
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரேநாடு ஒரேசட்டம் செயலணி தொடர்பிலும் அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் நியமனம் குறித்தும் வலிதென்மேற்கு மானிப்பாய் பிரதேசசபையின் 44ஆகவது சபை அமர்வின் போது கண்டனதீர்மானமொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதேசசபை உறுப்பினர் கந்தையா ஜெசிதனால் கொண்டுவரப்பட்ட இக் கண்டன பிரேரணையானது ஏகமனதான பிரதேசசபை உறுப்பினர்களின் வழிமொழிதலுடன் கண்டன தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது .
இதன்போது இந்த அரசாங்கமானது இந்தநாட்டையும் நாட்டுமக்களையும் கொரோனா பேரிடரிலிருந்து காத்து கொள்வதற்கானதும் பொருளாதார சரிவிலிருந்தும்,விலை அதிகரிப்புகளிலிருந்தும் அன்றாட வாழ்கைசுமைகளிலிருந்தும் காத்துக்கொள்வதற்கு திராணியற்ற ஒரு அரசாங்கமாக உள்ளது.
எந்த சிங்கள மக்களின் தனிபெரும்பான்மையோடு ஆட்சி பீடமேறியதோ அந்த சிங்கள மக்களிடமும் வீழ்ந்து வரும் தனது செல்வாக்கை தூக்கி நிமிர்த்தவே இனவாத பிக்குவின் தலைமையில் மக்களின் கவனங்களை வாழ்வியல் சமூக பொருளாதார பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பிடவே இந்த செயலணியை அரசாங்கமும் சனாதிபதியும் பயன்படுத்துகின்றனர். என தமது காரசாரமான கருத்துக்கள் உறுப்பினர்கள் அ.ஜோன் ஜிப்பிரிக்கோ, லோ.ரமணன், சி.அனுசன் ஆகியோர் முன்வைத்தனர்.
இதன் போது இந்த அரசினது இவ்வாறான சனநாயக விரோத போக்குகளை சுட்டிக்காட்டிட முனையாத அரசிலுள்ள தமிழ் பங்காளி கட்சிகளின் தலைவர்களிற்கு கண்டனமும் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் பண்டையகாலம் முதல் கண்டியசட்டம் , கரையோரச்சட்டம், தேசவழமைசட்டம், முக்குவசட்டம், என இந்நாட்டில் நிலவிவந்த சட்டங்களை ஒழித்து குழப்பநிலையை உருவாக்க நினைப்பது ஏற்கமுடியாதது என பிரேரணையை முன்மொழிந்த உறுப்பினர் ஜெசிதன் தனது உரையில் தெரிவித்தார்.
இக்கண்டன பிரேரணை நிறைவேற்றப்பட்ட போது ஈபிடிபியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசசபை உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியே சென்று தீர்மானம் நிறைவேறிய பின்னரே மீண்டும் சபைக்குள் பிரசன்னமானர்கள்.
Add Comment