Home உலகம் மலேசியத் தமிழரது மரண தண்டனை: சர்வதேச ரீதியாக எதிர்ப்பு வலுக்கிறது

மலேசியத் தமிழரது மரண தண்டனை: சர்வதேச ரீதியாக எதிர்ப்பு வலுக்கிறது

by admin

மனநிலை பாதித்தவருக்குத் தூக்கா?

சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு புதன்கிழமை நிறைவேற்றப்படவிருந்த தூக்குத் தண்டனையை அந்நாட்டின் நீதிமன்றம் ஒன்று தாமதப்படுத்தியிருக்கிறது. மலேசியாவைச் சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம்(Nagaenthran K.Dharmalingam) என்ற 33 வயதுடைய தமிழருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நிறைவேற்றுவதையே-மேன்முறையீடு ஒன்றை விசாரிக்கும் வரை-தற்காலிகமாகத் தாமதப்படுத்தும்(momentary stay of execution) உத்தரவை சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை விடுத்திருக்கிறது.

மலேசியாவில் இருந்து 43 கிராம் ஹெரோயின் போதைப் பொருளைத்தனது கால் துடைப்பகுதிக்குள் மறைத்து வைத்துக் கடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் நாகேந்திரன் சிங்கப்பூர் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

2010ஆம் ஆண்டு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று-அங்குள்ள கடும் போதைத் தடுப்புச் சட்டங்களின் கீழ் – அவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கியிருந்தது.தண்டனைக்கு எதிராகப் பல தடவைகள் செய்யப்பட்ட மேன்முறையீடுகள் மற்றும் கருணை மனுக்கள் என்பன நிராகரிக்கப்பட்டு வந்தன.

கடைசியாகப் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது தண்டனை புதன்கிழமை நிறைவேற்றப்பட இருக்கிறது. சர்வதேச ரீதியான தலையீடுகளாலும் மனித உரிமைகள் அமைப்புகளது விடா முயற்சியாலும் கடைசி நிமிடத்தில் இறுதி மேன்முறையீடு ஒன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

நாகேந்திரனைப் பாதுகாப்பதற்காக வாதாடி வந்த ரவி என்ற வழக்கறிஞர் அவரது அறிவுசார் குறைபாடுகளைக் (intellectual disabilities) காரணம் காட்டி மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு கோரியிருந்தார்.

மலேசிய நாட்டின்அதிகாரிகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் நாகேந்திரனது அறிவுத் திறன் மிகக் கீழ் நிலையில் (low IQ) இருப்பதைச் சுட்டிக்காட்டி தண்டனையை தவிர்க்குமாறு கேட்டிருந்தனர். ஆனால்சிங்கப்பூர் நீதிமன்றம் முன்னர் வழங்கிய தீர்ப்பில் ” என்ன செய்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டே” அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார் என்பதைஉறுதி செய்திருந்தது.

குற்றம் புரியும் மனநிலையுடனேயே அவர் செயற்பட்டார் என்று முந்திய நீதிமன்றத் தீர்ப்புகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குற்றம் புரிந்த சமயத்திலா அல்லது தண்டனை பெற்ற பிறகா குற்றவாளி மனநிலைப் பாதிப்புக்குள்ளானார்?அவ்வாறு ஒருவர் குற்றம் புரிந்த பிறகு மனநிலைப்பாதிப்புக்கு ஆளாக நேர்ந்தால் அவரைத் தூக்கில் போடுவதைச் சிங்கப்பூர் சட்டங்கள் ஏற்றுக் கொள்கின்றனவா?

இவ்வாறான பல சட்டச் சவால்களை இந்த மரணதண்டனை விவகாரம் எழுப்பியுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றம் நாகேந்திரன் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிவிக்கப்படுவதற்கான ஆதாரங்களைப் பரிசீலிக்கவுள்ளது.

அவை நிராகரிக்கப்பட்டால் திட்டமிட்டபடி மறுநாள் புதன்கிழமை அவர் தூக்கிலிடப்படுவார். போதைப் பொருள் கடத்தி வந்த போது நாகேந்திரனுக்கு வயது 21. அந்த வயதில் போதைப் பொருள் கடத்துகின்ற கும்பல்களின் சதியில் அறியாமல் சிக்குண்டவர் என்றும் அவருக்கு மனநலச் சிகிச்சையும் உதவியும் அவசியமாகின்றது எனவும் அவரது சார்பில் வாதாடுகின்ற சட்டவாளர் ரவி கோரியுள்ளார்.

மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறுகேட்டு சுமார் 60 ஆயிரம் பேர் ஒப்பமிட்டமனு ஒன்று சிங்கப்பூரின் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைத் தூக்கில் போடுவதுசர்வதேச மனித உரிமைச் சட்டங்களால்தடைசெய்யப்பட்டுள்ளது என்று அந்தமனுவில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது

.மிக அரிதான நிகழ்வாக மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி (Ismail Sabri Yaakob) சிங்கப்பூர் பிரதமருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் நாகேந்திரனது தண்டனை விவகாரத்தை”முழுவதும் மனிதாபிமான அடிப்படையில்பரிசீலிக்குமாறு” கேட்டிருக்கிறார்.

மரண தண்டனையை எதிர்க்கின்ற பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட, பல பிரபலங்கள் நாகேந்திரனைக் காப்பாற்றுமாறு சிங்கப்பூர் அரசிடம் சமூக ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

மரண தண்டனையைத் தடுப்பதற்கானஅழுத்தத்தைக் கொடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு ஒன்று ஞாயிறன்று சிங்கப்பூர் சென்றுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

போதைப் பொருள் அற்ற சிங்கப்பூர்என்னும் இலக்கை எட்டுவதற்காக அந்நாட்டின் அரசு போதைக் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனையை வழங்கிவருகிறது. கடைசியாக 2019 இல் ஒருவர்தூக்கிலிடப்பட்டிருந்தார்.

——————————————————————–

குமாரதாஸன். பாரிஸ்.08-11-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More