
தொழில் நிமித்தம் மன்னார் பேசாலையில் குடியிருந்தவர்கள் ஒன்று கூடி மது அருந்திய வேளையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் தாக்கப்பட்டு மரணித்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலும் ஒருவர் தலைமறைவாகி உள்ள நிலையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பேசாலை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (08) இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மன்னார் மரண விசாரணை அதிகாரி எஸ்.ஈ.குண குமார் மரண விசாரனையை மேற்கொண்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் கொழும்பைச் சேர்ந்த சுப்பையா ஆறுமுகம் சங்கர் (வயது -40) என தெரிய வந்துள்ளது. இவர் கிளிநொச்சிக்கு தொழிலுக்குச் சென்ற வேளையில் அங்கு ஜெயபுரத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்த பின் பேசாலை பகுதிக்கு தொழிலுக்கு குடும்பத்துடன் வருகை தந்து வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சம்பவ தினத்திற்கு முதல் நாள் இறந்த நபரின் மனைவி கொழும்புக்குச் சென்றுள்ளார். இந்த நேரத்தில் ஒன்றாக தொழில் புரிபவர்கள் ஒன்று சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் குறித்த குடும்பஸ்தர் தாக்குதலுக்கு உள்ளாகி மரணித்துள்ளார்.
இந்த சம்பவமானது சில தினங்களுக்கு முன் வளி மாசு காரணத்தால் ஏற்பட்ட இயற்கை குளறுபடியால் எவரும் கணக்கில் எடுக்காத நிலையில் மறு நாள் (09) காலையே காவல்துறையினருக்கு தெரியப் படுத்தப்பட்டு பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த நபர் இறந்ததாகவும் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின் உடல் உறவினர்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இக்கொலை தொடர்பாக மூவர் சந்தேகத்தின் நிமித்தம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தலைமறைவாகிய ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Add Comment