Home இலங்கை போதைப் பொருளைத் தடுக்க ஒரு படைப்பிரிவு? – நிலாந்தன்.

போதைப் பொருளைத் தடுக்க ஒரு படைப்பிரிவு? – நிலாந்தன்.

by admin

“வடக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கஞ்சா தொகையாகக் கைப்பற்றப்பட்டது. இந்தியாவிலிருந்து யாழ்ப்பணப் பகுதிக்கு மிகவும் பிரமாண்டமான முறையில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இளம்சந்ததியினரும் அவற்றிற்கு அடிமையாகின்ற தன்மையானது வெகுவாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த துர்ப்பாக்கிய நிலையினை இல்லாதொழிப்பதனை நோக்கமாகக் கொண்டு யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேயசுந்தர அவர்களினுடைய தலைமையில் விசேட படைப் பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மற்றும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு அதனூடாக யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்களை தடுத்தல், கைதுசெய்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அதனுடன் தெடர்புள்ள நபர்களை நீதி முன்நிறுத்துதல் போன்ற செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” இது பலாலி படைத் தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பின் ஒருபகுதி.

அதாவது முடிவில் படைத்தரப்பும் போதைப் பொருளுக்கு எதிராக களத்தில் இறங்கிவிட்டது என்று பொருள்.தமிழ்மக்கள் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் படைத்தரப்பு அவ்வாறு இறங்கும்.ஏற்கனவே அவர்கள் சந்திகளில் நிற்கிறார்கள். ஏற்கனவே எஸ்.டி.எப் களத்தில் இறங்கிவிட்டது. சிலநாட்களுக்கு முன் எஸ்.ரி.எப் வவுனியாவில் தானும் களமிறக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. படைத்தரப்பு இயற்கை அனர்த்தக்கங்களின் போதும் பெருந்தொற்று நோயின் போதும் களத்தில் இறங்கியது. இலங்கைத் தீவில் மேலிருந்து கீழ்நோக்கிய மிகப் பலமான நிறுவன கட்டமைப்பை படைத்தரப்பு கொண்டிருக்கிறது. இலங்கை நாட்டில் அதிக ஆளணியையும் அதிக வளங்களையும் கொண்ட அரசு உபகரணம் அதுதான். எனவே இது போன்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் அவர்களை ஈடுபடுத்தும்.

ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால்,தீவின் மொத்த படைக்கட்டமைப்பில் மூன்றில் இரண்டு பகுதி தமிழ் பகுதிகளின் நிலை கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.தமிழ் கடல் பெருமளவுக்கு ஸ்ரீலங்கா கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. நாட்டின் படைக் கட்டமைப்பின் மூன்றில் இரண்டு பகுதி நிறுத்தப்பட்டிருக்கும் தமிழ் பகுதிக்குள் அதிகளவு போதைப்பொருள் நுகர்ப்படுகிறது என்றால் அதற்கு அப்பகுதியை கட்டுப்படுத்தும் படைத்தரப்பும் பதில் கூறவேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் கேட்கிறார்கள்.

அண்மையில் இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கருத்து தெரிவித்திருந்தார். மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் பின்வருமாறு கூறியுள்ளார்…”இதனை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிறது. அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்”. அதாவது போதைப்பொருள் வலைப் பின்னலுக்கும் குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கும் படைத்தரப்பு அல்லது காவல்துறையின் மீது அவர் மறைமுகமாக குற்றம் சாட்டுகிறார். இப்படிப்பட்ட ஒரு பின்னணிக்குள் படைத்தரப்பு போதைப் பொருளுக்கு எதிராக களமிறங்கியிருக்கிறது.

அவர்கள் களமிறங்குவதற்கு முன்னரே கடந்த சில வாரங்களாக தமிழ்ப் பகுதிகளில் போலீஸும் அதிரடிப் படையும் ஆங்காங்கே போதைப் பொருள் வலைப்பின்னலுக்கு எதிராக முன்னெடுத்துவரும் முறியடிப்பு நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் ஒப்பிட்டுளவில் அதிகரித்த அளவில் வெளிவருகின்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனையாளர்களை,விநியோகஸ்தர்களைக் கைது செய்வது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளிவருகின்றன.கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களோடு போலீசார் காட்சியளிக்கும் படங்களும் ஊடகங்களில் பிரசுரிக்கப்படுகின்றன. இச்செய்திகளை தொகுத்துப்பார்த்தால் போதைப்பொருளுக்கு எதிரான முறியடிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதான ஒரு தோற்றம் நமக்கு கிடைக்கும்.

