இலங்கை பிரதான செய்திகள்

இரண்டாம் உலக போரும், ஜெயவர்தனவும் மருமகன் ரணிலும் உதவும் ஜப்பானும்!


இலங்கை பொருளாதார நெருக்கடியில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன.

இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்த தருணத்தில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை செய்திருந்தாலும், ஜப்பான் அந்த சந்தர்ப்பத்தில் பெரிதும் உதவி கரம் நீட்டவில்லை. எனினும், ஜப்பான் தற்போது உதவி கரம் நீட்ட முன்வந்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான உணவு வகைகளை வழங்க ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ராஜபக்ஸ குடும்பம் ஆட்சியில் இருந்த சந்தர்ப்பத்தில், ஜப்பான் இவ்வாறான உதவிகளை வழங்க முன்வரவில்லை. எனினும், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடந்த 12ஆம் தேதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்துக்கொண்டார்.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்ட மறுதினம் அவரை இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதர்கள் உள்ளிட்ட பலர் மரியாதை நிமித்தமாக சந்தித்ததனர். இந்த சந்திப்பின் பின்னர், இலங்கைக்கான ஜப்பான் தூதர் உடனடியாக டோக்யோவுக்கு பயணம் மேற்கொண்டார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து, ஏன் உடனடியாக அவர் ஜப்பான் நோக்கி பயணித்தார் என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டது. அது குறித்து பிபிசி தமிழுக்கு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி கருத்து தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஜப்பானிற்கும் இடையில் உணர்வு ரீதியிலான தொடர்பொன்று உள்ளதாக அவர் கூறுகின்றார்.

இரண்டாவது உலக போரில் ஜப்பான் தோல்வியை அடைந்திருந்தது. இரோசிமா, நாகசாக்கி உள்ளிட்ட பகுதிகள் மீது அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதலை நடத்தி, ஜப்பானை தோல்வி அடைய செய்திருந்தது. இந்த இரண்டாவது உலக போரில் ஜப்பான் பெரிதும் பாதிப்புக்களை சந்தித்திருந்தது. இந்த நிலையில், ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்துள்ளது.

போர் முடிவுக்கு கொண்டு வரப்படும் சந்தர்ப்பங்களில் நடத்தப்படும் மாநாடு, இரண்டாவது உலகப் போர் முடிவடைந்ததன் பின்னர் அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றுள்ளது.

இதன்படி, இரண்டாவது உலக போரில் வெற்றி அடைந்த நாடுகள், தோல்வி அடைந்த நாடான ஜப்பானிடம் நட்டஈட்டை கோரியுள்ளன.

ஜப்பானால் ஈடு செய்ய முடியாத அளவான ஒரு தொகையை அப்போது வெற்றி பெற்ற நாடு, நட்ட ஈடாக கோரியதாக பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.

இவ்வாறு இடம்பெற்ற மாநாட்டில் இலங்கை சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தன கலந்து கொண்டிருந்தார்.

வெற்றி அடைந்த நாடுகள், ஜப்பானிடம் நட்டஈட்டை கோரும் போது, ஜப்பானுக்கு ஆதரவு தெரிவித்து, ஜே.ஆர்.ஜெயவர்தனவே அந்த மாநாட்டில் முதல் முதலாக எழுந்து கருத்து தெரிவித்துள்ளார்.

பௌத்த தர்மத்தில் கூறப்பட்டுள்ள ”வைரயேன், வைரய நோசன்திபே” என ஜே.ஆர்.ஜெயவர்தன, சென் பிரான்சிஸ்கோ மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அதாவது, ‘பகையால், பகையை வெல்ல முடியாது” என ஜே.ஆர்.ஜெயவர்தன கூறியுள்ளார்.

இந்த வசனத்தை கூறி, ஜப்பானுக்கு தற்போது உதவி தேவையே தவிர, ஜப்பானுக்கு மேலும் துன்பங்களை கொடுக்க கூடாது என அவர், அந்த மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் ஜப்பானுக்கு சார்பாக சிறந்ததொரு உரையை அவர் நிகழ்த்தியுள்ளதாக பேராசிரியர் கூறுகின்றார்.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் இந்த உரையை அடுத்து, மேற்குலக நாடுகள் அனைத்தும், ஜப்பானுக்கு அதிகளவிலான உதவிகளை வழங்கியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஜப்பானை மீள கட்டியெழுப்புவதற்காக மேற்குல நாடுகள் அனைத்தும் பல்வேறு வகையிலான உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த நன்றி கடனை, ஜப்பான் எப்போதும் இலங்கைக்கு செய்யும் என பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.

ஜயவர்தனபுர மருத்துவமனை, இசுறுபால, ரூபவாஹினி கூட்டுதாபனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஜப்பான் இலவசமாக ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தில் கட்டிக் கொடுத்ததாகவும் அவர் கூறுகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் மருமகனே, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

இந்த பின்னணியிலேயே, ஜப்பான் இலங்கைக்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும், ஜப்பானிடமிருந்து பெருமளவிலான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.

ரஞ்சன் அருண் பிரசாத்
பிபிசி தமிழுக்காக

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.