உலகம் பிரதான செய்திகள்

“நேட்டோ” கட்டளைப் பீடத்திலிருந்து பிரான்ஸை வெளியேற்றுவது உறுதி

உக்ரைன் போர் முடிவடைந்ததும் ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையே ஒருமூலோபாய ரீதியான இணக்கப்பாட்டைஏற்படுத்த முயற்சிப்போம். அதேசமயம்நேட்டோவின் ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் (NATO integrated command) இருந்து பிரெஞ்சுப் படைகளை வெளியேற்றுவது என்ற முடிவில் மிக உறுதியாக இருக்கிறோம். மொஸ்கோவுடன் பணிந்து போகப்போவதும் இல்லை. அதேசமயம் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் பைடன் நிர்வாகத்தைப் பின்தொடரப்போவதும் இல்லை.

தீவிர வலது சாரி வேட்பாளரான மரின்லூ பென் அம்மையார் நேற்றுப் பாரிஸில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுச் செய்தியாளர்கள் பங்குபற்றிய ஒரு மாநாட்டில்இ வ்வாறு அறிவித்தார்.

ஏப்ரல் 24 ஆம்திகதி நடைபெறவுள்ள இறுதிக்கட்ட வாக்களிப்பில் லூ பென் அம்மையார் மக்ரோனைத் தோற்கடிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்று வருகிறது. பிரான்ஸில் மட்டுமன்றி முழு ஐரோப்பாவிலுமே அவரது வெற்றி வாய்ப்புக் குறித்த அரசியல் பரபரப்புக் காணப்படுகிறது.

இந்தநிலையில் தனது வெளிவிவகாரக் கொள்கைகளை வெளியிட்டிருக்கும் அவர், தனது பழைய தீவிர ஐரோப்பிய எதிர்ப்பு வாதத்தைச் சற்றுத் தணித்திருக்கிறார். ஈரோ நாணய முறையை ஒழித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸை வெளியேற்றப் போவதாக கடந்த காலங்களில் முழங்கி வந்தவர் மரீன் லூ பென். இப்போது அவற்றைக் கைவிட்டுள்ளார்.

ஐரோப்பாவுக்கு எதிராக எவரும் இல்லை.ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரான்ஸின் பங்களிப்புகளை நாங்கள் நிறுத்தமாட்டோம். அது எமது நோக்கமல்ல என்றுஅவர் கூறியிருக்கிறார். சர்வதேச விவகாரங்களிலோ அல்லதுஅரசாங்க நிர்வாகத்திலோ முன் அனுபவம் இல்லாதவர் மரின் லூ பென்.அதேசமயம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைநீண்டகாலமாகப் புகழ்ந்துபேசி வருபவர்.

ஆனால் உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் அவர் தனது ரஷ்ய சார்பு நிலையைத் தவிர்த்துவிட்டுப் போரில் தன்னை நடுநிலையாளர் போலக் காட்டும் கருத்துக்களைத் தற்போது வெளியிட்டு வருகிறார்.

2017 தேர்தல் வாக்களிப்பு சமயத்தில் அவரை புடின் கிரெம்ளின் மாளிகைக்கு அழைத்துப் பேசியிருந்தார். புதியஉலக ஒழுங்கு ஒன்றை உருவாக்குவது என்ற புடினின் எண்ணத்தைத் தானும் அதே பெறுமானத்துடன் மதிப்பாக அச் சமயத்தில் லூ பென் தெரிவித்திருந்தார்

.🔵மக்ரோனுக்கு ஹொலன்ட் ஆதரவு

இதேவேளை, சோசலிஸக் கட்சியின் முன்னாள் அதிபராகிய பிரான்ஷூவா ஹொலன்ட் ஏப்ரல் 24 தேர்தலில் மக்ரோனுக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.”எங்கள் எதிர்காலத்துக்கு மிகவும் ஆபத்தானவர்களது கைகளில் நாடு வீழ்வதைத் தடுக்க வேண்டியது மிகமுக்கியமானது “-என்று அவர் தொலைக்காட்சி ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் நிக்கலஸ் சார்க்கோசியும் தனது வாக்கை மக்ரோனுக்கே செலுத்தப் போவதாக அறிவித்திருப்பது தெரிந்ததே.

முதற் சுற்றில் மூன்றாம் இடத்தை வென்ற ஜோன் லூக் மெலன்சோனின் ஆதரவாளர்களது வாக்குகளே இறுதிச் சுற்றில் வெற்றியைத் தீர்மானிப்பதில் அதிக செல்வாக்குச் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

—————————————————————— –

பாரிஸிலிருந்து குமாரதாஸன். 15-04-2022

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.