இந்தக்கடத்தல் விடையத்தில் முழுப் பூசனிக்காயைச்சுற்றிச் சோறிருப்பதாக மகிந்த சகோதர்கள் நம்பிக்கொண்டிருக்க மகிந்த சகோதரர்களைச் சுற்றிச் சேறுமட்டுமே இருப்பதை எல்லோரும் அறிந்துகொண்டனர்.

எனது மௌனம் கலைகிறது தொடரில் நான் கடத்தப்பட்டது தொடர்பான அனுபவங்களைப் சற்றுப்பிந்திய அத்தியாயங்களில் எழுத நினைத்திருந்தேன். ஆனால் திருபிரேம்குமார் குணரட்ணம் மற்றும் திமுது ஆட்டிக்கல ஆகியோரின் கடத்தலும் விடுவிப்பும் தற்போது நிகழ்ந்திருப்ப தாலும். அது பல்வேறு சர்ச்சைகளைஉருவாக்கி இருப்பதாலும் எனது அனுபவங்களையும் கேள்விகளையும் இந்தவிடத்தில் வெளிப்படுத்துவது காலப் பொருத்தமானதாகும்.
ஐக்கியநாடுகள் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் பின்னர் இலங்கையில் மிகக் குறைந்தபட்ச சுமூக நிலையாவது ஏற்படும் என ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட புத்திசீவிகள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆட்கடத்தல்கள்,சட்டத்திற்கு புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள்மற்றும் வன்முறைகளைக் கொண்ட எதேச்சாதிகாரக் குடும்பஆட்சி தொடர்வதை உள்நாட்டில் எவராலும் கேள்விக்கு உட்படுத்த முடியாத நிலை தொடரத்தான்செய்கிறது.
இந்த எதேச்சாதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் அனைவரையும் இனம், மதம், மொழி, வேறுபாடின்றி வெள்ளைவான் தொடர்கிறது. துப்பாக்கிகளின்முனைகள் அழுத்துகின்றன.
துணை இராணுவ ஆயுதக்குழுக்கள், பாதாள உலகக்குழுவினர், அரச ஆதரவுடன் சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் அரசபடைக்குழுக்கள், அரச புலனாய்வாளர்கள் என ஒரு பட்டாளமே பொதுமக்களை, மக்களை நேசிக்கும் சனநாயகச் செயற்பாட்டாளர்களை, ஊடகவியலாளர்களை, மனிதஉரிமைப் பாதுகாவலர்களை, ஆளும்கட்சி அல்லாதகட்சிகளின் உறுப்பினர்களை அல்லது ஆளும்கட்சிக்குள் உள்ள அதிருப்தியாளர்களை எந்த நேரமும் கண்காணித்தபடி இருக்கின்றது.
வெளிப்படையான ஜனநாயக நீரோட்டத்தில் இணைய முற்பட்ட முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட இருந்த பிரேம்குமார் குணரட்ணம், மற்றும் அந்தக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளரும் மகளீர் பிரிவுத் தலைவியுமான திமுது ஆட்டிக்கல ஆகியோரை அண்மையில் இந்தக்கண்காணிப்புக் குழுக்களில் ஒன்று வெள்ளை வானில் கடத்திச் சென்றது.
பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸவின் நேரடிக்கட்டளையின் கீழ் இயங்கும் சட்டத்திற்குப் புறம்பான ஒரு விசேட படையணியே இவர்களைக் கடத்திச் சென்றதாகக் கள நிலவரத்தை அனுமானித்த அனைவரும் கருதுகின்றனர்.
கடத்தப்பட்ட குணரட்ணம் அவுஸ்ரேலிய பிரஜை என்பதனால் அந்த நாடு மேற்கொண்ட கடுமையான அழுத்தங்களை (எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் இது இலங்கைக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என அவுஸ்திரேலியா எச்சரித்ததாகவும் அறியப்படுகிறது.) அடுத்தும், சர்வதேச ரீதியாக எழுந்த கடுமையான அழுத்தங்களை அடுத்தும், குணரட்ணம் அவர்களும் அதனைத் தொடர்ந்து திமுது அவர்களும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமது கடத்தலை மறைப்பதற்காகத் திரு.குணரட்ணம் அவர்கள் தானாகவே சரணடைந்தார் என இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கூறியிருந்தார். திரு குணரட்ணம் அவர்கள் கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்டுச் சட்டவிரோதமாக இலங்கையில் 5 மாதங்கள் தங்கியிருந்தார் எனக்குற்றம் சாட்டி அவரை அரசாங்கம் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப் போவதாக அறிவித்தது.
