Home இந்தியா போரும், பின்னரான வாழ்வும், கையறு நிலையின் அபத்தமும்!

போரும், பின்னரான வாழ்வும், கையறு நிலையின் அபத்தமும்!

by admin

கைதிகள் பேச்சை நம்பி வேலை தேடி தமிழ்நாடு சென்ற இலங்கை இளைஞர்: கைது செய்த காவல்துறை!

இலங்கை சிறையில் தமிழக மீனவர்களுடன் ஏற்பட்ட நட்பினால் வேலை தேடி தமிழ்நாடு வந்த இலங்கை இளைஞர் ஒருவர் வேலையும் கிடைக்காமல் மீண்டும் தன் தாய் நாட்டுக்கு திரும்பவும் முடியாமல் தவிர்த்து வந்தார். அவர் மீண்டும் இலங்கைக்கே கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்ற போது ராமேஸ்வரம் தமிழ்நாடு கடலோர காவல் குழும காவற்துறையினரிடம் பிடிபட்டார்.

இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 25 வயதான சந்திரசேகரன், கடந்த வியாழக்கிழமை இரவு தனுஷ்கோடி கடல் வழியாக சட்டவிரோதமாக இலங்கை செல்ல முயன்றார்.

அப்போது தனுஷ்கோடியை அடுத்த மூன்றாம் சத்திரம் சோதனைச்சாவடியில் இருந்த தமிழ்நாடு கடலோர காவல் குழும காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்று தமிழ்நாடு கடலோர காவல் குழும காவற்துறையினரிடம் பிடிபட்ட சந்திரசேகரன் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மண்டபம் அகதி முகாமில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்திரசேகரனிடம் மெரைன் காவற்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் எப்படி இந்தியா வர முடிவு செய்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு கடலோர காவல் குழுமத்தின் ராமேஸ்வரம் ஆய்வாளர் ச. கனகராஜ், சந்திரசேகரன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்போது அவர் வீட்டுக்கு அருகே உள்ள நபருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது கையை வெட்டியுள்ளார் என்று தெரிவித்தார்.

”இதன் காரணமாக முல்லைத்தீவு காவற்துறையினரால் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் சிலர் சந்திரசேகரன் இருந்த அதே வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.”

தமிழக மீனவர்களுடன் சிறையில் ஏற்பட்ட நட்பு

”சிறையில் ராமேஸ்வரம் மீனவர்கள் சிலருடன் சந்திரசேகரனுக்கு ஏற்பட்ட நட்பின் காரணமாக வேலை வாய்ப்பு குறித்து கேட்டுள்ளார். சிறைக்கு வந்ததால், சிறையிலிருந்து வெளியான பின் தனக்கு சரியான வேலை வாய்ப்பு கிடைக்காது எனவும், தமிழ்நாட்டில் நல்ல வேலை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு சிறையிலிருந்த தமிழக மீனவர் ஒருவர், அவரை ராமேஸ்வரம் வருமாறும், அங்கு மீன்பிடித்து சம்பாதிக்கலாம் எனவும், அகதி முகாமிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.”

ராமேஸ்வரம் காவல்நிலையம்
படக்குறிப்பு,ராமேஸ்வரம் காவல்நிலையம்

ஆனால் அந்த ராமேஸ்வரம் மீனவர் தன் முகவரி மற்றும் தொலைபேசி எண் எதையும் கொடுக்கவில்லை. மீனவரின் முகவரியை சந்திரசேகரன் கேட்டதற்கு ‘ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்துக்கு வந்து அந்தோனி என பெயரை சொல்லி கேட்டால் அனைவருக்கும் தெரியும்’ எனக் கூறிவிட்டார்.

இதனை நம்பி, சந்திரசேகரன் கடந்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பிலிருந்து விமானம் மூலமாக சுற்றுலா விசாவில் சென்னை வந்துள்ளார். பின் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து, தன்னை தமிழகம் வரும்படி கூறிய மீனவரை ராமேஸ்வரம் கடற்கரை பகுதி முழுவதும் தொடர்ந்து தேடியுள்ளார், என்று பிபிசி தமிழிடம் கூறினார் ஆய்வாளர் கனகராஜ்.

மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை

கைது செய்யப்பட்ட சந்திரசேகரன் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டார்.
படக்குறிப்பு,கைது செய்யப்பட்ட சந்திரசேகரன் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டார்.

இதனால் சந்தேகமடைந்த மீனவர்கள் மாநில உளவுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக உளவுத்துறை அதிகாரிகள் சந்திரசேகரனை பிடித்து விசாரித்தபோது அவர் சுற்றுலா விசாவில் இலங்கையில் இருந்து தமிழ்நாடு வந்தது தெரியவந்தது. சுற்றுலா விசா காலாவதியாகாததால் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்து பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை உளவுத்துறை அதிகாரிகள் சரிபார்த்தனர்.

சந்திரசேகரனை இலங்கைக்கு திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தி, அந்த அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ற சந்திரசேகரன் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு சென்று தான் இலங்கைக்கு திரும்பி செல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அதற்கு அங்குள்ள அதிகாரிகள் தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், திருப்பி அனுப்ப முடியாது எனவும் இருப்பினும் தூதரகத்தால் விரைவில் சந்திரசேகரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளனர். பிறகு சந்திரசேகரன் ஒரு போர்வெல் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சந்திரசேகரன் தொடர்ந்து வேலை செய்து ரூபாய் 80 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். அதில் 20,000 ரூபாய் பணத்தை இலங்கை முல்லைத்தீவில் உள்ள அவர்களது பெற்றோருக்கு அனுப்பி விட்டு மீதமுள்ள 60,000 ரூபாய் பணத்தை தன் வசம் வைத்திருந்துள்ளார்.

இதனை நோட்டமிட்ட சந்திரசேகரனுடன் வேலை செய்த நபர் ஒருவர் பணத்துடன் அவருடைய பாஸ்போர்ட் மற்றும் அவரது அடையாள அட்டைகளை திருடி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகரன் போர்வெல் நிறுவனத்தின் உரிமையாளரின் இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு சென்னை வந்து கடந்த 3ஆம் தேதி சென்னை புதுப்பேட்டையில் உள்ள கடை ஒன்றில் வாகனத்தை இரண்டு ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.

பின்னர் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரக அலுவலகத்திற்கு சென்று தன்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கேட்டுள்ளார். தூதரக அதிகாரிகள் விசா காலவதியாகிவிட்டதுடன் பாஸ்போர்ட் காணாமல் போனதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர். கோயம்பேடு காவல் நிலையத்தில் தனது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால் கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.

ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை முயற்சி:

ரயில் - மாதிரிப் படம்
படக்குறிப்பு,ரயில் – மாதிரிப் படம்

தம்மால் மீண்டும் இலங்கை திரும்பவும் முடியவில்லை, இங்கு வாழவும் வழியில்லை என்கிற விரத்தியில் கடந்த 4ஆம் தேதி சென்னையில் உள்ள ரயில் நிலையத்தில் தற்கொலை செய்துகொள்வதற்காக தண்டவாளத்தில் படுத்துள்ளார் சந்திரசேகரன்.

அப்பகுதியில் இருந்த ரயில்வே துப்புரவு பணியாளர்கள் சந்திரசேகரனை மீட்டு உணவளித்துள்ளனர். அவர்களிடம் தனக்கு ராமேஸ்வரத்திற்கு ரயில் டிக்கெட் ஒன்று எடுத்து கொடுக்குமாறு கேட்டு வியாழக்கிழமை காலை ராமேஸ்வரம் வந்தடைந்தார்.

தனுஷ்கோடி பகுதியில் உள்ள மீனவர்களிடம் தன்னை மீன்பிடி படகில் இலங்கையில் இறக்கி விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு அப்பகுதி மீனவர்கள் சம்மதிக்கவில்லை. சந்திரசேகரன் அங்கிருந்து நீந்தி இலங்கை சென்று விடுவேன் என கூறியதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரை கடலோர காவல் குழுமத்தினரிடம் ஒப்படைத்ததனர்.

இதனிடையே சந்திரசேகரன் ஏதாவது சட்டவிரோத நோக்கங்களுடன் தமிழ்நாட்டில் பதுங்கி இருந்தாரா என்ற கோணத்தில் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • பிரபுராவ் ஆனந்தன்
  • பிபிசி தமிழுக்காக

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More