உலகம் பிரதான செய்திகள்

ஒஸ்லோவில் நத்தார் விருந்துண்ட 60 பேருக்கு ஒமெக்ரோன் தொற்று?நள்ளிரவு முதல் தடைகள் அறிவிப்பு

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உணவகம் ஒன்றில் கடந்த வெள்ளியன்று நத்தார் விருந்து பசாரத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் ஒமெக்ரோன் வைரஸ் பரவிவருகிறது. தொற்றாளர்களது மாதிரிகள் டெல்ராவை விடவும் மாறுபாடான புதிய மரபுவடிவத்தைக் கொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது என்ற தகவலை நோர்வே ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

சுமார் 50 முதல் 60 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர்களில் சிலரை ஒமெக்ரோன் வைரஸ் பீடித்திருப்பது தெரியவந்திருப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

ஒரு பெரும்கொத்தணியாக ஒமெக்ரோன் வைரஸ் நாட்டுக்குள் தலையெடுத்திருப்பதை அடுத்து நோர்வேயின் தொழில் கட்சிப் பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்ரோர்(Jonas Gahr Støre) இன்று மாலை அவசர செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தியுள்ளார்.

ஒஸ்லோ நகரிலும் சூழவுள்ள பிரதேசங்களிலும் புதிதாகக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் எல்லைகளில் கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டுள்ளன. கை குலுக்கல் போன்றவற்றைத் தவிர்த்து சமூக இடைவெளியைப் பேணுமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

ஒஸ்லோவில் மத்திய பகுதியான Aker Brygge இல் உள்ள லூயிஸ் உணவகம் மற்றும் அருந்தகத்தில் (Louise Restaurant & Bar) வெள்ளி இரவு நடந்த நத்தார் விருந்தில் கலந்துகொண்டவர்களில் சிலர் அண்மையில் தென் ஆபிரிக்காவில் இருந்து திரும்பியவர்கள் என்று கூறப்படுகிறது.

விருந்தில் கலந்துகொண்ட ஒருவர் மறுநாள் அங்குள்ள மற்றொரு அருந்தகத்தில் (Old Irish Pub) நடந்த நிகழ்விலும் பங்குகொண்டார் என்பதுதெரியவந்துள்ளது. இரண்டு உணவகங்களிலும் விருந்துண்டவர்களும் அவர்களோடு தொடர்புடையவர்களும் தங்களைபரிசோதனை செய்வதுடன் தாங்களா கவே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு ஒஸ்லோ நகரசபை அவசர அறிக்கை ஒன்றில் கேட்டிருக்கிறது.

(படங்கள் :ஒஸ்லோவில் தொற்றுக்கள் கிளம்பிய இரண்டு உணவகங்களினதும் முகப்புத் தோற்றம்)-

——————————————————————–

குமாரதாஸன். 02-12-2021பாரிஸ்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.