இதன்படிக்கு 2012.04.10ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட திரு குமார் கனகரட்ணம் அவர்கள் காலை 7.20ற்கு மலேசியா ஊடாக அவுஸ்ரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
இதனனைத் தொடர்ந்து அவருடன் கடத்தப்பட்ட திமுது ஆட்டிக்கலவும் அதேநாள் முற்பகல் கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தாம் விடுவிக்கப்பட்ட உடனேயே திமுது ஆட்டிக்கல ஊடகவியலாளர் மகாநாட்டைக் கூட்டி ஆயுததாரிகளால் தாம் கடத்தப்பட்டமை குறித்த விடயங்களை விலாவாரியாக அறிவித்தார். அவர்தனது அனுபவத்தை பின்வருமாறு விபரிக்கிறார்
“6ம் திகதி மாலை கட்சியின் செயற்பாடு ஒன்றை தோழருடன் முடித்துவிட்டு பொல்வத்தை பகுதியில் இறங்கி பஸ்ஸில் வீடு செல்ல தயாரானேன். கொடகமயில் உள்ள வீட்டுக்கு செல்லும் வழியில் வெள்ளை வானில் வந்தோர் கண் வாயை கட்டி வானுக்குள் போட்டனர். வானில் ஏற்றியது தொடக்கம் என்னிடம் பல கேள்விகளை கேட்டனர். ஆங்கில ஆசிரியை தானே? மக்கள் போராட்ட இயக்கத்தின் சர்வதேச தொடர்பாளராக செயற்பட்டுள்ளீர்கள் எனக்கூறி அது குறித்து கேள்வி எழுப்பினர்.
வானில் வைத்து நான் கதைக்காமல் இருந்ததால் என்னை ஒரு முறை தாக்கினர். அதன் பின்னர் தாக்கவில்லை. தொடர்ச்சியாக கேள்வி எழுப்பினர். என்னை தூர இடத்திற்கு அழைத்துச் சென்றதாக கருதினேன். முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
அது பாதுகாப்பு தொடர்பான இடம் என என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. வாகனத்தில் ஆயுதம் இருந்தது. கடத்தல்காரர்கள் 6 பேர் வரை இருந்தார்கள். கண்ணை கட்டி என்னை தூர இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாடிப்படி ஏற்றி என்னை ஒரு அறையில் அடைத்தனர்.
சென்றவுடன் 2 மணித்தியாலங்கள் யாரோ ஒரு அதிகாரி என்னிடம் கேள்விகளை கேட்டார். மக்கள் போராட்ட இயக்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி கேள்வி எழுப்பினர். எனது பையில் இருந்து வக்கி கணக்குப் புத்தகதை எடுத்துக் கொண்டு அதற்கு எங்கிருந்து பணம் வருகிறது என கேட்டனர். யாருடை பணம் எனவும் வினவினர். ஆயுத போராட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.
லலித், குகன் தொடர்பில் என்ன நினைக்கிறீர்கள் என வினவினர். எம்முடன் இணைந்து பணியாற்றும் தோழர்கள் பற்றியும் அவர்களின் வீடுகளுக்குச் செல்லும் வழி தொடர்பிலும் கேள்வி எழுப்பினர். இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை செய்தனர். அதன் பின்னர் மீண்டும் என்னை அறைக்குள் போட்டு பூட்டி வைத்தனர்.
கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கு போட்டனர். அதன் பின்னர் காலை 5.30 மணியிருக்கும் பறவைகள் சத்தமிடும் ஒலி கேட்டது. விடிந்த பொழுதாக இருக்கும் என நினைத்தேன். நான் இருந்த இடத்தில் இருந்து அமர்ந்து இருக்க வேறு இடத்திற்கு அழைத்து வந்தனர். என்னை அதன் பின்னர் விசாரணை செய்யும் போது தோழர் குமார் அருகில் இருந்தார்.
