செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் - சாந்தி சச்சிதானந்தம்:-

 

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் - சாந்தி சச்சிதானந்தம்:-


கடந்த மாதம் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள் கொழும்பு வந்திருந்தனர். யாழ் புதினங்கள் என்ன என்று எதேச்சையாகக் கேட்டு விட்டேன். அவிழ்த்து விட்டார்களே ஒரு பெரிய முறைப்பாட்டுப் பட்டியலை. வட மாகாணசபை இதுவரை ஒரு அபிவிருத்தித் திட்டத்தையுமே மேற்கொள்ளவில்லை என்பதே அவர்களது பெருங்குறையாக இருந்தது. இதற்கு மாறாக, இப்பொழுது அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா கிராமங்களுக்குள் இறங்கி பணி செய்யத் தொடங்கியிருக்கிறாராம். மக்களைச் சந்தித்து பல வேலைத்திட்டங்களை செயற்படுத்தியிருக்கின்றாராம். இப்படியே சென்றால் அடுத்த தேர்தலில் என்னாகுமோ என்றும் அவர்கள் கவலைப்பட்டார்கள். உண்மைதான். ஒருபுறம் மக்கள் தம்மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புக்களையும் மறுபுறம் தாம் செயற்படுவதற்கு போடப்பட்டிருக்கும் முட்டுக்கட்டைகளையும் ஒருசேர சமாளித்தலே வட மாகாணசபை எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாகும். ஆனால் சவால்களைச் சந்திப்பது எமக்கு முதல் தடவையல்லவே.  பெறுதற்கரிய வளங்களையெல்லாம் திரட்டி, சகலரும் வியக்கும் வண்ணம் ஓர் ஆயுதப் போராட்டத்தினை 30 வருடங்களுக்கு மேலாக முன்னெடுத்தது எதனையும் மிஞ்சும் சவால் அல்லவா? எனவே, ஆளுனர் இயங்க விடுகின்றாரில்லை என்னும் குறைபாட்டினைக் கூறிக்கொண்டிருப்பதை விட்டு காத்திரமான பல செயற்பாடுகளைச் செய்து முடிப்பதற்கு எம்மால் முடியும் தம்பி.


வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். மாகாணசபை என்கின்ற புல்லும் எங்கள் ஆயுதம் ஆகலாம், நாம் வல்லவனாக எம்மைத் தயார் செய்து கொண்டோமாகில். இங்குதான் பிரச்சினை ஆரம்பமாகின்றது. எந்தச் சபையும் இயங்குவதற்கு அதன் நிதி மூலங்கள் உறுதிப்படுத்தப்படுவது அவசியமாகும். கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்ற மாகாணசபை சமீபத்தில்தான் தனது நிதி வருமானத்திற்குரிய சட்ட மசோதாவினைத் தயாரித்து முடித்திருக்கின்றது. இதற்கே இவ்வளவு காலம் எடுத்தால், வட மாகாணத்திலுள்ள பல்வேறு தொழிற்றுறைகளின் மூலம் அது வருமானம் ஈட்டுவதற்கு அவ்வதற்குரிய சட்டங்கள் தயாரிக்கப்படவேண்டுமே ஒவ்வொரு செயற்திட்டத்திற்குரிய சட்டங்கள் இயற்றப்படவேண்டுமே. அதற்கெல்லாம் எவ்வளவு காலம் எடுக்கப்படுமோ. இதனைப் பார்த்த பின்னர் நாம் இன்னமும் எம்மை வல்லவனாக மாற்றிக் கொள்ளவில்லையோ என்ற கிலேசம் எம் எல்லோருக்குமே தொற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றது. மாகாணசபைத் தேர்தல் முடிந்த கையுடன் கொழும்பைச் சார்ந்த ஆய்வு நிறுவனங்களிலொன்றான இனத்துவத்துக்கான சர்வதேச கற்கை நிலையம் யாழ்ப்பாணத்தில் முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஓர் கருத்தரங்கினை ஒழுங்கு செய்திருந்தது. அக்கருத்தரங்கில் அரசியல்வாதிகள் தொடக்கம் கல்விமான்கள் ஈறாகக் கலந்து கொண்டிருந்தார்கள். வட மாகாணசபை எதிர்நோக்கக்கூடிய பல்வேறு விதமான சவால்கள் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன. முடிவில் அங்குள்ள சகலரினாலும்; இச்சபைக்கு ஆலோசனை கூறவும் உதவியாக இயங்கவும் புத்திஜீவிகளடங்கிய ஓர் சிந்தனையாளர் குழு (Think Tank) உருவாக்கப்படவேண்டும் என்று ஏகோபித்த முறையில் தீர்மானமாயிற்று. இவ்வகையான குழு பல்துறைகளிலும் மாகாணசபைக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது மட்டுமல்லாமல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் யுக்திகளையும் எடுத்துக்கொடுக்குமே. ஆனால் அதற்குப் பின்பு இது உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருங் குறைபாடாகும். திறமைகளை இனங்கண்டு அவர்களை இணைத்து அணிகளை உருவாக்குவது (team building) அவர்களுக்குக் கைவராத கலையாகும். இத்தகைய நிபுணத்துவம் பொருந்தியவர்கள் பின்னர் தமது கட்சியில் தமது நிலைகளை ஆட்டங்காணச் செய்து விடுவார்கள் என்கின்ற பயம் அவர்களுக்கு இருக்கின்றது போலும். இல்லாவிடில் முதலமைச்சருக்கும் பிற அமைச்சர்களுக்கும் பின்னால் இந்தக் குழு இற்றைக்கு செயற்பட்டிருக்க வேண்டும்.


