நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்ற போதிலும், ஏற்படுத்தப்பட உள்ள விரிவான அரசியல் கூட்டணியின் உறுப்பினர்கள் தேர்தலில் களமிறக்கப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல் கூட்டணி விரைவாக ஏற்படுத்தப்படும் எனவும் இதில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலர் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கூட்டணியை ஏற்படுத்துவது குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டணி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இதனை தவிர மத தலைவர்கள், தொழிற்சங்கங்கள், ஓய்வுபெற்ற இராணுவத்தினர், சட்டத்தரணிகள், மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து சிவில் அமைப்புகளுடனும் இது சம்பந்தமாக பேச்சுவார்;த்தைகள் நடத்தப்படும் எனவும் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.