Home இலங்கை இந்து சமுத்திரத்தில் இலங்கையின் பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தல்!

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தல்!

by admin

இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்பது சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டின் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறு அதிக கவனத்தை கொண்டதாக காணப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (ஒகஸ்ட் 17) தெரிவித்தார்.

நாட்டில் காணப்படும் சகல விதமான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டி அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC) ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக நடத்தப்படும் “ஆராய்ச்சிக் கருத்தரங்கம் – 2022´ வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு பாதுகாப்புச் செயலாளர் உரையாற்றினார்.

இந்த கருத்தரங்கு தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதுடன் நாட்டின் நிரந்தரமான அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எதிர்கால சவால்களை எதிர்கொள்வதிலும் பங்களிக்கும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி கருத்தரங்கிற்கு வருகை தந்த பிரதம அதிதியான பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன மற்றும் பிரதம பேச்சாளராக கலந்துக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகிய இருவரையும் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வரவேற்றார்.

பாதுகாப்பு ஆராய்ச்சியை மேம்படுத்தவும், தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான ஆராய்ச்சி சிந்தனைகளை ஆராய்வதற்கான சூழலை உருவாக்கவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த முதலாவது ஆராய்ச்சி கருத்தரங்கு ´ பல்நிலை பாதுகாப்பு இயக்கவியலை ஆராய்தல்´ எனும் தொனிப்பொருளின் கீழ் இரத்மலானையிலுள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டதாரி கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஒரு நாட்டின் பிரஜைகள், பொருளாதாரம் மற்றும் பிற நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நாட்டின் அரசாங்கத்தின் திறன் என தேசிய பாதுகாப்பை வரையறுத்த பாதுகாப்பு செயலாளர், நிகழ்காலத்தில் இராணுவமல்லாத தன்மையின் பின்னணியில் பாதுகாப்பின் நோக்கம் பரந்தளவில் பொருளாதார பாதுகாப்பு, அரசியல் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, மனித பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதைச் சுற்றியே உள்ளது எனக்கூறினார்.

அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ பலம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கங்கள் பயன்படுத்தும் பல்வேறு தந்திரோபாய முறைகளை சுட்டிக்காட்டிய அவர். அதன் பாரம்பரியமாக மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான இராணுவப் பாதுகாப்பு, வெளிப்புற படையெடுப்புகள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சிகளிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த ஒரு நிகழ்வான குடிமகனின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அதிக மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நோக்கி அமைதியாக நகர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

´தேசிய பாதுகாப்பு´ மற்றும் ´மனித பாதுகாப்பு´ ஆகியவற்றுக்கு இடையேயான கருத்தியல் வளர்ச்சிகள் மற்றும் வேறுபாடுகளை மேற்கோள் காட்டி, நாட்டின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு, தேசிய பாதுகாப்பு இயக்கவியலில் இன்று உலகளாவிய தொற்றுநோய்களை நிர்வகித்தல், காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் மாற்றியமைத்தல், சுத்தமான நீரைப் பேணுதல், நம்பகமான உணவு விநியோகத்தை பராமரித்தல், தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் சொத்துக்களை பாதுகாத்தல், பொருளாதார மற்றும் அரசியல் இக்கட்டான சூழ்நிலைகளைக் கையாள்வது மற்றும் பல சர்வதேச காரணிகளின் தாக்கத்திற்கு மத்தியில் அரசின் இறையாண்மையைப் பாதுகாக்கும் திறன் ஆகியவற்றையும் உள்ளடக்கும் எனவும் தெரிவித்தார்.

ஆயுத மற்றும் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமான மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல், புவி வெப்பமடைதல் மற்றும் அதன் விளைவாக கடல் மட்ட உயர்வு மற்றும் வானிலை மாற்றங்கள், அதிகரித்த கடல் மாசுபாடு மற்றும் கடல் சுற்றுச்சூழல் தாக்கம், குறையும் மீன்வளம், கடல் வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை அதிகரிப்பு, இயற்கை அனர்த்தங்களினால் இந்து பெருங்கடலில் சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஆகியன இந்து சமுத்திரத்தில் இலங்கையின் பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தலைமை உரையை ஆற்றிய லலித் வீரதுங்க நவீன பாதுகாப்பு அமைப்புகள் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மாத்திரமன்றி இராணுவம் அல்லாத மற்றும் கலப்பு அச்சுறுத்தல்களுக்கும் முகம்கொடுக்கக்கூடியளவில் அமைந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

மூன்று அமர்வுகளைக் கொண்ட இக்கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வின் போது கல்லூரியின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கருணாசேகர வரவேற்புரையை நிகழ்த்தினார்.

கல்வியாளர்கள், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடையே இணைப்பு வலையமைப்பை வளர்ப்பதற்கும், இன்றைய பாதுகாப்புச் சவால்களுடன் தொடர்புடைய அறிவுசார்ந்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் இது போன்ற ஆராய்ச்சிக் கருத்தரங்கங்கள் உதவியாக அமையும்.

இந்நிகழ்வின் போது பாதுகாப்பு செயலாருக்கும் லலித் வீரதுங்க அவர்களுக்கும் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கருணாசேகர நினைவுச் சின்னங்களை வழங்கினார்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர், வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு இணைப்பாளர்கள், ஆலோசகர்கள், புத்திஜீவிகள், சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More