ஆனால் அரசின் சட்டம் ஒழுங்கைப் பேணும் அமைப்புகளால் மட்டும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு விடயம் இதுவல்ல என்பதனை நான் ஏற்கனவே பல தடவை எனது கட்டுரைகளில் சுட்டிக்காட்டியுள்ளேன். தமிழ்மக்களின் தேசிய இருப்பை சிதைக்கும் உள்நோக்கத்தோடு போதைப்பொருள் விநியோகம் திட்டமிட்டு ஊக்குவிக்கப்படுவதாக ஒரு சந்தேகம் பரவலாக உண்டு. சுமந்திரனும் சிறீதரனும் கூறுவதுபோல அது மேலிருந்து கீழ்நோக்கிய ஒரு திட்டமிட்ட செயலாக இருக்கக்கூடும்.ஆனால் அதை எதிர்கொள்வதற்கு கீழிருந்து மேல் நோக்கிய ஒரு கட்டமைப்பை,சுய கவசங்களை தமிழ்மக்கள் கட்டியெழுப்ப வேண்டும். இதுதொடர்பில் கீழிருந்து மேல் நோக்கிய விழிப்பைக் கட்டியெழுப்ப வேண்டும்.

எனது நண்பர் ஒருவர் கூறுவதுபோல தமிழ்பகுதிகளில் கிராம மட்டத்தில் படைப்புலனாய்வுத்துறை வைத்திருப்பது போன்ற வினைத்திறன் மிக்க மேலிருந்து கீழ்நோக்கிய வலைப்பின்னல் நமது கட்சிகளிடமே கிடையாது.

தமிழ் இளையோர் மத்தியில் குறிப்பாக பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பதற்கு தனிய மேலிருந்து கீழ்நோக்கிய கட்டமைப்பை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது.மாறாக கீழிருந்து மேல் நோக்கிய சுயகவசங்களை தமிழ் மக்கள் கட்டி எழுப்ப வேண்டும். அதை தனிய மருத்துவர்களால் மட்டும் செய்யமுடியாது என்பதனைத்தான் அண்மை காலங்களில் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் நமக்குக் காட்டுகின்றன. மருத்துவர்கள் இதில் ஒரு பகுதிதான். மருத்துவ சிகிச்சைக்குமப்பால் ஒரு கூட்டுச்சிகிச்சை தேவைப்படுகிறது. அதைத் தனிய மருத்துவர்கள் மட்டும் செய்யமுடியாது. இளைய தலைமுறைக்கு தலைமை தாங்க இலட்சியப் பாங்கான தலைவர்கள் வேண்டும். இளைய தலைமுறையை இலட்சியத்தை நோக்கிச் செலுத்தப்பட்ட அம்புகளாக மாற்றினால் இது போன்ற துஷ்பிரயோகங்களுக்கு இடமிருக்காது. அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், சமயப் பெரியோர், கல்விச்சமூகம், படைப்பாளிகள்,ஊடகங்கள் என்று எல்லாத்தளங்களிலும் இருக்கக்கூடிய செயல்பாட்டாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அதை ஒரு கூட்டுச் செயற்பாடாக முன்னெடுக்க வேண்டும்.அக்கூட்டுச் செயற்பாட்டுக்கு அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் செயற்பாட்டாளர்களோ தலைமை தாங்க வேண்டும். ஆனால் அவ்வாறு தலைமை தாங்கும் தகுதியோ தரிசனமோ பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளுக்கு இல்லை,பலமான குடிமக்கள் சமூகமும் இல்லை என்ற வெற்றிடத்தில்தான் போதைப் பொருள் பாவனை அதிகரிக்கிறது.

