இலக்கியம் பிரதான செய்திகள்

யாசகன் -‘கூலித்தாய்’ – ‘செல்லரித்த புத்தகம்’ முல்லையின் ஹர்வி.

யாசகன்

சந்தியின் தெருமுனையில்
குப்பைத் தொட்டியொன்று,
எஞ்சிய உணவுகளை
மோப்பம் பிடித்தபடி – தெருநாய்கள்

குட்டைக் காற்சட்டை,
கருமை தீண்டிய நீலச் சேட்டு,
ஆங்கதில் கிழிசல்கள் பல,
முகத்தை மறைப்பதாய்
முடிபடர்ந்து இருந்தது.
உக்கல் ஆடைக்குள் மறைந்திருக்கும்
இவன் – கனத்த சோகங்களை யாரிங்கு அறிவர்.

வயதொன்றும் பத்தைக்
கூடக் கடந்திருக்காது
நெளிந்த தட்டொன்றுடன்
ஓரிரு ரூபாய்காய் காத்திருக்கிறான்.
தெருவோரம் கிடந்த
குப்பைத் தொட்டியருகில்…

ஈக்களும் கொசுக்களும்
அவன் – உற்ற நண்பர்கள்..
வானும் தரையும் அவன்- வசிக்கும் வீடு
காற்று அவன் – போர்க்கும் போர்வை

யாரும் தொட்டுப் போகாத,
குப்பைத் தொட்டியில் கைவிட்டு உண்பான்.
ஈக்கள் மீதம் விட்ட எச்சில் உணவுகளை…

வழியெங்கும் வீசப்பட்டெறிந்த
ஒற்றைச் செருப்பை, காலில் சுமந்தபடி
கையேந்தி நிற்கிறான்..
கணப்பொழுதில் மாறும்
நாளிகையை கணக்கெடுக்க மறந்தவனாக,

தட்டில் கிடந்த சில்லறைகள்
தாளம் போட்டபடி வருபவர் போபவரிடம்
பிச்சை கேட்கும் – காரணம்
குரல் எழுப்பா ஊமை அவன் என்பதனால்

வேறு இடம் போக வந்த என்னிடம்
கையெடுத்துக் கும்பிட்டான்
ஏதேனும் தரச் சொல்லி..
நான் சேர்த்த சில்லறையில்
பத்து ரூபாயை தட்டுக்குள்
போட்டு விட்டு நகர்ந்தேன்

வேறு என்ன நான் செய்ய
அவனைப்போல் நானும்……………….!!!!

(முல்லையின் ஹர்வி)

‘கூலித்தாய்’
(அவளைப்போல் எத்தனை தாய்கள்……. !!!!

இரவு பகலற்று அவள் மட்டும்
உழைத்துக் கொண்டிருக்கிறாள்
பக்கத்து வீடுகளில் கோழிக் குழம்பு மணக்க
இவள் வீட்டில் மட்டும் முற்றிய முருங்கைக்காயும்
சோறும் தான் அதுவும் நாள்
ஒரு வேளை மட்டும் வயித்தை நனைப்பதற்கு!!

அதிகாலை மூன்று மணிக்கே
அவள் அலாரம் அடித்துவிடும்
படிப்பதற்கு பிள்ளைகளை எழுப்பி விட்டு
சாயத்தண்ணியை சக்கரைக்கட்டியோடு
கடித்துப் பருக கொடுத்தவளாய்
ஒரு சில்வர் தண்ணி மட்டும் தன்
தொண்டை வறட்சிக்கு ஊற்றி விடுவாள்!!!!!!!!!!!!!