குமார தோழருடன் என்னை வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி, அவரிடம் ஒன்று என்னிடம் ஒன்று என கேள்வி எழுப்பினர். அதன் போதும் ஆயுக் குழு தொடர்பில் வினவினர். எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்? 9ம் திகதி நீங்கள் இல்லாவிட்டால் திட்டம் தோல்வியடைந்து விடுமா? திட்டத்தை நிறுத்தி விடுவார்களா? என கேட்டனர்.
9ம் திகதி மாநாட்டில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்கள் விபரங்களை பெயருடன் கோரினர். அரசியல் குழு யார்? கட்சியின் தலைவராக யார் தெரிவு செய்யப்படுவார்? என வினவினர். இதேபோன்று பல கேள்விகளை இரண்டு மணித்தியாலங்களாக கேட்டனர்.
மீண்டும் என்னை அறைக்குள் இட்டு பூட்டினர். குமார் தோழரை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் எம்மை அழைத்துச் சென்ற நாளுக்கு அடுத்த நாள் 7ம் திகதி இரவு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஒரு மணித்தியாலமான வாகனம் சென்றது. அந்த வாகனத்தில் குமார் தோழர் இருந்தார் என நான் நினைக்கிறேன். அவர்கள் கதைத்துக் கொண்டு வந்ததை வைத்து நான் அதனை புரிந்து கொண்டேன். அதுவும் ஒரு முகாம் என நினைக்கிறேன். வீதி ஓரத்தில் மக்கள் நடமாட்ட சத்தம் கேட்டது. அருகில் வீடுகள் இருந்ததை உணர முடிந்தது. அங்குதான் எம்மை இன்று காலை வரை வைத்திருந்தனர்.
நேற்று இரவு புதிய அதிகாரி ஒருவர் என்னை சந்திக்க வந்தார். குமார் தோழரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவோம். அவருடைய கடவுச்சீட்டில் பிரச்சினை உள்ளது. அவர் அவுஸ்திரேலிய பிரஜை. அதனால் அவரை நாடு கடத்துவோம். அவர் நாடு திரும்பியதும் உங்களை விடுவிக்க முடியும் என்றனர்.
அவர் அங்கு சென்று நாங்கள் சொல்வது போல் நடந்து கொண்டால் என்னை விடுவிப்பதாக கூறினர். அது தொடர்பில் நான் எதுவும் கூறவில்லை. எனினும் நேற்றிரவு செல்ல தயாராகுமாறு கூறினர். நான் தயாராகி இருந்த போதும் இரவு அழைத்துச் செல்லவில்லை என்பதை விளக்கிக் கொண்டேன்.
அதன் பின் மறுநாள் காலை தயாராகுமாறு கூறினர். பின்னர் மற்றுமொருவர் வந்து என்னிடம் கதைத்தார். குமார் தோழர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளதால் என்னை அனுப்புவதாகக்கூறினர்.
என்னை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வரும்போது உங்கள் கண்ணை திறப்போம். நீங்கள் கண்ணை திறந்து பார்க்க வேண்டாம். வாகன இலக்கத்தை பார்க்க வேண்டாம். பார்த்தாலும் பயனில்லை. எங்களை யார் என அடையாளம் காண முயற்சிக்க வேண்டாம். எனது கையில் பணம் கொடுத்து இந்த பணத்தை கொண்டு ஆட்டோவில் வீடு செல்லுமாறு கோரினர். எங்கு செல்ல வேண்டும் என கேட்டனர். நான் கட்சி மாதிவெல அலுவலகம் செல்ல வேண்டும் என்றேன்.
கட்சி அலுவலகத்திற்கு எம்மால் வர முடியாது. அருகில் எங்காவது வீதியில் விடுகிறோம் என்று கூறினர். தலபத்பிட்டி வீதி நடுஹேன பகுதியில் என்னை இறக்கிவிட்டு பின் பக்கம் திரும்ப வைத்து வாகனம் செல்லும்வரை திரும்பிப் பார்க்க வேண்டாம் எனக்கூறி சென்றனர்.
