ்க்கை வரலாறும் வீர தீர செயல்களும் இக்கூத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளன. இப்பொன்னர் சங்கர் கூத்தில், காமன் கூத்தில் காமனை வழிப்படுவது போல பெரியசாமி எனும் தெய்வம் வழிபடப்படுகின்றது. இக்கூத்தானது 16 அங்கமாக ஆடப்படுவதுண்டு. ஏனெனில் சிவனருளால் தவமிருந்து பெற்றெடுத்த பொன்னரும் சங்கரும் 16 வயது வரையிலேயே வாழ்நாளை கொண்டிருந்தனர் என்பதனாலாகும். இக்கூத்தின் வாயிலாக அவதாரக் கோட்பாடுகள் பற்றிய ஐதீகங்கள் விளக்கப்படுகின்றன. இக்கூத்தானது ஆலயத்திற்கு அண்மையிலுள்ள சூழலிலோ மைதானத்திலோ ஆடப்படுவதுண்டு. இக்கூத்தில் ஆடுபவர்களுக்கு அணிவிக்கப்படும் ஆடையணிகள் வடமோடி, தென்மோடி கூத்துக்களினை ஒத்தது. பொன்னர் சங்கர் கூத்தினை நோக்கும் போது அதன் கதையமைப்பானது அவலச்சுவையுடன் அங்கதச் சுவையும் கொண்டிருப்பதால் அதனை அவலமும் அங்கதமும் நிறைந்த நாடகமாகக் கொள்வது பொருத்தமுடையதாகும். இக்கூத்தில் வேளாளர் என்று ஒரு சமூகத்தின் பரம்பரைக்கதை இலையோடிக் கிடப்பதை அவதானிக்கமுடிகின்றது.

பொன்னர் சங்கர் கூத்து மூன்று கட்டங்களாக பிரித்து ஆடப்படுகின்றது. கதையின் முதற்கட்டமாக பிள்ளைப் பேரின்றி வருந்தும் குன்றுடையின் கவுண்டன், தாமரை நாச்சியார் தம்பதியினருக்கு பிள்ளை வரம் வேண்டி தாமரை நாச்சி மர உச்சியில் மேற்கொள்ளும் பெரும் தவத்தினை சித்தரிக்கின்றது. தாமரை பெரும் தவம் செய்கின்றாள். மாயவர் காரணமறிந்து சிவனிடம் கேட்கவே சிவன் வீரபுத்திரனிடம் பிள்ளைப்பேறு உண்டாவதவன் விசாரித்ததன் பின் பொன்னர், சங்கர், அருக்காணி ஆகிய தங்காள் பிறப்பு இடம்பெறுகின்றது.

இக்கதையினை பின்வரும் பாடலைப்பாடி குத்துவிளக்கேற்றி திரைத்திறப்பு செய்து ஆரம்பித்து வைப்பார்கள்.

‘மாரிமுன்னநம்பினேன்
மாரிஉன்னநம்பினேன்
தாயேஉன்னநம்பினேன்
சரஸ்வதிதாயேஉன்னநம்பினேன்
தாயேஉன்னநம்பிகரிசலுக்குவாரேன்……”

இவ்வாறு பிறப்பு இடம்பெற்றதுடன் சோழர் ஆண்பிள்ளைகள் இருவரையும் கொல்வதற்கு சதி செய்து திடீரென பொன்னரும் சங்கரும் காணாமற் போகின்றார்கள். தங்கா மாத்திரம் பெற்றோருடன் வளர்ந்து வரும் வேளையில், பொன்னரையும் சங்கரையும் வீரப்புறக்காடு எனும் காட்டிலேயே எடுத்து வந்து பொன்னி வளநாட்டில் வளர்ந்து வந்தனர். ஐந்து வருடங்களின் பின் காட்டில் விடப்பட்ட பொன்னரும் சங்கரும் ‘வையமலை’ என்பவருடன் சேர்ந்துக்கொண்டு தமது தாய் தந்தையரை தேடிவந்து வாழ்கின்றனர். பின் தமது மாமனாரான மாயவரின் ஏபாட்டிலே நன்னாட்டு பட்டினத்திலுள்ள நல்லையா கவுண்டரின் இரு புதல்விகளான கொழுந்தாய், கொழுந்தம்மா ஆகிய இருவரையும் முறையே பொன்னரும், சங்கரும் மணமுடித்துக் கொள்கின்றனர். பின்பு பொன்னரும் சங்கரும் தாம் மணமுடித்த பெண்ணுடன் வாழாது வையமாலையுடன் சேர்ந்துக் கொண்டு மூவரும் காட்டு வேட்டைக்கும் புறப்பட்டு விடுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் சோழ ராஜன் குன்னடையான் கவுண்டரையும் தாமரையாளயும் சூது செய்து கொன்று விடுகின்றான். அவ்வேளையில் தனித்திருக்கும் தங்காளின் புலம்பலைக் கேட்டு பொன்னர், சங்கர், வையமாலை ஆகிய மூவரும் நாடு திரும்பி தம் பெற்றோர்களுக்கு கிரியை செய்ய வருகின்றனர். மாமனான மாயவர் சந்தனக் கட்டைகள், குங்குமக்கட்டைகள் அடுக்கி மைத்துனருக்கும் தங்கையாருக்கும் கோடி போடுகின்றார்.

