
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை (13.07.22) திகதியிட்ட பதவி விலகல் கடிதத்தில் அவர் நேற்று (11.07.22) கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது..
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பதவி விலகலை சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார்.
ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் கையொப்பமிடப்பட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், அவர் அதை சபாநாயகரிடம் கையளிப்பார் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக செய்தி வெளியானது. எனினும், அதனை ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் நிராகரித்ததுடன், அவர், இன்னும் நாட்டில் இருப்பதாகவும், ஆயுதப்படையினரால் அவர் பாதுகாக்கப்படுகிறார் என்றும் டெய்லி மிரருக்கு உறுதிப்படுத்தியது.
ஜூலை 9 ஆர்ப்பாட்டத்துக்கு சற்று முன்பு, ஜனாதிபதி கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து பாதுகாப்புப் படையினரால் வெளியேற்றப்பட்டார். அதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் கடல் எல்லைக்குள் கடற்படைக் கப்பலில் பாதுகாக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், நேற்று காலை 9.30 மணியளவில் முப்படைத் தளபதிகளை ஜனாதிபதி நேரடியாக சந்தித்ததாகவும், அதன்பின்னர் அவர் நாட்டில் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர் நாட்டில் எங்கு இருக்கிறார் என்பது சரியாகத் தெரியவில்லை, ஆனால் அவர் இந்த வாரம் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதுடன், புதிய ஜனாதிபதி பதவியேற்கவும், அனைத்துக் கட்சி அரசாங்கம் அமைக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.
Add Comment