இருக்கும் அரைப்பேணி
அரிசியில் புக்கையை காய்ச்சி விட்டு,
புக்கைக்கு விட்ட புளிஞ்ச
தேங்காய்ப் பூவில் சம்பலும் பிசைந்திடுவாள்
அந்த இடையிலும் நித்திரை தூங்காமல்
படியுங்கோ என செல்லமாய் அதட்டிவிட்டுப் போவாள்

அவள் வயிறுமட்டும் வெறுமயாய் இருக்கும்
முகத்தை கழுவிப்போட்டு சாப்பிடுங்கோ
எனக்கு நேரமாயிட்டுது நான் வெளிக்கிடப்போறன்
ஆறுமணிக்காச்சும் போகோணும்
இல்லாட்டி வாற ஐஞ்சூறும் வராது….
கையில் மண்வெட்டி தலையில் தொப்பியோடு
வேகமாய் புறப்படுவாள் தினக் கூலிக்காக!!!!!!!!!!!!!!!!

கனத்த வெயிலுக்கு நிழலாய் இருக்கும்
வானத்தைப் பார்த்தபடி
பெரு மூச்சு விடுவாள்
அம்மாளாச்சி தாயே…………..எனக்கெப்ப விடிவுகாலம் ????
பக்கத்திலிருக்கும் அம்மன் கோயிலில்
மூன்று கைவிரல் எடுத்து நெற்றியில்
சாத்தி விட்டு வேப்பிலை நெட்டெடுத்து
இடுப்பில் செருகிக் கொண்டு
வேகமாய் நடந்திருவாள் வீரத்தாய் போல !!!!!!!!!!!

வெட்ட வெயிலது
வெறுதரையில் காற் செருப்பற்று
சூட்டில் வெந்த பாதக் கொப்பளங்களுடன்
மண் தோண்டிக் கொண்டிருப்பாள்
மரவள்ளிக் கட்டை நட………..!!!!!!!!

கன்னத்தில் நீரங்கே வழிந் தோடிப் போக,
குணிந்து சோட்டியால் துடைத்து விடுவாள்.
அவள் சோட்டி தூக்கும் வரை
பாத்துக் கொண்டு நிப்பான் போல,
பொல்லாத வெருளிக்காரன்.
வேலையைச் செய் வேலையைச் செய்…
முழியை வெளியே பிதுக்கி,
முறைத்துப் போவான்
அவளை நோட்டம் விட்டபடி..
மறுபடியும் மரவள்ளி பாத்திக்கு
வரம்பு கட்டத் தொடங்குவாள்
பிஞ்சுத் தோடங்காயினை
புளி போக கரைத்துக் கொண்டு
காத்தில்லா கரியல்
சைக்கிளில் நானும் தங்கச்சியும்………
அம்மா…….!!!!!!!!!!!
ஒடுங்கிய கன்னத்துப் பள்ளத்து கிடையிலும்
திரும்பிப் பார்த்து சிரிப்போடு வருவாள்…..
சைக்கிள உப்பிடி புளிய மரத்தடியில
சாத்திப்போட்டு நில்லுங்கோ,
வெயிலுக்க வந்தால் கறுத்துப் போவியள்
லேசாகச் சொல்லி முடித்து
வேகமாய் எங்களிடம் வருவாள்
வேயில் சூட்டில் சுருங்கிய தன் முகத்தை
கணக்கெடுக்காதவளாய்……..

வெளிக்கிட்டுப் போனால்
வெள்ளைக் காரர் மாரித்தான்
என்ர பிள்ளையள் இருக்கோணும்
அடிக்கடி அவள் சொல்லும் போது
தைக்க இடமில்லாத
அவளின் கிழிஞ்ச சோட்டி
ஞாபகம் வந்து போகும்

இந்த வெயிலுக்க ஏன் வந்தனிங்கள்…….
பின்னேரம் நான் வந்து சாப்பிட்டிருப்பன்
சீனி இல்லை எப்பிடிக் கரைச்சனிங்கள்
உப்பு போட்டம்மா..
இதில ஆளுக்காள் கொஞ்சம் குடியுங்கோ
களைப்பா இருக்கும் வெயிலுக்க வந்நதது
தொப்பிய ஒராள் போடுங்கோ
கைத்தெறிவாய்க்கு கிடக்கு
தலையில வைச்சுக் கொண்டு
கெதியாய் போங்கோ
புழுதிக் காத்துப் பட்டால்
சளி தடிமன் வந்திடும்
வேலையை முடித்துக் கொண்டு
வேகமாய் வந்திருவாள்
அவள் வரும்வரை படலையில் பாத்திருப்போம்

கிடைத்த ஐஞ்சூறுக்கு
ஒரு கிலோ அரிசியும்
ஐம்மது கிறாம் கருவாடும்
ஆளுக்கொரு இனிப்பும்……
அம்மா பள்ளிக் கூடத்துக்கு காசு வேணும்
தாறன் அப்பு !!!!!!!!!!!

