Home இலங்கை ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னணியில் நடக்கும் போராட்டங்கள்! நிலாந்தன்!

ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னணியில் நடக்கும் போராட்டங்கள்! நிலாந்தன்!

by admin

இம்மாதம் 10ஆம் திகதியிலிருந்து சுமந்திரனின் தலைமையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிராக ஒரு தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னணியில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்திற்கு “காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டைவரை” என்று பெயரிடப்பட்டுள்ளது.


பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக யார் போராடினாலும் அதை ஆதரிக்க வேண்டும்.எனினும்,இப்போராட்டம் தொடர்பாக இப்போதுள்ள அரசியற்சூழலின் பின்னணியில் சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது.


கேள்வி ஒன்று, போராட்டத்தின் தலைப்புப் பற்றியது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டப் பேரணிக்குப் பின் அதே பாணியில் பெயரிடப்பட்ட மூன்றாவது போராட்டம் இது. P2Pபேரணிக்கு நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வெவ்வேறு தரப்புகள் உரிமை கோருகின்றன. அதில் சுமந்திரன் சாணக்கியன் போன்றோரும் ஒரு தரப்பு. அந்தப்பெயர் தங்களுக்குரியது என்பதனை காட்டும் விதத்தில் மீண்டும் மீண்டும் சுமந்திரன் தான் ஒழுங்கு செய்யும் போராட்டங்களுக்கு இது போன்ற பெயர்களை வைத்து வருகிறாரா?தமிழக மீனவர்களுக்கு எதிராக அவர் தொடங்கிய போராட்டத்துக்கு முல்லைத்தீவு தொடக்கம் பருத்தித்துறைவரை என்று பெயரிட்டிருந்தார். அதன்பின் இப்பொழுது காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டைவரை என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் போராட்டத்தலைப்பின் ஆங்கிலச் சுருக்கத்தை வெள்ளை எழுத்தில் கறுப்பு பட்டியில் பதித்து அப்பட்டியை தங்கள் தலைகளில் அணிந்து போராடுவது. இதுபோன்ற செயல்களின்மூலம் P2P போராட்டத்தின் உரித்து தமக்கே அதிகம் என்று சுமந்திரனும் அவரை சேர்ந்தவர்களும் சொல்ல முற்படுகிறார்களா?


கேள்வி இரண்டு,ஏற்கனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் ஒரு போராட்டத்தை சுமந்திரன் தலைமை தாங்கி முன்னெடுத்தார்.யாழ்.நகரப் பகுதியில் தொடங்கிய அந்தப் போராட்டம் தென்னிலங்கை,மாத்தறைவரை சென்றது.தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களும் அதற்கு ஒத்துழைத்தார்கள்.அதில் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களுக்கு என்ன நடந்தது?அவை யாரிடம் கையளிக்கப்பட்டன?அந்தப் போராட்டத்தைப் போலவே இப்பொழுது தொடங்கப்பட்டிருக்கும் போராட்டமும் கமுக்கமாக முடிந்து விடுமா?


கேள்வி மூன்று, இந்தப் போராட்டம் தொடங்கிய அன்று கிட்டத்தட்ட 60-க்கும் குறையாத ஆட்களே அதில் பங்குபற்றினார்கள்.அதாவது மக்கள் மயப்படாத ஒரு போராட்டம்.நாடாளுமன்ற உறுப்பினர்கள்,குறிப்பாக ராவுப் ஹக்கீம் தொழிற்சங்கவாதியான ஸ்ராலின் போன்றோர் பங்குபற்றிய ஒரு போராட்டத்தின் முதல்நாள் அன்று மிகக்குறைந்த ஆட்களே கலந்து கொண்டமை என்பது எதைக் காட்டுகிறது? அதை ஒரு மக்கள் மயப்பட்ட பெருந்திரள் போராட்டமாக முன்னெடுக்கவேண்டும் என்ற திட்டம் எதுவும் ஏற்பாட்டாளர்களிடம் இருக்கவில்லையா?


இந்த கேள்வியை மேலும் விரித்துச் செல்லலாம். சில மாதங்களுக்கு முன்புவரை கொழும்பில் காலிமுகத்திடலில் படைப்புத்திறனோடு எப்படிப் போராடலாம் என்பதற்கு சிங்களமக்கள் பல முன்னுதாரணங்களை காட்டியிருக்கிறார்கள். படைப்புத்திறன் மிக்க அறவழிப் போராட்டம் அது.அந்தப் போராட்டத்தில் அடிப்படையான பலவீனங்கள் உண்டு. தமிழ்மக்களுக்கு அந்தப் போராட்டம் தொடர்பில் கேள்விகள் உண்டு.ஆனாலும் அந்தப் போராட்டத்தில் படைப்புத்திறன் இருந்தது.புதுமை இருந்தது. அதில் பல பிரபல படைப்பாளிகள் பங்குபற்றினார்கள்.புத்திஜீவிகள்,சமூகப் பெரியார்கள்,மதப் பெரியார்கள் பங்குபற்றினார்கள்.எனவே அது சமூகத்தின் எல்லாத் தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் சக்திமிக்கதாக காணப்பட்டது.கொழும்பில் ராஜதந்திரிகளின் வதிவிடங்கள் அமைந்திருக்கும் ஒரு பகுதியில் உலகத்தின் கவனத்தையும் ஊடகங்களின் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் அந்தப் போராட்டம் படைப்புத்திறனை வெளிப்படுத்தியது.


