உலகம் பிரதான செய்திகள்

டிரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதிக்குள் கிரனேற் லோஞ்சர் தாக்குதல்கள் ரஷ்யா – உக்ரைன் யுத்தம் மூன்றாம் நாட்டுக்கு விரிவு

உக்ரைன் எல்லையோரம் மோல்டோவாவுக்குள் அமைந்துள்ள டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிராந்தியத்தில் திங்கள், செவ்வாய் இரு தினங்களும் அடுத்தடுத்துத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

மர்மமான விதத்தில் கிறனேட் லோஞ்சர்கள் மூலம் நடத்தப்பட்ட அத் தாக்குதல்களில் ரஷ்யாவின் ஒளி,ஒலிபரப்பு சேவையை வழங்குகின்ற அன்ரனா கோபுரங்கள் சேதமடைந்துள்ளன. ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சி அரசினால் நிர்வகிக்கப்படுகின்ற டிரான்ஸ்னிஸ்ட்ரியாவின் பாதுகாப்புப் பணிமனை ஒன்றும் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது.

இத்தாக்குதல்களை அடுத்து மோல்டோவா அரசு அதன் பாதுகாப்புச் சபையைக் கூட்டி நிலைவரத்தை ஆராய்ந்துள்ளது. உக்ரைன் யுத்தம் தனது எல்லைக்குள் நீள்வதாக அது அச்சம் வெளியிட்டுள்ளது.

பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-ஈவ்ஸ் லு டிரியன்(Jean-Yves Le Drian) கடந்த இரண்டு நாட்களாக டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் நடந்த சம்பவங்கள் தொடர்பாகத் தனது கவலையையும் அவதானிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இந்த சூழலில் மோல்டோவாவின் ஸ்திரத்தன்மை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடுஆகியவற்றிற்கு பிரான்ஸ் தனது முழு ஆதரவை வெளிப்படுத்துகிறது என்று செய்திக் குறிப்புஒன்றில் தெரிவித்திருக்கிறார்

. 🔵பின்னணி என்ன?

மோல்டோவாவின் டிரான்ஸ்னிஸ்ட்ரியா(Transnistria) பிராந்தியத்துக்குச் சென்றால் அன்றைய சோவியத் ஒன்றியத்துக்குச் சென்று வந்த அனுபவமே ஏற்படும் என்று கூறுவார்கள். அங்கு அரசாங்கப் பணிமனைகளுக்கு முன்னால் இப்போதும் லெனின் சிலைகளைக்காணலாம்.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த மோல்டோவாவின் ஒரு பகுதிதான் டிரான்ஸ்னிஸ்ட்ரியா. உக்ரைனுக்கும் ருமேனியாவுக்கும்இடையே இருக்கின்ற ஐரோப்பாவின் மிக வறிய நாடு மோல்டோவா.அதற்குள்அமைந்த இன்னுமொரு நாடுதான் டிரான்ஸ்னிஸ்ட்ரியா

.போர் புரிந்துகொண்டு மோல்டோவாவை விட்டுப்பிரிந்து தன்னைத் தானே சுயாட்சிப்பிராந்தியமாக அறிவித்துக் கொண்டுள்ள டிரான்ஸ்னிஸ்ட்ரியாவை உலகம் தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. அது இன்னமும் மோல்டோவா எல்லைக்குள்அமைந்த ஒரு பகுதியாகவே உலகப் படத்தில் வரையப்படுகிறது.

ரஷ்ய மொழி பேசும் சுமார் நான்கு லட்சம்மக்கள் அங்கு வசிக்கிறார்கள். உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியம் போன்றே டிரான்ஸ்னிஸ்ட்ரியாவும் ரஷ்யச் செல்வாக்குக்குட்பட்டது. மோல்டோவா மேற்கே நேட்டோவின் பக்கமும் டிரான்ஸ்னிஸ்ட்ரியா கிழக்கே ரஷ்யாவின் பக்கமுமாக அணி பிரிந்து நிற்பதே அங்குள்ள அரசியல் நெருக்கடியின் மைய விவகாரம் ஆகும்.

டிரான்ஸ்னிஸ்ட்ரியா ஆட்சியாளர்கள் நிதி, பாதுகாப்பு, பொருளாதார உதவிகள் என ரஷ்யாவின் ஆதரவுடனேயே இயங்குகின்றனர். மோல்டோவாவுடனான உள்நாட்டுப் போரை அடுத்து ரஷ்யா தனது ஆயிரத்து 500 வீரர்களை அமைதிப்படையாக அங்குநிறுத்தியிருக்கிறது.

உக்ரைனின் தென்மேற்குப் பகுதியைக் கைப்பற்றுவதன்மூலம் அங்கிருந்து டிரான்ஸ்னிஸ்ட்ரியாவுக்கான தரைப் பாதை ஒன்றை நிறுவி மோல்டோவா வரை போரை விஸ்தரிப்பது புடினின் திட்டம் என்று உக்ரைன்குற்றம் சுமத்துகிறது.

——————————————————————

-பாரிஸிலிருந்து குமாரதாஸன். 26-04-2022

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.