வட மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் நடத்தப்பட உள்ளதாக பாரம்பரிய கைதொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
யுத்தம் முடிவடைந்து, 3 வருடங்கள் கழிந்துள்ள நிலையில், அரசாங்கம் இன்னும் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை. அங்கு தேர்தல் நடைபெற்ற அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிப்பெறும் என்ற காரணத்தினாலேயே அரசாங்கம், தேர்தலை ஒத்திவைத்து வருவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
கிழக்கு மாகாணத்தை விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றிய அரசாங்கம், அங்கு உடனடியாக தேர்தலை நடத்தியது எனினும் வடக்கில் இதுவரை தேர்தலை நடத்த எந்த முனைப்புகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், வடக்கில், சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி சன விகிதாசாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய பின்னரே அரசாங்கம் தேர்தலை நடத்த உத்தேசித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில் ஏற்கனவே, முல்லைத்தீவு மாவட்டத்துடன், வெலிஓயா (மணலாறு) இணைக்கப்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டத்தில், சிங்கள மீனவர்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை தவிர மன்னார் மாவட்டத்திலும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களில் பலர், இன்னும் தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படாத நிலையில், யாழ்ப்பாணத்தில் முன்னர் குடியிருந்தாக கூறி, அங்கு சென்று யாழ் தொடருந்து நிலையத்தில் தங்கியிருந்த சிங்களவர்களுக்கு உடனடியாக காணிகள் வழங்கப்பட்டு, குடியேற அனுமதி வழங்கப்பட்டிருந்தமை நினைவூட்டதக்கது.