நான் பார்த்தேன் இலக்கம் சரியாக விலங்கவில்லை. 28 1 என 01 என ஞாபகம் இருக்கிறது. ஆனால் வாகன இலக்கத்தை பார்த்து பயனில்லை என அவர்களே கூறிவிட்டனர். பின்னர் நான் ஆட்டோவில் சற்று முன்னர் அலுவலகம் வந்தேன். இவைதான் நடந்தது.
இந்த கடத்தலுடன் அரசுக்கோ, பாதுகாப்பு தரப்பினருக்கோ தொடர்பு இல்லை என தொடர்ச்சியாக கூற முற்பட்டனர். அவர்கள் விசாரிக்கும் போதெல்லாம், அரசுக்கு தேவை நாங்கள் ஆயுதக் குழுவா புலிகளுடன் தொடர்பு உள்ளவர்களா என்பதே என நான் அடிக்கடி அவர்களிடம் கூறினேன்.
அதன்போதெல்லாம் அரசாங்கம் என்று சொல்ல வேண்டாம். அரசுக்கு தொடர்பு இல்லை. நீங்கள் வெளியில் சென்று இதற்கு கோட்டாபயவை தொடர்புபடுத்தி தகவல் வெளியிடுவீர்கள் என எமக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தொடர்பில்லை என்று கூறினர். தொடர்ந்தும் அதனை வலிறுத்தினர்.
அரச அதிகாரம் இல்லாமல் ரி-56 ரக துப்பாக்கிக் கொண்டு இவ்வாறான செயல்களில் உங்களால் ஈடுபட முடியுமா என நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.
தொடர்ந்து வடக்கு விடயம் குறித்தும் லலித், குகன் குறித்தும் அவர்கள் புலிகளுடன் தொடர்பு படவில்லை என நினைக்கிறீர்களா எனவும் கேட்டனர். ஒருபொழுதும் இல்லை என நான் கூறினேன்.
எவ்வாறு தொடர்பு இல்லை என சொல்கிறீர்கள் என்று அவர்கள் கேட்டவைகளுக்கு நான் தெளிவாக பதில் கூறினேன். என்னை விடுவிப்பதற்கு முன்னர் என்னை சந்தித்த அதிகாரி. அனைத்து விடயங்களும் புலனாகிறது என்றார். புலிகளுடன் தொடர்பு இல்லை என்பதும் புலனாகிறது என்றார்.
எம்மை கைது செய்த பின்னர் கிடைத்த தகவல்களின்படி அதனை தெரிந்து கொண்டதாகக்கூறினர். புலிகளுடன் தொடர்பு, ஆயுத குழுவுடன் தொடர்பு தமிழ் டயஸ்போராக்கள் பணம் வழங்குகிறார்கள் என்ற நினைப்பில் அவர்கள் இருந்தனர். இப்போது அவை இல்லை என அறிந்து கொண்டே விடுவித்தனர்.
கண்ணை மூடுவதற்கு முன்னர் நீல நிற உடை அணிந்த இருவர், மற்றையவர்கள் சிவில் உடையில் இருந்தனர். அதன்பின்னர் வந்து இறங்கும்வரை எனக்கு இருட்டாகவே இருந்தது. இராணுவத்தினருக்கு தொடர்பு இருப்பதாக நினைக்கிறேன். சில சமயங்களில் பொலிஸார் உபயோகிக்கும் வசனங்களை பயன்படுத்தினர்.”
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கவுண்சிலின் தீர்மானத்தின் பின்னர் சர்வதேசத்தின் கவனம் இலங்கையில் குவிந்துள்ள இந்த நேரத்தில் நிகழ்ந்த இந்த முக்கியமான கடத்தல் சம்பவம் குறித்து இலங்கையின் இலங்கையின் சனாதிபதியான மகிந்த வாய்மூடி மௌனித்திருக்க அவரது இரு சகோதர்களும் எதுவுமே நடக்காதது போன்று ஊடகங்களில் கருத்துக்களை அள்ளி வீசுகின்றனர்.