அப்போராட்டத்தால் அருட்டப்பட்டு மட்டக்களப்பில் காந்தி பூங்காவைச் சூழ்ந்த பகுதிகளில் ஒரு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணியச் செயற்பாட்டாளர்களும் ஏனைய சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து நீதிக் கிராமம் என்று ஒன்றை உருவாக்கினார்கள். எனினும் அரகலய வெளிப்படுத்திய படைப்புத்திறனை தமிழ்க்கிராமம் வெளிப்படுத்தவில்லை. அதில் ஒப்பீட்டளவில் படைப்புத்திறன் குறைவாக இருந்தது. அது சமூகத்துக்குள் நொதிக்கத் தவறியது. அதுவும் மக்கள் மயப்படவில்லை.


தமிழ்ப்பரப்பில் ஏற்கனவே அவ்வாறு மக்கள்மயப்படாத போராட்டங்கள் உண்டு. காணாமல் போகச் செய்யப்பட்டோருக்காக உறவினர்கள் நடத்தும் போராட்டம்,அரசியல் கைதிகளுக்கான போராட்டம், காணிகளை மீட்பதற்கான போராட்டம் போன்ற பல போராட்டங்கள் ஒப்பீட்டுளவில் மக்கள் மயப்படாதவைதான்.அரிதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை அல்லது “எழுகதமிழ்” போன்ற சில போராட்டங்கள் மக்கள் மயப்படுகின்றன.மற்றும்படி தமிழ்ப்பரப்பில் கடந்த 13ஆண்டுகளில் பெரும்பாலான போராட்டங்கள் மக்கள் மயப்படாதவைதான்.போராட்டத்தின் நெருப்பை அணையவிடாமல் பாதுகாத்தோம் என்று கூறித் திருப்திப்படுவதைத்தவிர அதற்குமப்பால் அவை எந்த மக்களுக்கான போராட்டங்களோ அந்த மக்கள்மத்தியில் நொதிப்பை,திரட்சியை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மைநிலை.


இப்படிப்பட்டதோர் அரசியல் பின்னணியில்தான் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையிலுமான போராட்டமும் அதிகம் மக்கள் மயப்படவில்லை.ஆனால்,கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில்,பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான கைது நடவடிக்கைகளை எதிர்த்து,கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மாணவர் அமைப்புக்களும் இணைந்து ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் சுமந்திரன் அணியைக் காணவில்லை.ஆயின் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையிலுமான போராட்டத்தை ஒழுங்குபடுத்தியவர்கள் அதுதொடர்பாக பொருத்தமான மக்கள் தரிசனங்களைக் கொண்டிருக்கவில்லை என்றே தெரிகிறது?
இப்போராட்டம் அரகலயவிடமிருந்து புத்தாக்கத்திறணைக் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இப்போராட்டத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு “மீம்ஸ்” வாய்விட்டு சிரிக்கும் அளவுக்கு படைப்புத்திறன் மிக்கதாக இருந்தது. அதில் ஒரு பட்டா ரக வாகனத்தில் சுமந்திரன் சாரதியின் ஆசனத்தில் இருக்கிறார்.சயந்தன் பின்பெட்டியில் இருந்தபடி எதையோ ஒலிபெருக்கியில் அறிவிக்கின்றார்.அது பழைய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான தெரு வியாபாரிகளின் அறிவிப்பு. போராட்டத்தில் இல்லாத படைப்புத்திறன் போராட்டத்திற்கு எதிரான ஒரு மீம்ஸில் இருந்தமை என்பது சுவாரசியமான ஒரு முரண்.


நாலாவது கேள்வி, சுமந்திரன் ஒரு நாடறிந்த வழக்கறிஞர்.அரகலயவோடு தொடர்ச்சியாக தனது நெருக்கத்தை காண்பித்து வருபவர்.அது சட்ட மறுப்பாக தோன்றிய ஒரு போராட்டம். அந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் வன்முறைகள் வெடித்தன.அந்த வன்முறைகளுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் அரசாங்கமோ அப்போராட்டத்தை சட்டத்தின் தராசில் வைத்து நிறுக்கப் பார்க்கின்றது. அதனால்தான் போராட்டத்தின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தவிடயத்தில் போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்து அந்தப் போராட்டத்திற்கு ஆசிர்வாதத்தை வழங்கிய சட்டத்தரணிகள் அமைப்பானது ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தை நசுக்கத் தொடங்கியபொழுது எதிர்பார்த்த அளவுக்கு எதிர்ப்பை காட்டவில்லை.


