உலகம் கட்டுரைகள் பிரதான செய்திகள்

அணுக் கதிர் வீச்சு அச்சத்தால் அயோடின் மாத்திரை வாங்க அவசரப்படும் ஐரோப்பியர்கள்

?தொற்று நோய், தடுப்பூசி, மாஸ்க் என்பன மறைந்து போக புதிய அச்சங்கள்உலக மக்களைத் தொற்றுகின்றன.

கடந்த சில நாட்களாக மருந்தகங்களில்அயோடின் மாத்திரைகளது விற்பனை அதிகரித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், மற்றும் போலந்து, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அயடின் (iodine) வாங்க அவசரப்படுகின்றனர்

.ரஷ்ய அதிபர் நாட்டின் அணு ஆயுதப்படைப் பிரிவை முழு ஆயத்த நிலையில் இருக்குமாறு கட்டளை இட்டிருப்பதாலும் உக்ரைனில் ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின் ஆலை தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய ஆபத்து அதிகரித்திருப்பதும் அணுக்கதிர் வீச்சுப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

கதிர்வீச்சில் இருந்து அயோடின் உடலைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் பலர் அந்த மாத்திரைகளை வாங்கிச் சேகரித்துவருகின்றனர்.பிரான்ஸைப் பொறுத்தவரை அதன்அணு மின் ஆலைகளைச் சூழ இருபதுகிலோ மீற்றர்கள் சுற்றுவட்டத்தில் இயங்கும் மருந்தகங்களுக்கு அயோடின் மாத்திரைகளை விற்பனை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

அப்பகுதிகளில் வசிப்போர் மருந்தகங்களில் தங்கள் வதிவிடத்தை உறுதிப்படுத்தி அயோடின் மாத்திரைகளை வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு விபத்துச் சூழ்நிலையை எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் ஆகும்.

அணு உலை விபத்துகள் நேர்ந்தால் சுற்றுவட்டார மக்கள் கதிர்வீச்சினால் தைரொய்ட்சுரப்பி பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த வசதி ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்போது உலகம் ஓர்அணு ஆயுதப் போருக்கான ஆபத்தை எதிர்கொள்வதால் அயடின் மாத்திரைகளுக்கான கிராக்கி திடீரென எல்லாஇடங்களிலும் அதிகரித்துள்ளது.

தாம் விரும்பியவாறு அயடினை கட்டுப்பாட்டு விதிகளைப் (preventative measure) பின்பற்றாமல் உள்ளெடுப்பது ஆபத்தானது என்று மருந்தகங்களின் சங்கம் எச்சரித்துள்ளது.”அணுக் கதிர் வீச்சு நிகழ்வதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவும் கடைசியாக ஆறு முதல் 12 மணிநேரம் பின்னராகவும் அயடின் சிகிச்சைஅளிக்கப்படவேண்டும்” என்று அணு மற்றும் அணுக் கதிர்வீச்சுப் பாதுகாப்பு நிலையத்தின் (Institute for Radiological Protection and Nuclear Safety – IRSN) இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

?அணுக் கதிர் வீச்சுக்கும்அயோடினுக்கும் என்ன தொடர்பு?

அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் – வெடிப்பு அல்லது கசிவு ஏற்பட்டால் அல்லது போரில் ஏதேனும் ஒரு வகையில் சேதம் ஏற்பட்டால் – வளிமண்டலத்தில் வெளியிடப்படும் முதல் பொருட்களில் கதிரியக்க அயோடின் ஒன்றாகும்.அந்தக் கதிரியக்க அயோடின் உடலுக்குள் சென்றால், அது தைரொய்டில் உள்ள செல்களை சேதப்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும்.

கதிர்வீச்சை சுவாசம் மூலம் உள்ளிழுக்கலாம் அல்லது தோல் வழியாக அது எங்கள் உடலுக்குள் செல்லலாம். ஆனால் நாங்கள் அதைக் காற்றில் பார்க்கவோ, மணக்கவோ அல்லது சுவைக்கவோ முடியாது. அது கண்ணுக்கு தெரியாத அச்சுறுத்தல்.தைரொய்ட் புற்றுநோய், கட்டிகள், கடுமையான இரத்தப் புற்றுநோய், கண் நோய்கள் மற்றும் உளவியல் அல்லது மனநலக்கோளாறுகள் ஆகியவை கதிர்வீச்சினால் ஏற்படும் மோசமான விளைவுகளில் சில.

கதிர்வீச்சு எமது மரபணுக்களைத் தலைமுறை தலைமுறையாகக் கூடச் சேதப்படுத்தும்.நமது உடல் அயோடினை உற்பத்தி செய்வதில்லை. நாங்கள் தான் உணவு மூலம் அதனை உள்ளெடுக்கிறோம். மாத்திரை வடிவில் அயோடினை வாங்கி உட்கொள்ளும் போது அது, தைரொய்டில்(thyroid gland) சேகரிக்கப்படுகிறது.

அங்கு அது ஓமோன்களை (hormones) உற்பத்திசெய்யப் பயன்படுகிறது.அவை உடலின் இயக்கத்துக்கும் மூளையின் தொழிற்பாட்டுக்கும் உதவுகின்றன. தைரொய்ட்டில்அயோடின் நிறையும் போது அது புதிதாக அதனை உள்ளெடுக்காது.எனவே ஒருவரது உடலில் போதுமான அளவு நல்ல அயோடின் இருக்கும் நிலையில் கதிரியக்கத்தால் பரவும் நச்சு அயோடினைதைரொய்ட் சுரப்பி சேகரிக்காது. அதற்காக அயோடினை அறிவுறுத்தல்ஏதும் இன்றி – கதிரியக்கம் பரவாத சூழ்நிலையில் – அதிகமாக உள்ளெடுப்பது ஆபத்தாகலாம்

.(குறிப்பு :அயோடின் – அணுக்கதிரியக்கம்தொடர்பில் துறை சார்ந்தவர்களது மேலதிக விளக்கங்களை இப்பதிவின் கீழ் எதிர்பார்க்கிறேன்)

——————————————————————- –

பாரிஸிலிருந்து குமாரதாஸன். 06-03-2022

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.