மன்னார் மாவட்டத்தில் காணி அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைவரையும் பங்Nகுற்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பினில் இன்று கட்சியின் முக்கியஸ்தரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் விவகார செயலாளருமாகிய வி. எஸ். சிவகரன் இன்றிரவு விரிவான ஊடக அறிக்கையொன்றினை விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் பல தனியார் மற்றும் அரச காணிகளில் படைத்தரப்பினர் தம்வசமாக கடந்த யுத்த காலத்தில் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலத்தினை தற்போது தமக்கே நிரந்தரமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்வும், மீள்குடியேற்றமும், வாழ்வாதார முன்னேற்றமும் பாதிக்கப்படுகின்றது. இவற்றுக்கு எதிராக எதிர்வரும் 07ம் திகதி சனிக்கிழமை மன்னார் நகரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்த உள்ளோம். எனவே அனைத்து தமிழ் கட்சிகள் உட்பட சனநாயக அடிப்படை நியாயதிக்க நிலையிலுள்ள சிங்கள, முஸ்லிம் கட்சிகளையும், பொதுமக்களையும், குறிப்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்களையும் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைகின்றோம் என்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தினில் பலபிரதேசங்கள் ஆக்கிரமிப்புப் பிரதேசங்களாகவே காணப்படுகின்றன. அவற்றில் சில: முசலி பிரதேசசெயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிக்குளத்தில் தனியார் காணிகளை அபகரித்த படைத்தரப்பு, சாதாரண ஏழை மக்களை குடியேறவிடாமல் தடுக்கின்றது. அத்துடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஓலைத்தொடுவாய் தொடக்கம் தலைமன்னார் வரை (தென்கடல் பிரதேசமாக) 500 ஏக்கர் நிலம் எதுவித முன்னறிவித்தலே தகவலோ இன்றி காற்றாலை மூலம் மின்னுற்பத்திக்கென ஒதுக்கப்பட்டுள்ளதாக வர்த்தமாணி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஓலைத்தொடுவாய், நடுக்குடா, வாயடிப்பண்ணை, கட்டுக்காரன்குடியிருப்பு, கீளியன்குடியிருப்பு ஆகிய இதன் அடங்கலான 300 ஏக்கருக்குமேல் தனியாருக்கு சொந்தமான காணியாகும். அதே போல் மன்னாரிலும் பல தனியார் வீடுகளிலும், அரச கட்டடங்களிலும் படை தரப்பினர் முகாம் அமைத்துள்ளனர். அம்மக்கள் உறவினர், நண்பர்களின் வீடுகளிலும், இந்தியாவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பேசாலை குருசுப்பாடு 50 வீட்டுத்திட்டத்தில் மீள்குடியேறிய மக்களை வெளியேற்றிய சம்பவமும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறு மாந்தை மேற்கு சன்னாரில் பொது மக்களுக்கு காணி வழங்குவதில் பல்வேறுவிதமான தடைகளையும், நிபந்தனைகளையும் விதிக்கப்படுகின்றது. ஆனால் அதே பிரதேசத்தில் வளமிக்க காணியை 3,500 ஏக்கர் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு வழங்குவதற்கு நிலஅளவைத் திணைக்களத்தால் எல்லை இடப்பட்டுள்ளது. அதேபோல் வனஜீவராசிகள் அமைச்சு பறவைகள் சரணாலயம் என்னும் பெயரில் நாகதாழ்வு தொடக்கம் வங்காலை, மன்னார் நுழைவாயில் வரை நில அபகரிப்பு உள்நோக்கத்துடனே பறவைகள் சரணாலயம் என்னும் போர்வையில் எல்லையிடப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் எதிர்கால குடியேற்றம் தடையாக உள்ளது. அத்துடன் நானாட்டான் பிரதேச செயலர் பிரிவின் முருங்கன் நகரத்திற்கு அருகிலும் முருங்கன் பிட்டியிலும் தற்போது அவசர அவசரமாக படைமுகாம்கள் தனியார் மற்றும் அரசகாணிகளில் அமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன. வங்காலையில் தற்போது இந்தியாவில் வசிக்கும் தனியாருக்குச் சொந்தமான காணியுடன் அரச காணியும் சேர்த்து கடற்படை தம்வசமாக வைத்துள்ளது.
நரிக்காடு சீமெந்து கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான காணியை பெருபாண்மை இனத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதே போல் மன்னாரின் பிரதான வாழ்வாதார தொழிலானது கடற்றொழில் ஆகும். அத்தொழில் மேற்கொள்ளும் கரையோரப் பகுதிகளில் பல இடங்களில் இறங்குதுறைகளைக் கடற்படையினர் முகாம் அமைத்துள்ளதுடன் அந்நிலங்களை சட்டபூர்வமானதாக்க விண்ணப்பித்துள்ளனர். இதனால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றைவிட தலைமன்னார், பேசாலை, செல்வபுரம், சனிவிலேச், சிலாவத்துறை, அரிப்பு, கொக்குப்புடையான், நறுவிலிக்குளம், ஜீவநகர், பண்டாரவெளி, உயிலங்குளம், பரப்புக்கடந்தான்,
கள்ளியடி, நாயாற்றுவெளி, கூராய், இலுப்பைக்கடவை, வெள்ளாங்குளம், பாலம்பிட்டி, இரணைஇலுப்பைக்குளம், செங்கல்பட்டு, மண்கிண்டி இவ்வாறான இடங்களில் படைதரப்பு பலநூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை தம்வசப்படுத்தியுள்ளது. இவற்றைவிடவும் இன்னும் பல கிராமங்களிலும் நிலைகொண்டுள்ளனர். இவ்விடங்களில் சில காணிகள் சட்டப்படி அரசால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம். மன்னார் மாவட்டத்தில் இன்னும் பலர் மீள்குடியேறவேண்டியுள்ளதனால் காணிகளின் தேவை அதிகமாகவுள்ளது. மாவட்டத்தின் 20 வீதமான வளமிக்க நிலத்தை படைத்தரப்பினர் ஆக்கிரமித்துள்ளதுடன், தமக்கே சொந்தமாக தருமாறும் அதிகாரிகளை நிர்ப்பந்திப்பதாகவும் அறிகின்றோம். எனவே வடகிழக்குப் பிரதேசம் எங்கும் திட்டமிட்ட முறையிலே நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், குடிப்பரம்பல் மாற்றம், பௌத்த விகாரைகள் அமைத்தல், போன்றவை தமிழர் தாயகப் பிரதேசத்தில் நடைபெறுவதற்கு எதிராக எமது வாழ்வுரிமைக்கான நிலவுரிமைக் கோரிக்கைக்கான கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்து தமிழ்க் கட்சிகள் உட்பட ஜனநாயக அடிப்படை நியாயாதிக்க சிந்தையுள்ள சிங்கள, முஸ்லிம் கட்சிகளையும், பொது மக்களையும், குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிறார் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், ¬¬¬¬¬¬இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் விவகார செயலாளருமாகிய வி. எஸ். சிவகரன்.