Home இலங்கை TNPFன்”கிட்டுபூங்கா பிரகடனம்”

TNPFன்”கிட்டுபூங்கா பிரகடனம்”

by admin

“தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்” என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தில், 2022 தை 30 இன்று, கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம்.

சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ்த் தேசமானது – தனது அடிப்படையான அரசியல் உரிமைகளான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள தேசத்திற்கும், இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் இத் தொடர் போராட்டம் வலியுறுத்திக் கூற விரும்புகின்றது.

சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த வாக்குகளால் ஆட்சிப்பீடம் ஏறியுள்ள இன்றைய அரசாங்கத்தால் இலங்கைக்கான நான்காவது அரசியலமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. அதை இந்த வருடத்துக்குள் நிறைவேற்றவுள்ளதாக இவ்வரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டும் உள்ளது. அது இறுக்கமான ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே அமையும் என்பதையும், அரசாங்கம் உறுதிப்படக் கூறியுள்ளது. இந்த அரசியலமைப்பை ஒரு தலைப்பட்டசமாக நிறைவேற்றுவதற்குரிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இந்த அரசாங்கம் கொண்டுள்ளது. இலங்கையில் கொண்டுவரப்பட்ட மூன்று அரசியலமைப்புக்களும் இதே போன்றதொரு சிங்கள பெரும்பான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டே நிறைவேற்றப்பட்டிருந்தது. அச்சந்தர்பங்களிலெல்லாம் தமிழ்த் தலைமைகள் அந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்களை எதிர்த்திருந்ததுடன், வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி வந்ததன் விளைவாகவே, தமிழர்களுக்கு இனப்பிரச்சினையொன்று உண்டு என்னும் விடயத்தைத் தக்கவைக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக, சிங்கள அரசு தமிழருடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, இங்கு பயங்கரவாத பிரச்சினை மட்டுமே உள்ளதாகக் கூறி, போரை முடிவுக்குக் கொண்டு வந்து 13 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும், இன்றுவரை தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை தொடர்ந்தும் இருக்கிறது என்கின்ற நிலையை நாம் தக்கவைத்திருப்பதற்கான ஒரேயொரு காரணம், இந்த நாட்டின் பிரதான சட்டமாக இருக்கும் மூன்று அரசியலமைப்புக்களையும் தமிழ் மக்கள் நிராகரித்திருந்தமையேயாகும்.

இவ்வாறிருக்க, 1980 களில் இலங்கையை மையமாகக் கொண்டிருந்த அமெரிக்க – இந்திய பூகோளப்போட்டி காரணமாகவே இந்தியா தனது நலனை அடைவதற்காக தமிழர்களின் இனப்பிரச்சினையைக் கையிலெடுத்திருந்தது. 1987 இல் இலங்கையானது, இந்திய நலன்சார்ந்து செயற்பட தயாரான நிலையில், இந்தியா தனது தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்தி, சிங்கள தரப்புடன் உடன்பட்ட பின்னர், எந்த ஒற்றையாட்சிக் கெதிராக தமிழ்த் தரப்பை பயன்படுத்தியதோ, அதே ஒற்றையாட்சிக்குள்ளான 13 ஆம் திருத்தத்தையே தமிழ்க்களுக்கான தீர்வாக இலங்கை அரசு முன்வைத்திருந்த நிலையில், தமிழ்த் தரப்பை இந்தியா கைவிட்டிருந்தது. இந்நிலையில் அப்போதிருந்த தமிழ்த் தரப்புகளாலும் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நேர்மையான தலைமைத்துவத்தின் காரணமாக ஒற்றையாட்சிக்குள் முடக்கும் செயற்பாடுகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தது. 2005 இன் பின்னர், இந்திய சீனா பூகோளப்போட்டி மீண்டும் இலங்கையில் உருவாகியிருந்த பின்னணியிலேயே ஒரு இனப்படுகொலையூடாக போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், இந்தியா மீண்டும் தனது ஆதிக்கத்திலுள்ள தமிழ்த் தரப்புக்களைப் பயன்படுத்தி, தமிழ் அரசியலை ஒரு துருப்புச்சீட்டாகக் கையாண்டு இலங்கை அரசோடு பேரம்பேசி வருகின்றது. இலங்கை, சீனாவின் விவகாரத்தில் இந்திய நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் செயற்படுமானால், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ் தரப்புக்களைப் பயன்படுத்தி, தமிழரின் அரசியலை ஒற்றையாட்சிக்குள்ளான 13ஆம் திருத்தத்திற்குள் முடக்குவதற்கும் இணங்கியுள்ளது.