அதைவிட முக்கியமான ஒரு விடயம்.சட்டமறுப்பாக தோன்றிய ஒரு போராட்டத்தை சட்டத்தின் தராசில் வைத்து நிறுக்கும் அரசாங்கத்திற்கு அது தொடர்பில் எதிர்ப்பு எதையும் சட்டத்தரணிகள் சங்கம் பெரியளவில் காட்டவில்லை.சட்டமறுப்பாக எழுச்சி பெற்ற ஒரு போராட்டத்தை சட்டக்கண் கொண்டு பார்த்தால்,ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்தது குற்றம். ஜனாதிபதியின் கழிப்பறைக்குள் நுழைந்தது குற்றம் நீச்சல் தடாகத்தில் குளித்தது குற்றம் அவருடைய சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்தது குற்றம் தன் படம் எடுத்தது குற்றம் என்று கூறி இருந்தால் குற்றம் நின்றால் குற்றம்; உறங்கினால் குற்றம் என்று எல்லாரையும் தூக்கி உள்ளே போடலாம். அதுதான் இப்பொழுது நடக்கின்றது. இந்த விடயத்தில் அது சட்ட மறுப்பாக தோன்றிய ஒரு போராட்டம் அதனை சட்டத்தின் தராசில் வைத்து நிறுப்பது சரியா என்ற அடிப்படை கோட்பாட்டுப் பிரச்சினையை சட்டத்தரணிகள் ஏன் எழுப்பவில்லை?


காந்தியின் அறவழிப் போராட்டத்தை சட்டத்தின் தராசில் வைத்துப் நிறுத்தால் காந்தி வாழ்நாள் முழுவதும் சிறையில்தான் இருந்திருக்க வேண்டும். அப்படித்தான் மார்ட்டின் லூதரையோ அல்லது போலந்தில் கொம்யூனிசத்திற்கு எதிராக போராடிய லெட் வலேசாவையோ அல்லது சில மாதங்களுக்கு முன்பு வேளாண் மசோதாவை எதிர்த்துப் போராடிய டெல்லி விவசாயிகளையோ எல்லாச் சட்டங்களின் கீழும் சிறையில் தள்ளமுடியும். எனவே சட்ட மறுப்பை சட்டத் தராசில் வைத்து நிறுக்கலாமா?என்ற அடிப்படையான கோட்பாட்டு விவகாரத்தை முன்வைத்து அரசாங்கத்தோடு வாதாட ஏன் மூத்த வழக்கறிஞர்கள் கூட்டாக முன்வரவில்லை ?அண்மையில் ஒரு பெண் ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி கூறுகிறார்.எல்லாம் சட்டப்படிதான் நடக்கிறது என்று.


ஐந்தாவது கேள்வி, இந்தப் போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதற்கு முதலில் தமிழரசு கட்சி தனது உறுப்பினர்கள் தொண்டர்கள் மத்தியில் இது தொடர்பான தேவையான விழிப்பூட்டலை செய்திருக்கின்றதா? இது தொடர்பாக கட்சியின் உயர்மட்டத்தில் கூடி முடிவெடுக்கப்படவில்லை என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.அது உண்மையா?அதனால்தான் அவர் இப் போராட்டத்தின் தொடக்க நிகழ்வில் பங்குபற்றவில்லை என்றும் கூறியிருக்கிறார்.அதாவது கட்சிக்குள் தனது முதன்மையைப் பலப்படுத்த முற்படும் ஒரு அணி இப்போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறதா?


எனவே தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெரிகிறது. ஜெனிவா கூட்டத்தொடர் காலம் என்பது தமிழ்அரசியலில் ஒப்பீட்டளவில் அதிகரித்த ஜனநாயக போராட்டங்களுக்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டம் ஆகும்.ஐநாவின் கவனக்குவிப்புக்குள் இலங்கைத்தீவு வரும் ஒரு காலகட்டம் என்பதனால் அக்காலப் பகுதியில் தமிழ்மக்கள் ஒப்பீட்டளவில் அதிகரித்த போராட்டங்களை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும். கடந்த 13 ஆண்டு கால தாயக மற்றும் புலம்பெயர் யதார்த்தம் அதுதான்.


பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது இப்பொழுது இலங்கைத்தீவின் மூன்று இனத்தவர்களுக்கும் எதிராகத் திரும்பியிருக்கிறது. அதாவது இலங்கைத்தீவின் மூன்று இனத்தவர்கள் மத்தியிலும் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களை ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கும் விவகாரமாக அது காணப்படுகிறது.இவ்வாறு மூன்று இனத்தவர்களையும் ஒன்றாக்கக்கூடிய ஒரு போராட்டத்தை,மக்கள் மயப்படுத்தவில்லை என்று சொன்னால் உலகசமூகத்துக்கு எப்படிப்பட்ட ஒரு செய்தி போய்ச் சேரும் ?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More