இந்தியா பிரதான செய்திகள்

பேரறிவாளன் விடுதலை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142 ஆவது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் தீர்ப்பு வழங்கி உள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 2014 இல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
 

இவர்களின் கருணை மனு அப்போது நிலுவையில் இருந்தது. நீண்ட காலம் கருணை மனு நிலுவையில் இருப்பது அநீதிக்கு சமமானது. தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேரறிவாளன் 2016 இல் மனுதாக்கல் செய்து, அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்.

விசாரணை தமிழ்நாடு அரசு இயற்றிய தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டார். தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தை தமிழ்நாடு ஆளுநர் ஏற்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் பேரறிவாளவன் மனுதாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களாக வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி விசாரணை முடிந்தது.

தமிழ்நாடு அரசு வாதம் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு வைத்த வாதத்தில், தண்டனை கைதி ஆயுள் தண்டனை பெற்று இருக்கிறார். சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் சக்தி குடியரசுத் தலைவருக்கு கிடையாது . அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது. ஆளுநர் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டவர். அவர் அதில் முடிவு எடுக்க வேண்டும். மாறாக 3 வருடமாக ஒரு முடிவை கிடப்பில் போட கூடாது. ஆயுள் தண்டனையை விடுதலை செய்யும் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது. இந்த விவகாரத்தில் அவர்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படையை அழித்துவிட்டனர். கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என எங்கும் குறிப்பிடப்படவில்லை, என்று தமிழ்நாடு அரசு வாதம் வைத்தது.

மத்திய அரசு வாதம் இதில் மத்திய அரசு வைத்த வாதத்தில், பேரறிவாளன் வழக்கில் தண்டனை குறைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. ஏற்கெனவே அவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுவிட்டது. அவருக்கு ஏற்கனவே ஒரு நீதி சலுகை வழங்கப்பட்டுவிட்டது. இதனால் மீண்டும் அவரின் தண்டனையை குறைக்க கூடாது. இந்த வழக்கில் மத்திய புலானய்வு அமைப்பு விசாரித்த வழக்கு. இதன் காரணமாக அதில் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கவே அதிகாரம் உள்ளது. ஆளுநர் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு இந்த மனுவை அனுப்பிவிட்டார். இதனால் அவர்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்று வாதம் வைத்தது.

உச்ச நீதிமன்றம் இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வைத்த வாதத்தில், ஆளுநர் எப்படி மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். பேரறிவாளன் ஆயுள் தண்டனை கைதி என்பதால் அவரின் விடுதலையில் ஆளுநர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறு. இந்திய கூட்டாச்சி தத்துவத்திற்கே இது எதிரானது. பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற அதிகார மோதலுக்கு இடையில் பேரறிவாளன் ஏன் சிக்கி தவிக்க வேண்டும். அவரை ஏன் நாங்களே விடுதலை செய்ய கூடாது . அமைச்சரவை முடிவு எடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்க போகிறோம், என்று கூறியது.

தீர்ப்பு

பேரறிவாளன் ஏற்கெனவே சிறையில் 30 வருடம் இருந்துவிட்டார். அவர் அங்கேயே படித்தும் விட்டார். அவரின் நடத்தையில் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் விடுதலை செய்யும் வரை காத்திருக்காமல் நாங்களே ஏன் விடுதலை செய்ய கூடாது? என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநருக்கும் கடுமையான கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

விடுதலை

உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றம் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதாகும். நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், பேரறிவாளன் வழக்கில் ஆளுநர் செய்த தாமதம் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டது. அவரின் விடுதலை மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியது. 28 மாதங்கள் இதில் முடிவு எடுக்காமல் இருந்தது தவறு. அவர் காலதாமதம் செய்தது தவறு. இதனால் அவரை விடுதலை செய்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.