ரீயுசன் காசு சரஸ்வதி பூசைக் காசு
கன்ரீனுக்கு கொம்பு வனிஸ்
காசெண்டு எத்தனைய கேட்டிருப்பம்
இல்லை எண்டாமல்
இருக்கிற மிச்சத்தில் பிரிச்சுத் தருவாள்

வந்ததும் வராததுமாய் முகம்
கைகாலை அலம்பிப்போட்டு
எங்களை குளிக்க வாத்து
உடுபெல்லாம் அலம்பி
வேலிக்கரையிலே காயவிடுவாள்
பச்சை பாம்பு போல
வேலியில் நின்ற கிளுசூரியா
காத்துக்கு ஈரம் உறிஞ்சும்
அந்த உடுப்பில் இருந்து…..

மண்ணெய் குப்பிவிளக்கை பற்றித்தருவாள்
போய் படியுங்கோ !!!!!!!!!!!!
கோடிக் கரையில் படுத்திருந்த
கோடாலியை எடுத்துக் கொண்டு
குப்பி விளக்கொடு முற்றத்தில்
நின்ற காய்ந்த பனை தறிக்கப் போவாள்
அடுப்புக் கொள்ளிக்கென

அரிசியை ஆக்கிக் கொண்டு,
கருவாட்டைச் சுட்டு வைப்பாள்,
நேற்றுக் கிடந்த சூடு காட்டிய பருப்புக் கறியோடு…..
நிலா வெளிச்சம் காட்ட
முற்றத்தில் வட்டமாய் அமர்ந்திருப்போம்
அவளின் திரள்ச்; சோறு உண்பதற்காய்

எங்கள் வயிறு நிறைய
நாலஞ்சு பருப்பு பருக்ககையோடு
கிடந்த அடிச்சட்டிக்குள்
எஞ்சிக் கிடந்த அடிப்பிடிச்ச சோத்தை
வழிச்சு பிரட்டி வாயில் வைக்க
தூரத்தில் நிண்ட குட்டி நாய்
தானும் இருப்பதாக
ஓரிரண்டு தரம் குலைத்து விட்டு
வாலை ஆட்டி முனகியபடி வந்து நிற்கும்..
இரண்டு வாயைத் திண்டுவிட்டு
மிகுதியை நாய்க்குப் போட்டு விடுவாள்
தேங்கிக் கிடந்த சட்டிபானைகளைப் பொறுக்கி
அலசி வெளியில் கிடந்த சிறாம்பித்
தட்டின் மேல் பரப்பி விடுகிறாள்

வீட்டுக்குள் போய்
தகரத்தில் தட்டுக் கட்டி
தொங்கிக் கொண்டிருந்த
தன் கணவனின் படத்தைப் பார்க்கிறாள்
கண்ணீர் வடிந்து கீழே
படுத்திருந்த பிள்ளைக்கு மேல்…
அம்மா மழையம்மா…
இல்லை படு அப்பு…. ஒண்டும் இல்லை
நாளை அவளுக்காய்
நாங்கள் இருக்கிறோம் என்ற பெருமிதத்துடன்
அழுகையை அடக்கி
சிந்திய மூக்கைத் துடைத்துவிட்டு
பாயை விரித்துக் கொண்டு
குப்பி விளக்கை அணைக்கிறாள்
மறு நாள் விடிந்தாகும் என்று………..