பொன்னர் தலைசிரைக்கு கொல்லி வைக்க சங்கர் கைசிரைக்கு கொள்ளி வைக்கிறான். தங்காளின் தனிமையை போக்க பொன்னர் செம்பகுல ஆசாரியிடம் சொல்லி பொற்கிளி ஒன்றை கொடுக்கின்றான். அது பேசாமலும் பாலும் பழமும் உண்ணாமல் இருக்கவே உடைத்து எறிகின்றான். இதனால் சங்கர் கிளி வேண்டுமா என கேட்க அவள் தனக்கு பிடித்த கிளி 60அடி கம்பத்தின் உச்சியில் இருப்பதாகவும் அதைப் பிடித்து தரவும் கூறுகின்றாள். சங்கரும் வையமாலை மாயவரும் சென்று கஸ்டப்பட்டு கிளி பிடித்து கொடுக்கின்றனர். இத்துடன் இரண்டாம்பாகம்முடிகின்றது.

மூன்றாவது பாகத்தில் படுகளமாரும் பொன்னர் சங்கர் பங்காளிகள் இவர்களை பலி வாங்க காளியின் உதவியுடன் சூது செய்கின்றனர். பின்பு சோழராஜன் சூழ்ச்சியுடன் மாயவன் என்பவனுடன் சூதாட வைக்கின்றான். சங்கர் அச்சூதாட்டத்தில் தோல்வியுறவே அவனை விலங்கிடுகின்றான். பின்பு சங்கரை ஏமாற்றிய சோழராஜன் பொன்னரையும் பலிவாங்க எண்ணி செம்பகுல ஆசாரியைப் பயன்படுத்துகின்றான்.

மூன்றாவது பாகத்தில் படுகளமாரும் பொன்னர் சங்கர் பங்காளிகள் இவர்களை பலி வாங்க காளியின் உதவியுடன் சூது செய்கின்றனர். பின்பு சோழராஜன் சூழ்ச்சியுடன் மாயவன் என்பவனுடன் சூதாட வைக்கின்றான். சங்கர் அச்சூதாட்டத்தில் தோல்வியுறவே அவனை விலங்கிடுகின்றான். பின்பு சங்கரை ஏமாற்றிய சோழராஜன் பொன்னரையும் பலிவாங்க எண்ணி செம்பகுல ஆசாரியைப் பயன்படுத்துகின்றான்.
பொன்னரிடம் சென்று ஆசாரியார் அரசரின் பொன்மரக்காய் ஒன்றினை வைத்திருக்க கொடுத்துவிட்டு தான் கொடுத்தது தங்க மரக்காய் என்று கூறி அதனை கேட்கின்றான். இதனை திருப்பி கொடுக்க முடியாத பொன்னர் செம்பகுல ஆசாரியை கொலை செய்து விடுகின்றான். அதே வேளைதானும்இறந்துவிடுகின்றான்.

பொன்னரின் மரணத்தையறிந்த சங்கரின் கைகளில் கட்டப்பட்டிருந்த விலங்கு தானாகவே தெரித்து விழுகின்றது. பின்பு சங்கர் பொன்னர் இருந்த இடத்திற்கு வரும் போது மறைவில் இருப்பவரை சங்கர் போருக்கு அழைக்க அப்போது சங்கர் பொன்னர் போன்றோரது பிறவிக்காலமான ஆறு வருடங்கள் முடிந்து விட்டதாக மாயவரின் குரல் கேட்கின்றது.அதையடுத்துசங்கரும்இறக்கின்றார்.தமையன்மார் இறந்ததை அறிந்த தங்காள் அவ்விடத்திற்கு சென்று பார்க்க பொன்னர், சங்கர் மனைவிகள் தம்மை தீயிட்டுக் கொள்கின்றனர். அப்போது தங்காள் கண்ணீர் மல்க அழுவதை இவ்வாறு பாடல் மூலம் கூறுகின்றார்கள்.