இதை ஒரு குற்றச்செயலாக மட்டும் கருதி அதற்குரிய முறியடிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. மாறாக இதை ஒரு கூட்டுநோயாக ஒரு பண்பாட்டு வெற்றிடமாக, ஒரு அரசியல் தலைமைத்துவ வெற்றிடமாக, உள்ளூர் தலைமைத்துவ வெற்றிடமாக, ஆன்மீக வறட்சியாக, இன்னபிறவாக தொகுத்துப் பார்க்கவேண்டும். இதில் தனிய மேலிருந்து கீழ் நோக்கிய கட்டமைப்பை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்காமல் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு மத நிறுவனமும் ஒவ்வொரு பாடசாலையும் தங்களுக்குள்ள கூட்டுப் பொறுப்பை உணரவேண்டும். வீட்டில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே இறுக்கமான பாசப்பிணைப்பு இருந்திருந்தால் இடையில் ஒரு போதைப்பொருள் வியாபாரி நுழைந்திருக்க முடியாது. பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே அல்லது பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே அல்லது பிள்ளைகளுக்கும் உள்ளூர் தலைவர்களுக்கும் இடையே அல்லது பிள்ளைகளுக்கும் சமயப் பெரியாருக்கு இடையே இடைவெளி அதிகரிக்கும்பொழுது இதுபோன்ற துஷ்பிரயோகங்களும் அதிகரிக்கும். அந்த இடைவெளி எங்கிருந்து வந்தது? என்று கண்டுபிடிக்க வேண்டும்.

போட்டிக்கல்வி முறைமையானது பாடசாலைகளின் மதிப்பைக் குறைத்துவிட்டது.இதனால் பாடசாலை ஆசிரியர்கள் பிள்ளைகளின்மீது செல்வாக்குச் செலுத்துவதில் வரையறைகள் அதிகரிக்கின்றன.

அண்மையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாணப் பிரிவும் யாழ் போதனா வைத்தியசாலையின் சம்பந்தப்பட்ட பிரிவும் இணைந்து இது தொடர்பான அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தன. ஒரு பள்ளிக்கூடப் பிள்ளை போதைப்பொருள் பாவனையாளராக இருந்தால் அதை கண்டுபிடிப்பதற்கு வேண்டிய அறிகுறிகளை அவர்கள் விவரமாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் பிரச்சினை என்னவென்றால்,ஒரு பிள்ளையிடம் அவ்வாறான மாற்றங்கள் ஏற்படுவதனை யார் கவனிப்பது? அதைப் பெற்றோரும் ஆசிரியர்களும்தான் கவனிக்க வேண்டும்.வீட்டில் உள்ள மூத்த தலைமுறைதான் அதைச் செய்ய வேண்டும். ஆனால் இன்றைக்கு மூத்ததலைமுறையின் கவனத்தைக் கலைப்பதற்கு பல விடியங்கள் வந்துவிட்டன. குறிப்பாக திரைத் தொடர்கள், கைபேசிச் செயலிகள் போன்றவற்றை கூறலாம்.ஒரு முதிய தலைமுறை திரைத்தொடர்களின் கைதியாகிவிட்டது. நடுத்தர வயதுக்காரர்கள் கைபேசிகளின் கைதிகளாகி விட்டார்கள்.இது பொழுது போக்கைகளின் காலம். மூத்ததலைமுறை பொழுதுபோக்குச் சாதனங்களில் மூழ்கிக் கிடக்கும் பொழுது, இளைய தலைமுறை எங்கே போகிறது ?என்ன செய்கிறது? யாருடன் தொடர்பை வைத்திருக்கின்றது? போன்றவற்றை கவனிப்பதற்கான நேரங்கள் குறைகின்றன. இவ்வாறான தொடர்ச்சியான அவதானிப்பும் கவனிப்பும் இல்லாத வெற்றிடத்தில்தான் போதைப்பொருள் நுழைகிறது.வாள்கள் நுழைகின்றன.

யாழ்.போதனா மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அந்தப் பிரசுரத்தில் காணப்படும் குணக்குறிகளை தொடர்ச்சியாகக் கவனிப்பது என்று சொன்னால் பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் தொடர்ச்சியாகக் கவனிக்க வேண்டும்.அதாவது பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும்.பிள்ளைகளுக்கும் ஆசிரியருக்கும் இடையே அதிகபட்ச தொடர்பாடல் இருக்க வேண்டும். எனவே போதைப் பொருட்களுக்கு எதிரான சுயகவசங்களை இங்கிருந்துதான் கட்டியெழுப்பத் தொடங்க வேண்டும்.

தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசம் என்று கூறுகிறார்கள்.ஒரு தேசியஇனம் என்ற அடிப்படையில் தமக்கு சுயநிர்ணய உரிமை இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு சமூகமாக,பலமான ஒரு திரட்சியாக இல்லை என்பதனை அண்மையில் எரிபொருள் வரிசைகளில் கண்டோம்.இப்பொழுது அவர்கள் குடும்பமாகக்கூட இல்லையா என்று கேட்க வேண்டிய ஒரு நிலைமையை போதைப்பொருள் பாவனை ஏற்படுத்தியிருக்கிறதா?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More