உலகம் கட்டுரைகள் பிரதான செய்திகள்

வன்கூவரைத் துண்டித்த வெள்ளம்!! மழை இப்படித்தான் பெய்யும் என்றுகணித்துச் சொல்வது இனி கஷ்டம்

(படம் :கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் ஹெலி)

யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி உலகின் பல பகுதிகளிலும் வழமைக்கு மாறான மழை வெள்ளக் காட்சிகளைக் காணமுடிகிறது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இரு தினங்கள் அடித்த புயல்மழையால் வன்கூவர் நகரம் நாட்டின்பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும் நிலைமை தோன்றியுள்ளது.வெள்ளம் மண்சரிவு, மலைச்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“வளிமண்டல நதி”(“atmospheric river”)எனப் பெயர் குறிப்பிடப்படுகின்ற கடும் ஈரப்பதன் மிகுந்த காற்றலை ஒரு நதிபோன்று உருவாக்கிப் பறந்து பிரிட்டிஷ்கொலம்பியாவின் மேற்குப் பகுதி மீது வெள்ளத்தைக் கொட்டிவிட்டுச் சென்றிருப்பதாக வானிலை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வெப்ப மண்டலப் பகுதிகளில் இருந்து துருவங்களை நோக்கி வீசுகின்ற காற்றின் அதிக ஈரப்பதன் காரணமாக அதனை “வளிமண்டல நதி” என்றுகுறிப்பிடுகின்றனர். வன்கூவர் பகுதிஒரு மாதத்தில் பெறுகின்ற மழைவீழ்ச்சியின் மொத்த அளவை 24 மணி நேரத்தில் கொட்டிவிட்டுப் போயிருக்கிறது அந்த அசூர “வான்நதி”. அனர்த்த அவசரகால நிலை அங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்க இராணுவம் அழைக்கப்பட்டிருக்கிறது. “சந்தேகத்துக்கு இடமே இல்லை. இதுபருவநிலை மாறுதலின் நேரடி விளைவுதான்” – என்று அடித்துக் கூறியிருக்கிறார் பிரிட்டிஷ் கொலம்பியாவின் அமைச்சர் ஒருவர்.

கனடாவின் இதே பிராந்தியம்கடந்த கோடையின் போது வெப்ப அனல்காரணமாக வெந்து தணிந்தது. அங்குஒரு கிராமத்தையே முழுமையாகத் தீவிழுங்கியது நினைவிருக்கலாம். வெப்பம், வெள்ளம் என மாறிமாறி வெளுத்துவாங்குகிறது இயற்கை. பூமியின் வெப்பநிலையைக் குறைப்பதற்கான அவசரதிட்டங்களை ஆராய்வதற்காக உலகத்தலைவர்கள் ஒன்று கூடி கிளாஸ்கோவில் நடத்திய பருவநிலை மாநாடு முடிவடைந்து ஓரிரு நாட்களுக்குள் கனடாவெள்ள அனர்த்தம் நேர்ந்திருக்கிறது.

இலங்கை, இந்தியா போன்ற ஆசியநாடுகளிலும் சமீப காலங்களில் மழையின் தீவிரம் ஓங்கியிருக்கிறது. குளங்கள், வடிகால்கள், வீதிகள் என வேறுபடுத்த முடியாதவாறு எங்கும்வெள்ளக்காடு. முன்பெல்லாம் இப்படிஅல்ல என்று மூத்தவர்கள் முணுமுணுக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் மழை பற்றிய கடும் “விமர்சனப் பொழிவு” களையும் கேட்கமுடிகிறது.வீதி வடிகாலமைப்புப் பொறியியலாளர்களும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளும் ஊருக்குள் முகம் காட்ட முடியாமல் துண்டைப் போர்த்திக் கொண்டு நடமாடும் நிலை உருவானது .

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் வெள்ளம் முட்டியதுக்கும் வற்றியதுக்கும் சிலர் யாழ். மாநகரசபைக்கு “வாழ்த்து மழை” பொழிந்தனர்.வடிகால்களை அடைத்து வெள்ளம் மேவியதற்கு திட்டப் பொறியியலாளர்களா, நிதி ஒதுக்கிய நிர்வாகங்களாஅல்லது குப்பைகளைக் கண்டபடி கொட்டி வழிகளை அடைத்த சாதாரணமக்களா காரணம் என்ற விவாதங்களை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. வடிகால்களும் குளங்களும் கொள்ள முடியாத அளவுக்கு மழை கொட்டுவது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல.

பிரான்ஸின் பலகிராமங்களின் நிலைமையும் அப்படித்தான்.முன்பெல்லாம் குறித்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு தான் பெய்யும் என்று சாதாரணமாக எவருமே ஒரு குத்து மதிப்பில் எதிர்வு கூறிவிடக்கூடியவாறுமழை ஒர் ஒழுங்குக்குள் பெய்துவந்தது .இப்போது அது மாறிவிட்டது. வானிலை வல்லுநர்களது கணிப்புகள் அனைத்தும் பொய்த்துப் போய் விடுகின்றன.

யூரியூப் ஜோதிடர்களது கணிப்பைப் போல் பலரும் அதனை நம்ப மறுக்கின் றனர். அண்மையில் நிகழ்ந்த மிகப் பெரிய வெள்ள அனர்த்தத்தை ஜேர்மனிநாட்டின் வானிலை அறிவியலாளர்களால் முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்க முடியாமற்போனமை உலகம் அறிந்ததே.

கனடா பிரிட்டிஷ் கொலம்பிய நிலைமையும் அவ்வாறுதான்.பிரான்ஸின் Var என்ற இடத்தில் ஒருபருவகாலம் முழுவதும் பெய்யக் கூடியமழை ஒரு நாளில் பொழிந்து தள்ளியது.மழை இவ்வாறு புதிய வடிவம் எடுப்பதைநாட்டின் மழைமானிகள் உறுதிப்படுத்துகின்றன.

பிரான்ஸின் பரந்த மத்திய பிராந்தியங்களில் கடந்த சில தசாப்தங்களில் பெய்தமழையின் அடிப்படைப் பண்புகளை (characteristics of the rainfall) ஆராய்ந்தநிபுணர்கள் மழையின் அடர்த்தி, கனம்என்பன உயர்ந்து வருவதைக் கண்டறிந்துள்ளனர். பிரெஞ்சு மொழியில் “Le pluviomètre” எனப்படுகின்ற சுமார் 75மழை வீழ்ச்சி அளவீட்டுக் கருவிகள் மூலம் பெறப்பட்ட தரவுகள் மழையின் தீவிரம் – அடர்த்தி – என்பன அதிகரித்து வருவதை வெளிப்படுத்தி உள்ளன.வெள்ளம் வராமல் தடுக்க இப்போதுள்ள நீர்த்தேக்கங்களினது கொள்ளளவு மற்றும் வடிகாலமைப்பு வசதிகளின் விஸ்தீரணம் இனிமேல் போதுமானதா என்றகேள்விகளை சமீபகால மழைவெள்ளங்கள் எழுப்பியுள்ளன.

——————————————————————- .

-பாரிஸிலிருந்து குமாரதாஸன். 18-11-2021

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.