இலங்கை பிரதான செய்திகள்

ரணிலுடன் பங்காளியாக முடியாது – மனோ. ரணில் விலைபோய்விட்டார் – ராதா.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மேலும், அந்த அரசை உடனடியாக காலில் இழுத்து வீழ்த்தும் எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கவும் மாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.

பொது மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு குறைந்தபட்ச தீர்வுகளை காண புதிய அரசுக்கு அவகாசம் தேவை என்பதை நாம் ஏற்கிறோம்.

தமது அரசில் பங்கேற்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க எமக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்புக்கு நன்றி கூறி, கொள்கை அடிப்படையில் அதை நாம் நாகரீகமாக மறுத்து விட்டோம்.

ஆனால் அதற்காக நாம் கட்சி அரசியல் செய்து கூச்சல், குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை. வாழ்வாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க அவரால் இயன்றதை பிரதமர் செய்யட்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூட்டணியின் முடிவை அறிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க, எமது முன்னாள் பிரதமர். அவரது பலமும், பலவீனமும் எமக்கு நன்கு தெரியும். பலவீனம் பற்றி இப்போது பேசி ஜனரஞ்சக அரசியல் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணியில் எவரும் விரும்பவில்லை.

சர்வதேச தொடர்பாடல் தொடர்பான, ரணிலின் பலம் மூலம் நாட்டுக்கு நன்மை நடக்குமாயின் அதை நாம் முழு மனதுடன் வரவேற்கிறோம்.

இன்று நாட்டில் உணவு இல்லை. மருந்து இல்லை. எரிவாயு இல்லை. எரிநெய் இல்லை. உரம் இல்லை. மின்சாரம் இல்லை.

இவற்றுக்கு குறைந்தபட்ச தீர்வுகளையாவது அவர் தரவேண்டும். பிரதமர் அதை செய்யட்டும். அதற்கு பொறுப்புள்ள கட்சியாக நாம் இடம் கொடுப்போம்.

ஆகவே இன்றைய சூழலில், பாராளுமன்றத்தில் அவரது அரசின் காலை இழுத்து விடும் எந்தவொரு முயற்சியையும் நாம் ஆதரிக்க மாட்டோம்.

நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. நமது நாடு வாங்கியுள்ள கடன்களை உரிய காலத்தில் திருப்பி செலுத்த முடியாதுள்ளது. ஆகவே கடன் தந்தோரிடம் பேசி கடன் திருப்பி செலுத்துவதை மறு அட்டவணை படுத்த வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளை பெற அமெரிக்க டொலர் இல்லாமல் உள்ளது. இதற்காக நட்பு நாடுகளிடம் கடன்வழி உதவிகளை, நாணய மாற்று உதவிகளை பெற வேண்டும். இந்தியா இவற்றை ஏற்கனவே வழங்கி வருகிறது.

இவை இன்னமும் அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே உதவி தரும் நட்பு நாட்டு குழுமம் (Consortium) ஒன்றை ஏற்படுத்த பிரதமர் முயற்சி செய்கிறார். இது நல்லது. வரிகொள்கை சீரமைக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்புரீதியாக, குறைந்தபட்சம், 20 ஐ வாபஸ் வாங்கி, மீண்டும் 19 ஐ கொண்டு வர வேண்டும். நாட்டின் குரலுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக ஒரு கால அட்டவணை தயாராக வேண்டும். இனிமேல் ராஜபக்சர்களுக்கு இந்நாட்டு அரசியலில் இடம் தர மக்கள் தயாரில்லை. இதை பிரதமர் புரிந்துக்கொண்டுள்ளார் என நம்புகிறோம்.

ரணில் விக்ரமசிங்க விலைபோய்விட்டார் அவருடன் சேர்ந்து கூத்தடிக்க முடியாது!

“ரணில் விக்ரமசிங்க விலைபோய்விட்டார். அவர் ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். எனவே, அவருக்கு தற்போது ஆதரவு வழங்கமுடியாது.” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

நுவரெலியாவில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.

“ரணில் விக்ரமசிங்க இந்நாட்டில் 5 தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர். இம்முறை 6 ஆவது தடவையாகவும் பதவியேற்றுள்ளார். எனினும், எந்தவொருமுறையும் தனது பதவி காலத்தை அவர் முழுமையாக பூர்த்தி செய்தது கிடையாது.

கடந்த பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவால் 20 ஆயிரம் வாக்குகளைக்கூட பெறமுடியாமல் போனது. தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்தார். அவருக்கு மக்கள் ஆணை இல்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கை. அந்த கோரிக்கையை ஏற்றே ஐக்கிய மக்கள் சக்தி பிரதமர் பதவியை ஏற்கவில்லை.

ஜனாதிபதி பதவி விலகினால்தான் ஆட்சி பொறுப்பேற்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஜே.வி.பியும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளது.

ஆனால் ராஜபக்சக்களுடன் ரணில் இணைந்துள்ளார்.மொட்டு கட்சி ஆட்சிதான் வரபோகின்றது. ராஜபக்ச போய், ரணில் வந்துள்ளார். இதுதான் ஏற்பட்டுள்ள மாற்றம். இதனை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

பாராளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி கூடும்போது, ரணிலுக்கு பெரும்பான்மை உள்ளதா என்பது தெரியவரும். புதிய அரசில் இணையமாட்டோம்.

அமைச்சு பதவிகளை ஏற்கமாட்டோம். எதிரணியில் இருந்து செயற்படுவோம். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். ரணில் விலைபோய்விட்டார். ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். இவருடன் இணைந்து கூத்தடிக்கமுடியாது.”என்றார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.