இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

சீல் உடைத்தார் – பலவந்தமாக திறந்தார்- ஜீவன் தொண்டமான்!

ஹட்டன்- டிக்கோயா நகரசபைக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமை தொடர்பில், சீல் வைக்கப்பட்ட ஹற்றன்- டன்பார் பிரதேசத்திலுள்ள உடற்பயிற்சி கூடமொன்று, தோட்ட
வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் சீல்
உடைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஹற்றன்- டிக்கோயா நகர சபை மூலம் நிர்வகிக்கப்படும் ஹற்றன்- டன்பார் மைதானத்தின்
நடத்திச் செல்லப்படும் உடற்பயிற்சி நிலையத்திலிருந்து இந்த வருடத்துக்கான வரி,
செலுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் இதற்கமைய, நகர சபை நிதிக் குழுவில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இந்த நிலையத்தை சீல் வைத்து மூட நேற்று முன்தினம் (18.10.21) நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், 1இலட்ச ரூபாய் வரியை செலுத்திய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,
நேற்று முன்தினம் இரவே இந்த உடற்பயிற்சி நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற நகர சபையின் அதிகாரியொருவர், அங்கிருந்த அடையாளம்
தெரியாத நபர் ஒருவரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இது தொடர்பில் நாளை (21.10.21) நகர
சபையின் தவிசாளரிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த
அதிகாரி தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் கருத்துரைத்த நகர சபையின் தவிசாளர் எஸ். பாலச்சந்திரன், “குறித்த
உடற்பயிற்சி நிலையத்தை வரி முறையின் கீழ் பெற்றுக்கொண்ட நபர், இந்த வருடத்துக்கான
எவ்வித வரியையும் செலுத்தியிருக்கவில்லை. இதற்கமைய, நகர சபை நிதிக்குழு கூட்டத்தில் இந்த நிலையத்தை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீல் வைப்பதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நபருடன் பல தடவைகள் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் பலனளிக்காத நிலையில், அந்த நிலையத்துக்கு சீல் வைத்தோம். எனினும் சீல் வைத்து மூடப்பட்ட அன்றிரவே இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலையிட்டு, ஒரு இலட்சம் ரூபாய் வரியை செலுத்தி அதனை திறக்க நடவடிக்கை எடுத்தார்” எனவும் குறிப்பட்டுள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றால் உடற்பயிற்சி நிலையம் மூடப்பட்ட காலப்பகுதிக்கான வரியை குறைக்குமாறு அதனை நிர்வகிக்கும் நபர் கோரிக்கை விடுத்தால், அது தொடர்பில் மத்திய மாகாண ஆளுநரின் ஆலோசனையைப் பெற்று, ஏதாவது சலுகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த சம்பவத்தின் போது பெண் அதிகாரி ஒருவரே சம்பவம் இடத்துக்குச் சென்றதாகவும் இதன்போது, குறித்த அதிகாரியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல் பட்டாசுகள் கொளுத்தி அவரை அவமானப்படுத்தி உள்ளனர் என ஹற்றன் ஒருங்கிணைந்த வர்த்தகர்கள் குற்றம் சுமத்தினர்.

ஜீவன் தொண்டமானின் இந்த அராஜக சம்பவத்தை ஹற்றன் வர்த்தகர்கள் கடுமையாக
கண்டிப்பதாகவும். இந்த சம்பவத்துக்கு உடனடியாக விசாரணை வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் இ.தொ.காவின் இப்படியான அராஜக அடாவடி செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது எனவும் ஹற்றன் ஒருங்கிணைந்த வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.