சனாதிபதியின் ஒரு சகோதரரான கோத்தாபய பின்வருமாறு கூறுகிறார்
“பிரேம் குணரட்னம் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு சில மாதங்களுக்கு முன்னர் விடுத்த கோரிக்கையை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் உதாசீனம் செய்ததது.
ஜே.வி.பி. இனுள் பிளவு ஏற்பட்டது முதல் பிரேமகுமார் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட சில தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் குமார் தலைமையிலான கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் இணைந்து செயற்படவுள்ளதாக கூறப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பு நிறுவனம் என்ற ரீதியில் இந்தத் தகவல்கள் குறித்து பாதுகாப்புச் செயலகம் உன்னிப்பாக அவதானித்து வந்தது.
இச்சந்தர்ப்பத்தில் பிரேம்குமார் குணரட்னம் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு எழுத்து மூலம் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது.
கடவுச் சீட்டு இலக்கம், கடவுச் சீட்டில் குறிக்கப்பட்ட பெயர், இலங்கை வந்தடைந்த திகதி போன்ற தகவல்களை கோரியிருந்தோம். எனினும் இரண்டு தினங்கள் வரையில் இந்தத் தகவல்கள் வழங்கப்படவில்லை;.
குமார் குணரட்னம், நொயல் முதலிகே ஆகியோர் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட இருவரும் ஒருவரே.
இது போன்றே தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் வேறு பெயர்களில் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொள்கின்றனர்.; இது தொடர்பில் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
நொயல் முதலிகே கண்டு பிடிக்கப்பட்டு விட்டார் எனினும், குமார் குணரட்னம் தொடர்ந்தும் காணாமல் போனோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவ்வாறே புலி உறுப்பினர்கள் காணாமல்போன மற்றும் கடத்தல் சம்பவங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களையும் கவனிக்க வேண்டும்.
அரசாங்கத்தை எந்த நேரமும் விமர்சனம் செய்யாது இந்த விடயங்கள் தொடர்பிலும் மனித உரிமை அமைப்புக்கள் கவனம் செலுத்த வேண்டும்”.
மகிந்தவின் இளைய சகோதரனான பசில் ராஜபக்க்ஷ பின்வருமாறு கூறுகிறார்.
“முன்னணிச் சோசலிசக் கட்சியின் பிரச்சாரப் பிரிவை பாராட்ட வேண்டும். கடத்தல் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நகைச்சுவையாக மாற்றமடைந்துள்ளன. கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னணி சோசலிச கட்சி பாரியளவில் பிரச்சாரம் மேற்கொண்டது. பல மில்லியன் ரூபாக் செலவிட்டிருந்தாலும் இந்தளவுக்கு கட்சியைப் பிரச்சாரம் செய்திருக்க முடியாது. கட்சி ஆரம்பிக்கும் போது இவ்வாறான ஓர் பிரச்சாரம் கிடைப்பது அதிர்ஸ்டவசமானது. இராணுவ முகாம்களையும் சோதனைச் சாவடிகளையும் அகற்றுமாறு குரல் கொடுக்கும் எவரும் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களை கண்டு கொள்வதில்லை”.
கோத்தபாய, குமார் தானகச் சரணடைந்தார் என்கிறார். பசிலோ முன்னணிச் சோசலிசக்கட்சி தம்மைப் பிரசாரப்படுத்திக் கொள்வதற்காக தம்மைத்தாமே கடத்தி நாடகமாடியது போன்றவொரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக
முன்னணி சோசலிச கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பிரேம் குமார் குணரட்னத்தை ஜே.வி.பி கூட கடத்தியிருக்கலாம்இ யாருக்கு தெரியும் என பதில் ஊடகப் பேச்சாளர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பிக்குள் ஏற்பட்ட பிளவு சில வேளைகளில் இந்த கடத்தல்களுக்கு வழிகோலியிருக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யார் இந்தக் கடத்தலை மேற்கொண்டார்கள் என்பது எமக்குத் தெரியாது என்றாலும் இதனை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்பதனை தெளிவுபடுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெற்று வரும் சகல சம்பவங்களையும் காவல்துறையினர் கண்காணிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடத்தல்காரர்கள் குறித்த இருவரும் எவ்வாறு சனநெரிசல் மிக்க இடங்களில் விடுதலை செய்தார்கள் என்பது தமக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இரண்டு தரப்பினர் ஆயுதங்களை ஏந்தி போராட்டம் நடத்தியிருந்ததாகவும் அந்தக் குழுவில் சிலர் இன்னமும் எஞ்சியிருக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இதனைத்தான் முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைப்பதென்பார்கள். ஆனால் இந்தக்கடத்தல் விடையத்தில் முழுப் பூசனிக்காயைச்சுற்றிச் சோறிருப்பதாக மகிந்த சகோதர்கள் நம்பிக்கொண்டிருக்க மகிந்த சகோதரர்களைச் சுற்றிச் சேறுமட்டுமே இருப்பதை எல்லோரும் அறிந்துகொண்டனர்.
