Home இலங்கை இலங்கை தொடர்பில் சாட்சியங்களின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும்

இலங்கை தொடர்பில் சாட்சியங்களின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும்

by admin


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஸ்தாபித்த ரோம் சாசனத்தில் இலங்கை கையொப்பம் இடவில்லை என்ற போதிலும், ஏன், எவ்வாறு, எதற்காக இலங்கை தொடர்பாக பாதிக்கப்பட்ட 200 பேர் முறைப்பாடு செய்துள்ளார்கள் என்பதை 200 பேரின் சாட்சியங்களின் அடிப்படையிலும் மற்றைய சாட்சியங்களின் அடிப்படையிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


-அவர் இன்று சனிக்கிழமை (30) ஊடகங்களுக்கு வழங்கிய கேள்வி பதிலின் போது அவ்வாறு தெரிவித்தார்.-அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு……


கேள்வி:- இலங்கையில் இறுதி யுத்தம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட முன்னாள், இந்நாள் முக்கிய பிரமுகர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட 200 தமிழர்கள் சார்பில்  என்ற Global Rights Compliance LLR (GRC) சட்ட நிறுவனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துநருக்கு சமர்ப்பித்துள்ள ஆவணம் தொடர்பாக உங்கள் கருத்து என்ன? இது சாத்தியமா?


பதில்:- இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்றது இனப்படுகொலை தான் என்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றை இயற்றியுள்ளது.
 இந்த இனப்படுகொலை தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எல்லா தமிழ் கட்சிகளுமே கடந்த காலத்தில் வலியுறுத்தி வந்துள்ளன. அத்துடன், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்றும் எல்லா தமிழ் தேசிய கட்சிகளும் கூட்டாகக் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டு ஐ.நாவுக்கு அனுப்பியுள்ளன


 ஆகவே, இந்த பின்னணியில், Global Rights Compliance LLP (GRC)   செய்திருக்கும் இந்த நடவடிக்கை மிகவும் சரியானதும் அத்தியாவசியமானதும் காலத்துக்குப் பொருத்தமானதும் ஆகும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைத் ஸ்தாபித்த ரோம் சாசனத்தில் இலங்கை கையொப்பமிடவில்லை என்ற போதிலும், ஏன், எவ்வாறு, எதற்காக இலங்கை தொடர்பில் பாதிக்கப்பட்ட 200 பேர் முறைப்பாடு செய்துள்ளார்கள் என்பதை 200 பேரின் சாட்சியங்களின் அடிப்படையிலும் மற்றைய சாட்சியங்களின் அடிப்படையிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும். 


அவ்வாறான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று உரிய சட்டக் கொள்கைகள், கோட்பாடுகள், வாதங்களுடன் இந்த முதலாவது தொடர்பாடலுக்கான ஆவணத்தை முறையாக Global Rights Compliance LLP (GRP)  சமர்ப்பித்துள்ளது என்று நான் நம்புகின்றேன்.


கேள்வி:- இந்த சமர்ப்பணத்தின் அடிப்படையில் அடுத்து என்ன நடைபெறும்?


பதில்:- இலங்கை மீது விசாரணை நடைபெறுமா என்பது தொடர்பில் இப்பொழுது எந்த எதிர்வு கூறலையும் செய்ய முடியாது. ஆனால், சர்வதேச நீதிமன்றம் இந்த ஆவணத்தை பரிசீலித்து எடுக்கவிருக்கும் முடிவிலேயே அது தங்கி இருக்கின்றது. சட்ட கோட்பாடுகளின் அடிப்படையிலும், எதிர்காலத்தில் மீண்டும் ஒரு இனப்படுகொலை இலங்கையிலோ அல்லது உலகின் வேறு எந்த நாட்டிலுமோ நடக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்தக் கோரிக்கையைப் பரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கின்றேன்.


கேள்வி:- இந்த சமர்ப்பணத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?


பதில்:- அவசியமாக செய்யப்பட வேண்டிய ஒரு விடயத்தை நல்ல முறையில்  Global Rights Compliance LLP (GRP) செய்திருக்கின்றது. பாதிக்கப்பட்ட 200 பேரின் சாட்சியங்களின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்திடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.
 ஆகவே, இந்த ஆவண சமர்ப்பணம் வலுவானதாக செய்யப்பட்டிருப்பதாகவே நான் உணர்கின்றேன்.மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் இந்தக் கால கட்டத்தில் அவசியமாகின்றன. இங்கு எமது வட கிழக்கு நிலங்கள் பறிபோகின்றன.


 பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த வணக்கஸ்தலங்கள் பலாத்காரமாக நிர்மாணிக்கப்படுகின்றன. தொல்பொருளியலைத் திரிபுபடுத்தி தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களை சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களாக எடுத்துக் காட்டி பல ஏக்கர் காணிகளை தொல்பொருள் திணைக்களமும் வேறு காரணங்களை முன்வைத்து மற்றும் அரசாங்க திணைக்களங்கள் பலவும் எமது காணிகளைக் கையேற்று வருகின்றன. 

அங்கு வாழும் தமிழ் மக்கள் இராணுவ ஒத்துழைப்புடன் விரட்டி அடிக்கப்படுகின்றனர். சிங்கள குடியேற்றம் தமிழர் தாயகத்தில் துரிதமாக நடைபெறுகின்றன.  இனப்படுகொலையின் பல்வேறு பரிமாணங்கள் இவை. இவ்வாறான விசாரணைகளின் போது தற்போது இங்கு நடைபெறும் விடயங்களும் உண்மையை உலகம் உணர உதவி புரியும். நான் இந்த நடவடிக்கையை முற்றும் வரவேற்கின்றேன். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More