‘செத்துநல்லமடியிராராம்
இன்னக்கிமாண்டுநல்லமடியிராரோ
செத்துநல்லமடியிராராம்
அங்கேஉக்கிறியேபரனம்மாறி
வெசத்தண்ணிதான்அறிஞ்சி
இந்தமாயரோடகாலத்தில்
மாண்டுநல்லமடியிராளே
அங்கேபொன்னர்சங்கர்மாண்டு
நல்லமடியிரானே…’

இவ்வாறுதங்காள்புலம்புகின்றாள்.

‘நான்என்னசெய்வேன்
எங்கண்ணன்மாரே
நான்ஏதுசெய்யபோரேனோ
அண்ணாநீங்கமாண்டுநல்லமடிந்திட்டிங்க
நீங்கசெத்துநல்லமடிந்திட்டிங்க
அண்ணாதெய்வத்தோடபோயிடிங்க…’

இதன் பின்பு தங்காள் தவசி மரத்தில் ஏறி ஈசனை நினைத்து தவம் செய்கின்றாள். தங்காள் தவமிருக்கும் கம்பம் மீது பட்சிகள் பறக்கும் வரை இவளது தவம் தொடரும். பட்சியைக் கண்ட பின்பு இறங்கி வந்து ஆற்றில் மூழ்கி ஈறத்துணியுடன் வந்து இறந்து கிடப்பவர்களுக்கு தண்ணீர் தெளித்து எழுப்பும் காட்சியுடன் இக்கூத்து முடிவடைகின்றது. இவ்வாறு தங்காள் தன் அண்ணன் இருவரையும் உயிரெழுப்பும் போது

‘வாருங்கடிஎங்கஅண்ணம்மாரே
வரிசையாகசென்றிடுவோம்
எங்கஅண்ணராலேபாக்கவல்லம்
வாருங்கஅந்நிமாரே…’

என பாடுவர். இக்கதை முடிவுறும் போது பின்வரும் பாடலுடன் முடிவடைகிறது.

‘நான்பாடியிடும்பாட்டிலேதான்
பறந்துவந்தேன்நேந்திடாம
ஆடுகிறஆட்டதிலஅலுப்பேதும்
தங்காநேர்ந்திடாம
எங்ககாட்சிநல்லகொடுத்திடாதே
கடக்கவேதங்காள்நின்டுறாதே
இந்தப்பாரித்தங்கம்முடியமட்டும்
பக்கத்துணைதங்காநிக்கனுமே
எங்கவீரப்புலகாளியம்மா
எனக்குபக்கத்துணைதாயிநிக்கனுமே
எங்கமந்திரத்தகண்டவருஎங்கமாமுனியே
நீங்க நிக்கனுமே…’

பொன்னர் சங்கர் கூத்தின் இன்றைய நிலையும் பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டிய முறையும்

இற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து இலங்கையின் மலைநாட்டுப் பகுதிகளுக்கு குடிபெயர்க்கப்பட்ட மலையக தோட்டத் தொழிலாளர்கள் தங்களது உழைப்போடு தமது பாரம்பரியத்தின் தொடர்ச்சியான அறிவியல், தொழிநுட்பம், வழக்காறுகள், நம்பிக்கைகள், மொழி, பழக்கவழக்கங்கள், கலைகள், கூத்துக்கள், வழிபாடுகள், என எல்லாவற்றையும் சுமந்தே வந்துள்ளனர்.

பிரித்தானியர் ஆட்சியில் காணப்பட்ட அடக்கு முறைகளும் நிகழ்ந்தேறிய கொடுரங்களும் மலையக மக்களை மீள முடியாத துன்பம் நிறைந்த அடிமை வாழ்க்கைக்குத் தள்ளியது. அதன் பெருந்தாக்கத்தை இன்றுவரையிலும் நாம் காணலாம். இன்றும் பலரது கண்களுக்கு நாம் விருந்தாளிகளே! இப்படியான நெருக்கடி மிக்க சூழலிலும் மலையக மக்கள் தமது பாரம்பரிய கலைகளை தமக்கு ஆறுதல் அளிக்கும் அடையாளங்களாக அன்று தொட்டு இன்று வரையிலும் போற்றி பாதுகாத்து வருகின்றனர் என்பது கவனிப்பிற்குரியது.

