புதிய கட்டடத்திற்கான நிதி ஒதுக்கீடும் இல்லை:-
கிளிநொச்சி மத்தி கல்லூரியில் நீண்டகாலமாக போரின் நினைவுச்சின்னமாக இருந்த பெரிய கட்டிடம் அழிக்கப்படுகின்றது. கட்டடத்தை இடித்தழிப்பதற்கான பணம் கல்வி அமைச்சினால் ஒதுக்கப்பட்டு அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் இதற்குப் பதிலான புதிய கட்டடம் அமைப்பதற்கான எந்த விதமான நிதி ஒதுக்கீடுகளும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை என பாடசாலைத் தரப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு பாடசாலை மாணவர்களையும் அப்பகுதி மக்களையும் பெரும் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறது என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்தக் கட்டிடம் 1996 இல் சத்ஜெய இராணுவ நடவடிக்கையால் பலத்த காயங்களுக்கு உள்ளானது. அதற்கு முன்பும் நடந்த சில யுத்த நடவடிக்கைகளில் பாதிப்படைந்திருந்தது. ஆரச படைகளின் வான் தாக்குதல்கள் குண்டு வீச்சுகளால் காயங்களுக்கு உள்ளான அக்கட்டிடம் போர் நினைவுச்சின்னமாக தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பேணப்பட்டது.
சமாதான காலத்தில் வன்னிக்கு சென்றவர்களுக்கு போரின் கதையையும் போர்ச் சூழலில் உள்ள பாடசாலைகளின் நிலவரங்களையும் இக்கட்டிடம் எடுத்துச் சொன்னது. சாமாதான காலத்தில் வன்னிக்கு சென்றவர்கள் பலரது கவனத்தை காயங்கள் மிகுந்த இக்கட்டிடம் ஈர்த்தது.
இக்கட்டிடத்தை போர் நினைவுச்சின்னமாக பாதுகாக்க வேண்டும் என்று பாடசாலை மாணவர்கள் தரப்பால் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குறித்த கட்டடிடத்தை அழித்து புதிய கட்டிடம் கட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனக் கூறப்படுகின்ற போதும் அதற்கு கூட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை என கவலை வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தங்களின் போது புலிகளால் பாதிப்படைந்த கட்டடங்கள் அல்லது அசையும் அசையாச் சொத்துக்கள் பல புலிகளின் பயங்கரவாத நடவடிக்கையாக சித்தரிப்பதற்கு போரின் நினைவுச் சின்னமாகக அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக கிளிநொச்சி தண்ணீர்தாங்கி. ஆனால் அரச பயங்கரவாதத்தினால் அழிக்கப்பட்ட மாபெரும் கட்டடங்கள் உள்ளிட்ட முக்கிய தடையங்கள் அழிக்கப்பட்டு அங்த நினைவுகள் திட்டமிட்டு மறைக்கப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஆந்த வகையில் இந்த நடவடிக்கையும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் கிளிநொச்சி மக்களின் நினைவுகளை காயப்படுத்துவதாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.