அரசாங்க இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் தாமதமாக கிடைப்பதன் காரணமாக ஆயிரக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் வல்லுறவு, மரணத்தை ஏற்படுத்தி விபத்துக்கள், போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பெருபாலான வழக்குகளின் விசாரணைகள் நிறைவுபெறாமல் நிலுவையில் உள்ளன. புலனாய்வுப்பிரிவினர், போதைப் பொருள் தடுப்பு பணியகம், போக்குவரத்து காவற்துறையினர் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த வழக்குகளின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் தாமதிப்பது குறித்து சம்பந்தப்பட்ட விசாரணைப் பிரிவினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.அத்துடன் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கும் வரை அவர்களால் விசாரணைகளை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
அத்துடன் இந்த வழக்குளுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இரசாயன பகுப்பாய்வு அறிக்கை ஏன் தாமதமாகுகிறது என பிரதான இரசாயன பகுப்பாய்வாளர் ரி.ஆர்.லியனாராச்சியிடம் கேட்டபோது, 10 வருடங்களுக்கு முன்னர் இருந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் குவிந்து கிடப்பதாக கூறியுள்ளார்.
மாதம் ஒன்றுக்கு சுமார் இரண்டாயிரம் இரசாய பகுப்பாய்வுகள் நீதிமன்றங்களினால் கோரப்படுகின்றன. எனினும் பகுப்பாய்வுகளை மேற்கொள்ள போதுமான அதிகாரிகள் இல்லை. அரசாங்க பகுபாய்வு திணைக்களத்தில் 62 பகுப்பாய்வாளர்கள் மாத்திரமே பணியாற்றி வருகின்றனர். இதனால் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையை அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் லியனாராச்சி கூறியுள்ளார்.