உலகமயமாக்கலின் விளைவாலும் நவகாலனித்துவம் மற்றும் தொழில்நுட்ப உலகின் தாக்கத்தாலும் சமூக மக்களின் சிந்தனை, செயற்பாடுகளில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளமை தற்கால நிதர்சன உண்மையாகும். காலனித்துவ ஆதிக்க சிந்தனையிலிருந்தும், முதலாளித்துவ பொருளாதார ஆதிக்கத்திலிருந்தும் விடுபட முடியாதவனாக காணப்படும் மனிதரின் சிந்தனை மற்றும் வாழ்வின் கூறுகளில் புத்துணர்ச்சியூட்டும் தன்மையாகவும், மக்களது பொழுது போக்கிற்காகவும் தமது பாரம்பரிய தன்மையை சிதைவடையாமல் பாதுகாப்பதற்காக தனியன்களாகிக் கொண்ட மனிதர்களின் சமூகமயமாக்கல் செயற்பாட்டோடும் இக்காலத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும் பாரம்பரிய கூத்தரங்கு இன்றியமையாததாக காணப்படுகிறது.

சமூகத்துடன் சேர்ந்து வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அதற்கான பங்களிப்பு முறை வழங்குவது குறைவாகவே காணப்படுகின்றது. ஆற்றுகை முறையில் பங்குபற்றுவது, திறந்த வெளி அரங்கில் அளிக்கை செய்தல் போன்றவை இன்றைய சமூகத்திடம் மிக குறைவாக காணப்படுகின்றது.
இலக்கிய முறையிலும் கல்வி முறையிலும் கலை வடிவங்கள் அறியப்படுவதாக மாறி வருகின்றது தவிர, ஆற்றுகை முறையில் நேரடியான பார்வை, அனுபவம், ரசித்தல், பங்குபற்றல் குறைந்தே வருகின்றது. இதனை பொக்கிசமாக பாதுகாக்க வேண்டும். அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பாரம்பரிய கலை வடிவங்களினை சரியாக அறிந்து முறையாக கற்று ஆற்றுகை முறையில் முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

நவீனமயமாக்கத்துடனான சினிமா, சின்னத்திரை நாடகங்கள் இன்று வலுப்பெற்று உள்ளதுடன் எமது பாரம்பரிய அடையாளமான வாழ்வியல் கலைகளினை கைவிட நேர்ந்துள்ளன. மலையக மக்களின் பாரம்பரிய கூத்துக் கலையினை மேல் கொண்டுவர வேண்டும். உலகறியப்பட செய்ய வேண்டும். காலனிய ஆதிக்கத்துடன் ஒரு நாட்டில் இருந்து வந்து இலங்கையில் மலைநாட்டு பகுதியில் குடியமர்த்தப்பட்டு அவர்களோடு வந்த கலை வடிவமான சடங்கு, கூத்துக் கலையினை அழியாது பேணிப்பாதுகாத்து வந்தமை வரவேற்கத்தக்கதாகும்.

