இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

இலங்கைக்கு எதிராக, ICCயில் முதலாவது வழக்கு தாக்கலானது!

மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இலங்கையின் பல மூத்த அதிகாரிகளை “விசாரணை செய்து உரிய நேரத்தில் கைது செய்ய” தலைமை வழக்கறிஞருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) ஒரு முக்கிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இலங்கையில் பாதிக்கப்பட்டு, பிரித்தானியாவில் வழுகின்ற 200 தமிழர்கள் சார்பாக Global Rights Compliance LLPயால், ரோம் சட்டத்தின் 15 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டள்ளது.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய மற்றும் பலர் உட்பட இலங்கையின் பல சிரேஷ்ட அதிகாரிகள், “கடத்தல்கள், சட்டவிரோத காவலில் வைத்தல் மற்றும் சித்திரவதை போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பாதிக்கப்பட்ட தரப்பினர் எதிர்கொண்ட துன்புறுத்தலின் தீவிரம் இலங்கையை விட்டு வெளியேறி பிரித்தானியாவில் தஞ்சம் அடைவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


தவிரவும்“இதைத் தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் கமல் குணரத்ன தலைமையிலான இலங்கை பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் துன்புறுத்தல் கொள்கைகளின் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான உரிமையை இழந்தனர். இலங்கையில் தங்கியிருக்கும் தங்கள் அன்புக்குரியவர்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களாலும், பிரித்தானியாவில் தங்களை நோக்கித் தொடரும் கண்காணிப்பு, மற்றும் துன்புறுத்தல்களாலும் தொடர்ந்து அவதிப்படுகின்றனர்.” எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.


இந்த குற்றங்கள் ஐசிசியின் ஒரு பகுதியான இங்கிலாந்து எல்லைக்குள்ளும் ஓரளவு பொருந்தும் என்றும், பிராந்திய அதிகார வரம்பைப் பயன்படுத்த சர்வதேச நீதிமன்றம் அனுமதிக்கிறது என்றும் வழக்கில் கொடிட்டுக் காட்டப்பட்டள்ளது.


இதுபோன்ற வழக்கு ஒன்றை ஐ.சி.சியில் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். அத்துடன் இதேபோன்ற சமர்ப்பிப்பை பிரித்தானிய பெருநகர காவல்துறையின் போர்க்குற்றக் குழுவிடமும் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்துள்ளனர்.


இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் பாரிய அட்டூழியங்களுக்குக் காணமானவர்களைக் விசாரணை செய்வதில் இலங்கை அரசாங்கம் மற்றும் பிற சர்வதேச நீதி முயற்சிகளின் தோல்விக்குப் பின், பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட- உயிர் பிழைத்த தமிழ் மக்கள், இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து ICCக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.


எவ்வாறாயினும், ICC உலகெங்கிலும் உள்ள ஒரு சில வழக்குகளில் மட்டுமே விசாரணைகளை நடாத்துகின்றது. குறிப்பாக இலங்கை ரோம் சட்டத்தில் ஒரு தரப்பினராக கையெழுத்திடவில்லை. அதனால் இலங்கையில் நடந்த குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்குமா என்பது கேள்வியே.

எனினும் ICC யில் கையெழுத்திடாத மியான்மர் மீதான விசாரணையைத் நடத்துவதற்கு அண்மைய ஆண்டுகளில் நகர்வுகள் மேற்கொள்ளப்படுவது சாத்தியமான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


குறிப்பு-
Global Rights Comliance LLP (GRC) என்பது சர்வதேச சட்டங்கள், குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்டம் (IHL) மற்றும் மனித உரிமைகளுடன் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கானதும், மேம்படுத்துவதற்கானதுமான ஒரு சர்வதேச சட்ட கூட்டாண்மை ஆகும்.


உலகெங்கிலும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் ( IHL) மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கான ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கும் அமைப்பாகும். சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கு ஏற்படும் பாதகமான தாக்கங்களை அடையாளம் காணவும், தடுக்கவும் மற்றும் குறைக்கவும் இந்த அமைப்பு பணியாற்றுகிறது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.