உலகம் பிரதான செய்திகள்

கிளாஸ்கோ மாநாட்டுத் தீர்மானம் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் பரிசா?

இன்று ஐ. நா. பருவநிலை மாநாட்டின் உச்சக்கட்டம். கால அட்டவணைப்படி மாநாட்டின் நிறைவு நாள் நேற்று வெள்ளிக்கிழமை ஆகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டின் இறுதிவரைபு உண்மையில் நேற்று வெளியிடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் முக்கியவிடயங்களில் நாடுகளின் இணக்கத்தைப் பெறுவதில் ஏற்பட்ட இழுபறிகள் இறுதி நாள் வரை நீடித்து மாநாட்டை இன்று சனிக்கிழமையும் மேலதிக நேரத்தை ஒதுக்கித் தொடர வேண்டிய இக்கட்டை ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்படுத்திவிட்டது.

இறுதி நேர இணக்கப்பாடுகளுக்குப்பிறகு இறுதித் தீர்மான அறிக்கை சில மணி நேரங்களில் வெளியாக இருந்த நிலையில்-மாநாட்டுத் தீர்மானங்களைத் தங்களது நாடுகளின் எதிர்காலத் தலைவிதியை எழுதப் போகின்ற முக்கிய சாசனமாகக் கருதுகின்ற குட்டித் தீவுகளது பிரதிநிதிகள் பரபரப்புடன் காணப்பட்டனர்.

அவர்கள் தாங்கள் எந்த நல்ல முடிவும் இல்லாமல் இங்கிருந்து வெறுங்கையோடுதிரும்ப மாட்டோம் என்று செய்தியாளர்களிடம் கூறியிருக்கின்றனர். கடலில் அமிழ்ந்து போகின்ற ஆபத்தை நாளாந்தம் எதிர்கொள்கின்ற துவாலு(Tuvalu) என்னும் பசுபிக் தீவுக்கூட்ட நாட்டின் சார்பில் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதி, தன்னுடைய மூன்று பேரக் குழந்தைகளுக்கும் இங்கிருந்து நல்ல செய்தியை எடுத்துச் செல்ல முடியும் என்றுநம்புவதாகக் குறிப்பிட்டார்.

“பேரக் குழந்தைகளது எதிர்காலத்துக்கான உத்தரவாதத்தைக் கிளாஸ்கோ மாநாடு வழங்கியுள்ளது என்று என்னால்அவர்களிடம் கூறக்கூடியதாக இருக்கும். அதுவே அவர்களுக்கு இதுவரை நான் வழங்கியிராத மிக உயர்ந்த நத்தார் பரிசாக இருக்கும்”-இவ்வாறு தெரிவித்த செவ் பேனியு (Seve Paeniu) என்ற அந்தப் பிரதிநிதி, தனது மூன்று பேரக் குழந்தைகளினதும் படங்களை மாநாட்டுக்கு எடுத்துவந்திருந்தார்.

பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்குஎடுத்து வைக்கப்படுகின்ற ஒவ்வொருஅடிகளும் தற்போது வளருகின்ற குழந்தைகளினதும் இனிமேல் பிறக்கப் போகின்ற குழந்தைகளினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகின்றன.

கிளாஸ்கோ மாநாட்டு மண்டபத்துக்கு வெளியே உலகெங்கும் இருந்து வந்து திரண்டிருக்கின்ற இளையோர்களின் வலுவான குரல்கள் இதனையே எதிரொலித்தது.சுமார் 200 நாடுகள் கூடி எடுக்கின்ற இந்தகிளாஸ்கோ உடன்படிக்கையில் நிலக்கரி மற்றும் புதைபடிவ எரிபொருள் என்கின்ற பெற்றோலியம் ஆகியவற்றின் பயன்பாட்டினைப் படிப்படியாகக் குறைத்து இல்லாமற் செய்வது என்ற முக்கிய வாசகம் (phasing-out coal and fossil fuel subsidies)முதல் முறையாகச் சேர்க்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எரிசக்தியின் அடிப்படைகளான நிலக்கரியையும் பெற்றோலியத்தையும் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று காலாதிகாலமாகக் குரல் எழுப்பப்பட்டு வந்தாலும் உலக பருவ நிலை மாநாட்டுத் தீர்மானம் ஒன்றில் அது எழுத்து வடிவில் இடம்பெறுவது இதுவே முதல் முறை என்று முக்கியத்துவப்படுத்தப்படுகிறது

.”phasing-out coal and fossil fuel subsidies”என்ற வாசகத்தை இறுதி வரைவில் சேர்ப்பதை சில முக்கிய நாடுகள்- குறிப்பாக இந்தியா-கடுமையாக எதிர்த்ததை அடுத்தே இறுதி உடன்படிக்கை வெளியாகுவது தாமதமாகிறது என்று மாநாட்டில் கலந்து கொண்டுள்ள சர்வதேசசெய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

COP26 எனப்படுகின்ற கிளாஸ்கோ மாநாட்டின் இறுதித் தீர்மானம் வெளியிடப்படுவதற்கு மேலும் சில மணி நேரம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்மானம்வெளியாகும் சந்தர்ப்பத்தை “எங்கள் பூமிக் கோளின் நிஜத்துக்கான ஒரு தருணம்” (“moment of truth for our planet”)என்று ஆர்வலர்கள் வர்ணிக்கின்றனர்.

——————————————————————-

குமாரதாஸன். பாரிஸ்.13-11-2021

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.