திமுது ஆட்டிக்கல தான் கடத்தப்பட்ட முறைமை பற்றிக் கூறிய விடயங்கள் யாவும் நான் கடத்தப்பட்ட முறைமையுடன் ஒத்துப்போகின்றன.
2006 ஆகஸ்ட் 28 அதிகாலை கல்கிசையில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட நான் இடங்கள் மாற்றப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு மறுநாள் அதிகாலை திமுதுவைப் போலவே முச்சக்கர வண்டிக்கு காசு தரப்பட்டு விடுவிக்கப்பட்டேன்.
2005 இன் கடைசிப்பகுதியில் ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ஸ குடும்ப நிறுவன ஆட்சியில் வகை தொகையின்றிக் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட எண்ணிலடங்கா உயிர்களிடையே முதலாவதாக நானும், பின்னர் கீத்நோயரும், வித்தியாதரனும், இப்போ குமார் குணரட்ணமும், திமுது ஆட்டிக்கலவும் மட்டுமே உயிருடன் மீண்டு வந்துள்ளோம்.
இதில் திமுது ஆட்டிக்கல மட்டுமே தான் மீண்ட ஒரு மணி நேரத்துள்ளேயே தனக்கு என்ன நேர்ந்தது என்பதனைத் துணிந்து உலகறியச் செய்துள்ளார்.
தற்போது இலங்கை மீது குவிந்துள்ள உலகத்தின் கவனம் காரணமாக தங்களது கொலை வெறித்தனத்தை மறைத்துக் கொண்டு இந்தக்கடத்தல் தொடர்பாக வேடிக்கையான கதைகளைக் கூற மகிந்த சகோதரர்கள் முற்படுகின்றனர்.
திமுது அவர்களின் உண்மையான சாட்சியத்தை தமது நகைச் சுவையாலும் புனையப்பட்ட கதைகளின் ஊடாகவும் திசைதிருப்பி தமக்கும் இந்தக் கடத்தலுக்கும் தொடர்பில்லை என மகிந்த சகோதரர்கள் நிறுவ முற்படுகின்றனர்.
ஆனால் உண்மை என்னவெனில் ரவீந்திரநாத் முதலானவர்களில் இருந்து குருபரன் கீத்நொயர், பிரகீத் எகலியகொட வரை சகல கடத்தல்களின் பின்னணியில் இருந்ததும் லசந்த விக்கிரமதுங்கவையும் பிரகீத் எலியகொடவையும் கொன்றதும் இந்த அரசாங்கமே. அல்லது இந்த அரசாங்கத்தால் வழிநடத்தப்பட்ட சட்டத்திற்கு புறம்பான குழுக்களே.
இந்தக்கடத்தல்கள் மற்றும் கொலைகள் நிகழ்ந்த இடங்கள் இவை நிகழ்த்தப்பட்ட விதம் போன்றவற்றை அவதானிக்கும் போது எவரும் இந்த முடிவுக்கே வருவார்கள்.( எனது முன்னைய தொடரில் இது தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தேன்)
பிரேம்குமார் குணரட்ணத்தையும், திமுது ஆட்டிக்கலவையும் அரசாங்கக்கட்டுப்பாட்டில் உள்ள ஆயுதக்குழுவே அரச புலனாய்வுக்குழுவின் ஆசியுடன் கடத்தியிருக்க வேண்டுமென்பதை அவர்களின் வாக்குமூலங்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

நான் கடத்தப்பட்டு விடுதலையான பின்பு ஊடக மகாநாட்டைக் கூட்டி எனது கடத்தல் பற்றி வெளிப்படையாக அறிவிக்கக் கூடிய சூழல் அன்று இருக்கவில்லை.