13ம் திருத்தச் சட்டத்தின் 154 பு பிரிவானது மாகாணசபை சட்டம் இயற்றக்கூடிய அபிவிருத்தித் துறைகளைக் கோடு காட்டுகின்றது. இத்துறைகள் 9வது அட்டவணையில் முதலாவது நிரலில் தரப்பட்டிருக்கின்றன. இவற்றில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அபிவிருத்திக்கு முக்கியமான துறையாக இருப்பது உள்ளுராட்சியே. உள்ளுராட்சி மன்றங்களாவன மக்கள் பிரதிநிதிகளுடன் மக்களுடன் மக்களாக இயங்கும் மன்றங்களாகும். அவை பாதைகள், குடி தண்ணீர் வினியோகம், கைத்தொழிலுக்கான உதவி, மின்சார வினியோகம் என அத்தியாவசியமான அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை மக்களின் பங்கேற்புடன் செயற்படுத்தக்கூடியன. தற்சமயம் வடக்கிலுள்ள அனேக மன்றங்கள் அனுபவக் குறைவினால் தகுந்த முறையில் இயங்க முடியாமலுள்ளன. அவற்றை மேற்பார்வை செய்வதற்கு மாகாணசபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.  தமது மாகாணத்தில் உள்ள மன்றங்கள் அனைத்தும் வினைத்திறனுடன் இயங்கும் வகையில் அவற்றிற்கான ஆற்றல்களை வழங்கினாலே போதும். மக்களுக்கான பல அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவேற்றப்படலாம். மத்திய அரசு நிதிகளும் இப்போது பலவிடங்களில் நடப்பது போன்று வருட முடிவில் திருப்பியனுப்பப்பட மாட்டா. இதற்காக, உள்ளுராட்சி ஆணையாளரின் அலுவலகத்துடன் இணைந்து பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.


அடுத்து முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது கல்வி அபிவிருத்தியாகும். அதிலும் பிள்ளைகளின் அறிவு விருத்திக்கு அத்திவாரமான ஆரம்பக் கல்வி மிகவும் கவனமாக வளர்க்கப்படவேண்டிய துறையாகும். முன்பள்ளிகளை நிர்வகிக்கும் அதிகாரம் மாகாணசபைக்கு உண்டு. பொதுவாக முன்பள்ளிகள் யாவும் வெ;வவேறு சமூக நிறுவனங்களினாலே அவையொவ்வொன்றினுடைய ஆற்றலுக்கொப்ப ஓர் ஒழுங்குமுறையின்றி நடத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் ஒரு குடைக்குக் கீழ் கொண்டு வந்து ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் அவர்களுக்கான உரிய வேதனங்கள் வழங்கப்படவேண்டும். நல்ல வேதனங்கள் வழங்கப்படும்போது திறமையானவர்கள் இவ்வேலைக்கு ஈர்க்கப்படுவார்கள். கிழக்கு மாகாணசபை இப்பணியில் தற்போது செயற்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று பாடசாலைகளில் ஆசிரியர் நியமனங்கள், மற்றும் நூலகங்களை விருத்தி செய்தல் யாவும் மாகாணசபையின் கைகளில் வழங்கப்பட்டிருக்கின்றன. இன்று பல கிராமப் பாடசாலைகளில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இக்குறையைத் தீர்ப்பதற்காக ஆசிரியர் விசேட பயிற்சித் திட்டங்களும் பின் தங்கிய பாடசாலைகளில் அவர்களுடைய நியமனங்களும் செயற்படுத்தப்படவேண்டும். மேலும் பாடசாலைகள்தோறும் நூலகங்கள் தாபிக்கப்பட்டு பிள்ளைகள் மத்தியில் வாசிப்பினை ஊக்குவிக்கும் இயக்கம் ஆரம்பிக்கப்படவேண்டும்.


மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்து முக்கியமாகத் திகழ்வது கூட்டுறவுத் துறையாகும். அருகிப் போன தமது வளங்களைக் கூட்டாக இணைத்து புதிய தொழிற்றுறைகளில் அவர்கள் காலடி பதிக்க இது உதவுகின்றது. சமூகத்தில் உற்பத்தியினைப் பெருக்குவதோடு வருமானத்தினை சமமான முறையில் பங்கீடு செய்ய உதவுகின்றது. இதனைப் பற்றிய விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது, கூட்டுறவுச் சங்கங்கள் நேர்மையாக இயங்குவதற்கான மேற்பார்வைப் பொறிமுறைகளை ஸ்தாபிப்பது யாவும் மாகாணசபைகள் செய்யக்கூடியனவே. ஏற்கனவே நல்ல கூட்டுறவு இயக்கங்கள் மிகச் சிறப்பாக இயங்கிய மாகாணம். யுத்தத்தின் காரணமாக இப்பொழுதுதான் சீர்குலைந்து போயிருக்கின்றது. கூட்டுறவுத் துறையினை விருத்தி செய்வதால் மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம்.     


இத்துணை திட்டங்களையும் செயற்படுத்துவதற்கு வடமாகாணசபைக்கு நிதிகள் வழங்கப்படமாட்டாது என்பது ஏற்கனவே தெரிந்த விடயமாகும். அதற்கும் வழியிருக்கின்றது.  மேற்கூறிய துறைகளில் இயங்கக்கூடிய அரசுசாரா நிறுவனங்களுடன் கூட்டிணைவுகளை மாகாணசபை ஆரம்பிக்க வேண்டும். இத்தகைய நிறுவனங்களின் பிரதிநிதித்துவக் குழுவினை அமைத்துக்கொண்டு அதன் மூலமாக தேவையான திட்டங்களுக்கான நிதிமூலங்களை அவற்றைக்கொண்டே திரட்டலாம். அதே போன்றே அரசினால் தடை செய்யப்படாத புலம் பெயர் தமிழர்களின் அமைப்புக்களின்மூலம் உள்ளுர் அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதிகளைத் தருவித்து அவற்றின் மூலம் வேண்டிய திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். ஐ.நா நிறுவனங்களை லொபி செய்வதன் மூலமும் பல உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.


இன்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்; தமக்குக் கிடைக்கும் உதவிகளைத் தனிப்பட்ட முறையில் வினியோகிப்பது எமக்குத் தெரிந்தவொன்றே. விதவைகளுக்குக்கொடுக்கும் தையல் இயந்திரங்கள் எமது மக்களுக்கு அபிவிருத்தியினைக் கொண்டு தராது. நிறுவன மயப்படுத்தலின் நன்மைகளை அவர்கள் இன்னமும் உணரவில்லையோவெனத் தோன்றுகின்றது. எம்மை எதிர்நோக்கும் சவால்களினை நாம் நிறுவனமயப்படுத்தப்பட்டால் மட்டுமே கட்டமைப்பு ரீதியாக எதிர்கொள்ள முடியும். ஆனால், கூட்டமைப்பினருக்கு இதனை செயற்படுத்துவதற்குரிய ஆற்றல் இருக்கின்றதா?  
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்


anusha.sachithanandam@gmail.com

 


 

 

அனுப்புக Home, Srilankan News, Articles
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.