(முல்லையின் ஹர்வி)

‘செல்லரித்த புத்தகம்’

நானே பறக்கிறேன் !!! நான் மட்டுமே பறக்கிறேன்
இருள் சூழ்ந்த என் வானத்தை நோக்கி,
உயிரற்ற இறகுகளை,
அகல விரித்துக் கொண்ட வண்ணத்துப்பூச்சியாக….
வெளியிலே வேறெந்த அலங்காரங்களும் இல்லை,
மனம் மட்டும் பல வர்ண ஜாலம் காட்டியதாய்,
நானே பறக்கிறேன் !!! நான் மட்டுமே பறக்கிறேன்
அன்றொருநாள் நான் சென்ற
பள்ளியின் பாதைச் சுவடுகளின்
கனவுகளை மீளச் சுமந்தபடி……….

புத்தகம் வைக்கத் தந்த
பையும் கிழிந்து தைக்க இடமில்லை என்றாகிற்று
பள்ளிக்கு நடந்து போகும்
பல மைல் தூரம் வரையில்,
முதுகுச் சுமை கூடி
பைக்கு வெளியே
கணிதப் புத்தகம் ஊர்வலம் பார்த்து வரும்….

வெளிறிய வெள்ளைச் சட்டைக்கு
நீலம் போட வசதியில்லை
கரும்பையன் கறை எண்டு
அதற்கு மட்டும் குறையில்லாமல்…

எண்ணைவாரித் தலை பின்ன
உடைந்த பல்லுச் சீப்பு மட்டும் இருக்கும்
பின்னி மடித்துக்கட்ட
வாழை நாரைத்தவிர வேறோன்றும் இருக்காது

கிடக்கும் பழங்கஞ்சியில் பசி போக்கி விட்டு
பள்ளிக்குப் புறப்படுவேன்
ஆறுமணி ஆயிற்றென்று…..

சட்டத்தில் இடம்பிடிக்க
திட்டம் தந்த சப்பாத்தில்
முட்களின் அணிவகுப்பு
ஒற்றைக் காட்டுப் பாதை என்றால்
அவை இல்லாமல் இருக்காது

வேர்வை வழிந்தொழுகி
கரிச்சட்டியில் தொட்டு வைத்த
பொட்டும் கரைந்து போகும்
துடைக்கத்தான் இருக்கே
வெள்ளைச் சட்டையின் கழுத்துப்பட்டி

ஓட்டமும் நடையுமாய் போகிறேன்
ஒன்பது மணிக்காச்சும் பள்ளிக்குப் போகோணும்
தாமதம் எண்டு மைதானச் சிரமதானம்
எனக்கு மட்டும் நாள் தவறாமல் நடக்கும்

நான் போகும் வரை முழுதும்
பதுங்கியிருந்த மதுக்கூட்டம்…..

ஏதேதோ சஞ்சல சத்தத்துடன்,
ஒருமுறை திரும்பிப் பார்க்கிறேன்..
பற்றைக்குள் பதுங்கியிருந்த
பூனைகளின் கைகளுக்குள் என் பிஞ்சு உடல்
நகத்தால் கிழிக்கப்பட்டு
இறக்கைகள் உடைந்த இரத்தப் பெருக்குடன்
ஆடைகள் களைக்கப்பட்டு
அந்தரங்கம் சுவைக்கப்பட்டது
எச்சமாய் வீசப்பட்டடேன்
ஓநாய்களின் சித்திரவதைக்காக

புழுக்கள் தம் தீன்களுக்காய்
உடற்சதைத் துண்டங்களை
மண்ணுக்குள் புதைத்துக் கொண்டன
மிஞ்சிய எலும்புகளை
குட்டை நாயொன்று காவி;ச் சென்றது
தடங்கள் எதுவும் இல்லை !!!!!!!
வீசப்பட்ட புத்தகங்கள் மாத்திரம்
கறையான்கள் அரித்துக் கொண்டிருந்தன
(அநாதையான என்னைத் தேடியார் வருவார்……!!!!!!!!!!!!!!!!

(முல்லையின் ஹர்வி)

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.