இந்தப் பின்னணியிலேயே, இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ்த் தரப்புகளான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எவ்;) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும்; தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி உள்ளிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் இணைந்து 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி கூட்டாக கையொப்பமிட்ட கடிதத்தை 18-01-2022 அன்று இந்திய தூதுவரிடம் கையளித்துள்ளனர்.

இதன்மூலம், 13 ம் திருத்தச்சட்டத்திலுள்ள சரத்துக்கள் புதிய அரசியலமைப்பிலும் உள்வாங்கப்படும் பட்சத்தில், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவதனூடாக, தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்ற நிலைமையையே உருவாக்கி, நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் ஏற்றுக்கொண்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்கிவிட்டதாகவும், இனப்பிரச்சினை இதனூடாக தீர்க்கப்பட்டு விட்டதாகவும் உலகுக்கு பறைசாற்றுவதற்கு தயாராகிறார்கள்.

இந்த ஆபத்திலிருந்து தமிழ்த் தேசத்தை மீட்டெடுப்பதற்கு, தமிழ்த் தேச மக்கள் அணிதிரள்வதன் ஊடாகவே தடுத்து நிறுத்த முடியும் என்னும் யாதார்த்தத்தை விளங்கிக் கொண்டு, இந்தத் தொடர் போராட்டம் பின்வருவனவற்றை பிரகடனப்படுத்துகிறது :

· தமிழ்த் தேச மக்கள் தொடர்ச்சியாக ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை 70 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வந்திருக்கின்ற நிலையிலே, 2009 இல் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரும், ஒற்றையாட்சியை நிராகரித்தும், தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தைக் கோரியும் ஒவ்வொரு தேர்தல்களுடாகவும் தங்களது ஏகோபித்த ஆணையை வழங்கி வந்திருக்கிறார்கள்.

· வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசமும் – அதன் இறைமையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகிக்கப்படுகின்ற தீர்வுக்குப் பதிலாக – ஒற்றையாட்சிக்குள் இருக்கக்கூடிய ஒரு கட்டமைப்பாக (13 ஆம் திருத்தச் சட்டமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ) இருக்குமானால் அவ்வகையான செயல், தமிழ் மக்களுடைய ஆணைக்குத் துரோகம் இழைக்கும் வகையிலேயே அமையும் என்ற விடயத்தை இப்போராட்டம் பிரகடனப்படுத்துகிறது.

· தமிழ் மக்கள் – காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தத்தையோ அல்லது வேறு எந்தவொரு திருத்தத்தையோ வலியுறுத்துகின்ற தரப்புக்கள், அம்முயற்சியை கைவிட வேண்டுமென இப்போராட்டமூடாக வலியுறுத்துகிறோம்.

· இந்திய அரசானது இலங்கையோடு நல்லுறவை பலப்‌படுத்திக்கொள்வதையோ அல்லது தனது பூகோள -அரசியல்‌ நலன்களைப்‌ பேணுவதையோ அல்லது தென்‌ ஆசிய பிராந்‌திய வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதையோ ஈழத்‌தமிழ்‌ மக்கள்‌ எதிர்க்கவில்லை. இந்தியாவை எமது நட்புசக்தியாகவே கருதுகின்றோம். இந்தியாவின் தேசிய நலன்களைப்‌ பேணுவதில்‌ எமக்கு மிகுந்த விருப்பமும் அக்கறையும் ஈடுபாடும் உண்டு. ஆனால் தமிழ் மக்கள் தமது நட்பு சக்தியாக கருதும் இந்தியா, தனது பூகோள நலன்களைப்‌ பூர்த்திசெய்வதற்காக தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்கி, தமிழ் மக்களின்‌ நலன்களை முற்றாகப்‌ புறக்கணிக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு கோருகின்றோம்.

· தமிழ்மக்கள் 70 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில், தமிழ்த் தேச அங்கீகாரத்தையும் – அதனுடைய தனித்துவமான இறைமையையும் – சுயநிர்ணய உரிமையையும் முழுமையாக அனுபவிக்கக் கூடிய ‘சமஸ்டி’ அடிப்படையிலான தீர்வை அடைய இந்திய அரசும் ஏனைய நட்பு நாடுகளும் இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்றும் இப்போராட்டம் கோருகின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்)
தமிழ்த் தேசியப் பேரவை
30.01.2022

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More