பிரேம் குமார் குணரட்ணம் மற்றும் திமுது ஆகியோருக்கு பின்னால் இருப்பதுபோல லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட ஒரு கட்சியோ, இலங்கை மீது குவிந்துள்ள சர்வதேசக் கவனமோ அன்றில்லை. நான் விடுவிக்கப்பட போது தனித்து விடப்பட்டிருந்தேன். கடுமையான யுத்தமும் எங்கும் எதிலும் பயங்கரமும் கொலை வெறித் தாண்டவமும் நிலவிய சூழலது. கொல்லப்படும் தமிழர் எவரையும் இலகுவாகப் புலி எனவோ அல்லது புலிகளுடன் தொடர்பு கொண்டவர் எனவோ முத்திரை குற்றி விடக்கூடிய சூழ்நிலையே அன்றைக்கு இருந்தது.
நான் தொடர்ந்தும் இலங்கையில் இருந்து ஊடகவியலாளனாகச் சூரியனில் பணியாற்ற விரும்பினால் எனது கடத்தல் தொடர்பாக வாயே திறக்கக்கூடாதென அச்சுறுத்தப்பட்டிருந்தேன். அதே போல் நான் சார்ந்திருந்த நிறுவனமும் எனது கடத்த்ல பற்றி வெளியில் சொல்வதை விரும்பியிருக்கவில்லை.
இலங்கையில் தொடர்ச்சியாக வாழ்வதற்கான விருப்பமும் அதுவும் மீண்டும் ஊடகவியலாளனாகவே சூரியன் எஃப். எம் இல் வேலை செய்யும் விருப்பமும் என்னை அன்று கட்டிப்போட்டிருந்தன. புலம்பெயர்வதில் இருக்கக் கூடிய இருப்பழிவுபற்றிய பயம் காரணமாகவும் மீண்டுமொருமுறை அநியாய மரணத்தைச் சந்திக்க விரும்பமின்மை காரணமாகவும் நான் அன்றைக்கு மௌனித்திருந்தேன்.
இவைதவிரவும் கூடவே சில நாடுகளின் ராஜதந்திரிகள், எனது விடுதலைக்காக பாடுபட்ட அரசியல்கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள், மற்றும் தனிப்பட்ட நண்பர்கள் என்னை விடுவிப்பதற்காக கொடுத்த வாக்குறுதிகள் என்னைக் கட்டிப்போட்டிருந்தன.
காட்டாட்சி நிகழ்கிற இலங்கை போன்ற ஒரு நாட்டில் மரணத்தின் வாயில் இருந்து மீண்டு வந்த தனிநபர் ஒருவர் எத்தகைய சூழ்நிலையிருப்பார் என்ற துளி புரிந்துணர்வோ அறிவோ இல்லாமல் அன்றைக்கு சில தமிழ் ஊடகங்கள் என்னைக் கொச்சைப்படுத்தும் வகையில் கட்டுரைகளையும் ஆசிரியர் தலையங்கங்களையும் வெளியிட்டிருந்தன.
மூத்த ஊடகவியலாளரும் சுடரொளி ஆசிரியர் வித்தியாதரன் அவர்கள் தனது ஒரு ஆசிரியர் தலையங்கத்தில்
“புரியாணியின் மர்மம் என்ன...? யார் தன்னைக் கடத்தியது என்று குருபரன் சொல்ல வேண்டும் இல்லாவிடில் கரும் புள்ளி செம்புள்ளி குற்றி அவரை ஊடகத் துறையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என எழுதியிருந்தார்.
தற்போதய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மின்னல் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான சிறீரங்கா என்கடத்தல் பற்றியும் யார் என்னை கடத்தினார்கள் என்பது பற்றியும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம், வித்தியாதரன் போன்றவர்களை வைத்து தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றையும் அன்று செய்திருந்தார்.