இன்றைய சூழலில் நவீனமயமாக்கத்தின் விளைவாழ் வலுவிக்கப்பட்ட நிலை காணப்படுவதுடன் மீண்டும் மீளுருவாக்கப்பட வேண்டும். கல்வி முறையில் உள்ள ஏனைய கலையான பரதநாட்டியம் கர்நாடக சங்கீதம் என்பவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்தினை ஏன் நாம் எம் மலைவாழ் மக்களின் அடையாளமாக மிக சிறப்பிக்கப்பட வேண்டிய கூத்துக் கலையினையும், எம்மவர் கலையினையும் கற்க கூடாது? அதனை அளிக்கை முறையில் மீண்டும் மீளுருவாக்க வேண்டும். ஆய்வுகள், கல்வி முறையில் மாத்திரம் பார்க்காமல் திறந்த வெளி அரங்கு ஆற்றுகை அளிக்கை முறையில் மீளுருவாக்கப்பட வேண்டும். இன்றைய காலனித்துவ சூழலில் மனிதர்கள் ஒவ்வொருவரும், தனக்கானதொரு ஆக்கத்திறன் மற்றும் அறிவுப்பின்புலம் இல்லாதவர்களாக உருவாகி வருகின்றனர். இவ்வாறான காலனித்துவ சிந்தனையின் விளைவாக எமது கல்விமுறை, கலாச்சாரம், மொழி, கலை, பாரம்பரிய சடங்கு, விளையாட்டு, பொழுதுபோக்கு, சிந்தனை, வழிபாட்டு முறை போன்றவற்றில் பெரும் தாக்கம் செலுத்தியுள்ளது. சிந்தனையளவில் நாமும் கறுப்புத்தோல் போர்த்தியுள்ள வெள்ளையர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஒரு சமூகம் அழிந்து விடாமல் நிலைப்பதற்கு அச்சமூகத்தின் கலை கலாசாரம், பண்பாடு ஆகியன பாதுகாக்கப்பட வேண்டும். அச்சமூகத்தின் தனித்துவம் பேணப்பட வேண்டும். இல்லையெனில் அச்சமூகம் காலப் போக்கில் தனது அடையாளத்தை இழந்து விடும். தமது மூத்த தலைமுறையினர் தமக்கு அழித்த அரிய செல்வங்களான கலைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்க வேண்டியது தமது தலையாய கடமை என்பதனை மலையகத்தின் இளந்தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும். மலையக தலைமைகள் அக்கறையுடன் செயற்பட்டு கலைமன்றங்கள் கூத்துக்களை நடாத்துவதற்கும் இளந்தலைமுறையினருக்கு கொண்டு செல்ல பள்ளிகள், பயிற்சி பட்டறைகள், பாசறைகள் என்பனவற்றை வளர்த்துவிட வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் ‘நாடகமும் அரங்கியலும்’ பகுதியின் ஊடாக மலையக கூத்துக்களையும் பாட நெறிகளாக உள்வாங்கப்பட வேண்டும். மலையகத்தில் கூத்துக்கள் இடம்பெறும் தோட்டங்களில் உள்ள கலைஞர்களை கௌரவித்தும் கலையை வளர்த்தெடுக்கக் கூடியதான பொருட்களையும் வழங்க வேண்டும். தவிர இவ் இனத்துக்கென அடையாளப்படுத்தக்கூடிய இக் கூத்து கலைகளை வளர்த்தெடுக்க இளைஞர் யுவதிகளை இணைத்த புதியதொரு சமுதாய கட்டமைப்பினை உருவாக்க வேண்டும்.

எனவே மேல் உள்ளவற்றை தொகுத்து நோக்கும் போது மேற்கூறிய காரணங்களுடன் அவற்றினை செயற்படுத்தக் கூடியதுமான திட்டங்களை நடைமுறைப்படுத்துவோமாயின்; பிற்காலத்தில் இச்சமூகத்தின் அடையாளங்கள் சிதைந்து போகாமல் இவ் இளைய தலைமுறையினருக்கும் எதிர்கால மலையக சமூகத்திற்கும் எமது சமுதாயத்தின் பாரம்பரிய அடையாளங்களை எடுத்து செல்ல ஏதுவாய் இருக்கும்.

எனவே உலகமயமாக்கலில் உலகம் சுருங்கினாலும் விஞ்ஞான அறிவியல் தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சியடைந்திருந்தாலும் இன்று எம் சமூத்தின் அடையாளமாகவும், கலாசாரத்தின் குறியீடாக உயிர்ப்போடு விளங்கும் பாரம்பரிய சடங்கு, கூத்து கலைகளினை போற்றுவதோடு அழியாமலும் சிதைவடையாமலும் பாதுகாத்து வலுப்பெறச் செய்ய வேண்டும்.

அத்துடன் நாளைய சந்ததியினருக்கு விட்டுச்செல்லும் பொக்கிஷமான அடையாளமாக காணப்படுவதுடன் பாரம்பரிய வாழ்வியல் கலையான சடங்கு, கூத்துக் கலைகளினை பாதுகாத்து எதிர்காலத்திற்கு அளிக்கை முறையாக ஒப்படைக்க வேண்டிய தற்கால சமூகத்தினரான எம் அனைவரினதும் தலையாய கடமையாகும். ஆவணப்படுத்து முறையாக மாத்திரம் இருந்துவிடாது அளிக்கை முறையின் ஊடாக நேரடியான அனுபவத்தினையும் பங்குபற்றுதலினையும் ஏற்படுத்திக் கொடுப்போம்.

ரவிச்சந்திரன் சாந்தினி
நுண்கலைத்துறை விசேடகற்கை
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More