ஆண்மை
காலடியிற் சிதைகிறது சேறு
கண்ணிமையில் மோதுகின்றன ஈசல்கள்
வீடுகளில் தப்பி வந்த ஒளிக்கீற்று
வெள்ளத்தில் வெலவெலக்கிறது
விரல் பிணையவில்லை
குரல்இழையவில்லை
உடல்ஒன்றவில்லை
நடக்கிறோம்..
அவள் பேசவில்லை.
ஆடாத அசையாத கடலின் கரையில்
சளுக்கிடும் நீரின் இதத்தில்
இருளும் மௌனமும் உயிர் கொண்டு
சிறு வெண்கூர்கள் ஆயிரம் திறந்திருந்த வான் நோக்கி எழுந்தவன்று
அவள் பேசவில்லை.
பேசாது பெண்மையைத்தந்திருந்தாள்.
இன்று பேசினாள்
நின்று பேசினாள்
“முத்தமிடலும் தழுவிக்கொள்ளலும்
எல்லாமும் முடிந்து போனபின்னும்
நான் உன்னை நேசித்தேன்
என்பதை நீ உணர நான் என்ன செய்ய வில்லை மூடா...?
இன்னொரு உயிரை அச்சுறுத்தும் முகமும்
உன் உணர்வுகளுள் தோய்ந்தெழுந்தபோது நான் நான் கொண்ட அச்சமும்...
நடுங்கிப்போனேன்.
விகாரத்தில் சிக்கிய விழிகளால் என்னை எத்தனைநாள்பார்த்தாய்?
கண்ணீரை இலகுவாகச் சிந்தக்கூடிய இதயத்தை
காலம் என்னிடமிருந்து பறித்து விட்டது
சமாதானம் என்பதற்குள் ஒழிந்திருக்கும் போரையும்
மென்மை என்பதற்குள் ஒழிந்திருக்கும் பேதமையையும்
பிரித்தறியக் கற்றுக் கொண்டேன்
போடா குறி தொங்கும் கூத்தா!”
போய்விட்டாள்…
அண்டமாய்ப் பிரபஞ்சமாய் பால்வெளியாய்
பரந்து செல்லும் காலத்தை வியாபித்த
அவள் வார்த்தைகளின் கீழ்
நான் தனித்து விடப்பட்டேன்.
ஆனி 2012
ஓடுதலும் உணர்தலும்
மூளை கொதிக்கும் போது
மனம் கோடைகாலம் போல் ஆகிவிடுகிறது
ஒரு பெரும் மழைக்கெனச் சீவராசிகள் ஏங்குவது போல
மனம் அமைதி என்னும் பெருமழையில் மூழ்கடிக்கப்பட ஏங்குகிறது.
பெரும் அலைகளின் ஓசையில்
இரவு மௌனமாகி விடுவதை உணரமுடிவதைப்போல்
வானம் இருளால் நிரம்புகையில்
துயரம் எங்கிருந்து ஊற்றெடுக்கிறது என்பதை அறிய முடிவதில்லை.
மௌன மன வெளியில்
எதுவெல்லாம் விரிகிறதென்று உரைக்கவும் முடிவதில்லை.
நான் ஓடத்தொடங்கினேன்
ஆன்மாவைத் தக்க வைக்க ஓடத்தொடங்கினேன்.
இலயம் உடைந்த இதயத்தை
வெம்மையின் பிரவாகத்தாரை நனைக்கிறது.
நட்சத்திரங்களால் ஆன வானத்திற்கும்
வெம்மையில் தகித்திருந்த மண்ணுக்குமிடையில்
ஓடிக்கொண்டிருந்த போது
உணரப்படமுடியாத ஆயிரம் அதிர்வுகளால்
வாழ்வு நிரம்பியிருந்ததை உணர்ந்தேன்.
காதலிகள் அற்ற கவிஞர்களின் சொற்கள் போலச் சிதறிக் கிடந்த
கல்லறைகள் நிறைந்த இலையுதிர்கால மயானத்தைக் கடந்த போது…
என்னுள் பெய்தது பெருமழை.
ஆனி 2012