புலிகள் இயக்கத்தில் இருந்து 1986 களிலேயே விலகி பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்து பின் தன்னையும் ஒரு ஊடகவியலாளர் எனக்கூறித்திரிந்த ஒருவர் அப்பொது பிரபலமாகி இருந்த ஒரு இணையத்தில் என் கடத்தல் ஒரு நாடகம் எனக்குற்றம் சாட்டியிருந்தார்.
எனது நிறுவனத்தில் என்னுடனேயே வேலை செய்த சிலர்கூட நான் கடத்தப்பட்டது ஒரு நாடகமாக இருக்கலாம் எனக் கருதியிருந்தனர். ஆனால் இவ்வாறு கருதிய முக்கியமான ஒரு நண்பர் தான் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 4ஆம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு பின் விடுதலையான போது “அண்ணை நீங்கள் பட்டதைப் பற்றி இப்பதான் எனக்கு விளங்குது. காச்சலும் வலியும் தனக்குத்தனக்கு வந்தால்தான் தெரியும்” எனத் தொலைபேசியிற் சொல்லியிருந்தார்.
வித்தியாதரன் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டு 4ஆம் மாடியில் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது பற்றியோ அவர் விடுதலையாகி வந்தபின் எதனையும் கூறாமல் மௌனித்திருந்தமை பற்றியோ நாம் எமது இணையங்களில் ஆசிரியர் தலையங்கம் எதனையும் எழுதவில்லை. எழுத நினைக்கவேயில்லை. எமது வானொலியில் அவர் புரியாணி தின்றாறா அல்லது புட்டுத்தின்றாரா என நிகழ்ச்சி நடத்தவில்லை.
பதிலாக கடத்தப்பட்டு பின்னர் கைது என்ற போர்வையில் தடுத்து வைக்கப்பட்ட வித்தியாதரனை விடுவிக்க வேண்டும் எனக் குரல் எழுப்பினோம். காரணம் - எது, அறிவும் தன்னுணர்வும் நுண்ணுணர்வும் கொண்ட பத்திரிகைத்தனம் என்ற புரிதல் எமக்கு இருந்ததாகும். அதுமட்டுமல்ல மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பிய ஒருவனின் வலியை உணர்ந்து கொள்ளும் மனிதத்தன்மை எனக்கு இருந்ததும் காரணமாகும்.
இலங்கையில் வேலை செய்யும் ஒவ்வொரு பத்திரிகையாளனும் (இதனை வாசிக்கிற ஒவ்வொரு பத்திரிகையாளனும்) இத்தகைய நிகழ்வுகளில் எப்படி நடந்து கொள்ளக் கூடாதென்பதற்கு உதாரணமாக இவர்கள் அமைந்திருந்தார்கள்.
அன்றைய சூழலில் மௌனம் காத்த நான் இப்போது உருவாகியிருக்கும் இச்சூழலிலும் மௌனித்திருக்க விரும்பவில்லை. தன் உயிரையும் மதிக்காமல் உண்மையை உலகுக்கு சொல்ல முன்வந்த திமுது ஆட்டிக்கலவின் முன் ஒரு பத்திரிகையாளனாக தலை குனிந்து நிற்க நான் விருப்பவில்லை.
அவரின் உண்மைச் சாட்சியத்தை வலுப்படுத்த இந்த அரசைக்கேட்கிறேன்… மகிந்த சகோதரர்களிடம் கேட்கிறேன் என்னைக் கடத்தியவர்கள் தானே திமுது மற்றும் குமாரவையும் கடத்தினார்கள்?
உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள புலனாய்வுப் பிரிவும் துணை ஆயுதக்குழுவும் தானே எங்களைக் கடத்தியது?...இல்லையா?
2005 பிற்பகுதியில் சிம்மாசனம் ஏறிய இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் விபரங்களுடனும் எனது கைது தொடர்பான விலாவாரியா விபரிப்புக்களுடனும் அடுத்த தொடரில் உங்களை சந்திக்கிறேன்.
தன்னுயிரையும் மதிக்காமல் துணிந்து உண்மையை உலகுக்கு சொன்ன திமுதுவுக்கு இப்பத்தி சமர்ப்பணம்.