இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண சாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்து ,வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலை பணியாளர்களும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்
யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் கடந்த புதன்கிழமை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். குறித்த விபத்து சம்பவத்தின் போது , இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதி மீது அங்கிருந்த சிலர் தாக்குதலை மேற்கொண்டு இருந்தனர். அதில் காயமடைந்த சாரதி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய தாக்குதலாளிகளையும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் எனவும் , தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரி நேற்றைய தினம் திங்கட்கிழமை, யாழ்ப்பாண சாலை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் போது, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தினுள் பேருந்துகளை நுழைய விடாது தடுப்புக்களை போட்டுள் ளனர். அதனால் வெளி மாவட்ட பேருந்துகள், பேருந்து நிலையத்தினுள் நுழைய முடியாததால் , வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் யாழ்ப்பாண சாலை பணியாளர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணி ப்பில் ஈடுபட்டனர்.



Spread the love
Add Comment