செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

பிறக்கும் போது எவரும் துப்பாக்கிகளுடனோ அல்லது வன்முறையாளர்களாகவோ பிறப்பது இல்லை - நடராஜா குருபரன்

 

இலங்கையின் நீதித்துறையும் அரசியல் கைதிகளும்

"பிறக்கும் போது எவரும் துப்பாக்கிகளுடனோ அல்லது வன் முறையாளர்களாகவோ பிறப்பது இல்லை" நடராஜா குருபரன்

 

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இறுதி யுத்தத்தின் பின் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின்ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கடந்த மூன்ரரை வருடங்களாகச் சிறைகளில் வாடுகின்றனர்.

இலங்கை அரசாங்கம் யுத்தம் முடிவடைந்த போது போராளிகளை சரணடையுமாறு அறிவித்தல்களை விடுத்திருந்தது. களத்தில் இருந்த பாதுகாப்புப்படையினரும் ஒலிவாங்கிகள் மூலமாகப் போராளிகளை சரணடையுமாறு கோரி இருந்தனர். இதனை நம்பி ஆயிரக்கணக்கான போராளிகள் சரணடைந்தார்கள். உடனடியாகச் சரணடையாத பலரை அவர்களின் உறவினர்கள் பின்னர் படையினரிடம் கையளித்தனர். ஆனால் இவ்வாறு சரணடைந்த பலருக்கு என்ன நடந்ததுன்ற கேள்விக்கு இலங்கை அரசாங்கம் இன்றுவரை உருப்படியான பதில் எதனையும் தரவில்லை. மாறாகத் தகுந்த ஆதாரங்களுடன் சரணடைந்தவர்களைக்கூட அவர்கள் சரணடையவில்லை எனக் கூறி முழுப் பூசனிக்காயை அரசு சோற்றில் மறைக்கிறது. உதாரணமாக விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன், புலிகளின் பிரதி அரசியற்துறைப் பொறுப்பாளர் தங்கன், மூத்த உறுப்பினர் பாலகுமாரன் போன்றோர் அரச படைகளிடம் சரணடைந்ததற்கும் வேறு சில போராளிகள் அருட்தந்தை ஒருவர் மூலமாக சரணடைந்ததற்கும் கண்கண்ட சாட்சிகள் உள்ளனர்.இவர்களின் துயரமும் கதைகளும் இன்னும் அரங்கத்துக்கு வரவில்லை. ஆனால் சரணடைந்த பலர் விசாரணைகள் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றனர்.

புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர் இனி இன நல்லிணக்கம் ஒன்றுதான் மிச்சம் என்று கூறுகிறவர்கள் இந்த அரசியற்கைதிகள் நடத்தப்படும் முறைமை பற்றி ஏன் எதுவும் பேசுகிறார்கள் இல்லை?

இவ்வரசியற்கைதிகள் தம்மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி தமக்கு மன்னிப்பை அல்லதுபுனர்வாழ்வை வழங்குமாறு கோரி வருகின்றனர்.

நீதிமன்ற விசாரணைகளில் கலந்து கொண்ட சில கைதிகளுக்கு சுய விருப்பின் அடிப்படையில் புனர்வாழ்வுக்கு அனுப்பப்டுவதற்கான உத்தரவுகளை நீதிமன்றம் வழங்கிய போதும் அவற்றுக்கும் பொலீஸ்சும் சிறைசாலை அதிகாரமும் தடைகளையும் வில்லங்கங்களையும் ஏற்படுத்தி வருவதையும் காண்கிறோம்.

ஏன் இவ்வாறு செய்கிறீகள்?

இவர்கள் கடந்த 3.5 வருடங்களாக இவர்களது விடுதலை மற்றும் புனர்வாழ்வு தொடர்பாக வழங்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றப்பட்ட நிலையில் சிறைகளிலே இவர்கள் அகிம்சை வழியில் போராட்டங்களை நடாத்தத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் இப்போராட்டங்கள் சிறைப் பாதுகாவலர்களாலும் பொலீஸ் மற்றும் இராணுவப்படைகளாலும் மிக மோசமான முறையில் அடக்கப்படத் தொடங்கியுள்ளன.

கடந்த வாரம் வவுனியாச் சிறைசாலையில் நிகழ்ந்த துயரமான சம்பவம் இலங்கையின் நீதித்துறை தொழிற்படும் முறைமை குறித்துப் பல கேள்விகளை எழுப்புகிறது.

இந்தச்சம்பவம் இலங்கையின் நீதித்துறைக்கு மனித முகம் ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

இந்தச்சம்பவம் இலங்கையின் நீதித்துறை தனது இனவாத முகத்தை இன்னும் கைவிட வில்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது.

இந்தச்சம்பவம் முள்ளி வாய்க்காலில் சரணடைந்த பலபோராளிகளை கொடூரமான முறையில் கொன்றொழித்த அதே இரத்தம் நிறைந்த கைகள் சிறைசாலைகளினுள்ளும் நடமாடுகின்றனவா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

சரணடைந்த ஆயிரக்கணக்காணவர்களில் 30 பேர் வரையிலான அரசியல் கைதிகள் வவுனியாவில் சிறைச்சாலையில் கடந்த 3.5 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.

இவர்கள் அண்மையில் மூன்று  சிறை அதிகாரிகளை பிடித்து பணயக்கைதிகளாக்கி தடுத்து வைத்து விட்டனர். உடனே அரசசார்பு ஊடகங்கள் அனைத்தும் புலிப்போராளிகள் வன்முறை நாடிவிட்டனர் எனக் கூக்குரலிடத் தொடங்கிவிட்டன. என்ன நிகழ்ந்தது என்பதை சரியாக ஆராயாத ஊடகங்களும் உண்மையிலும் நடந்தவற்றை வெளிதெரிய விட விருப்பமிலாத ஊடகங்களுமே இவ்வாறு கூக்குரலிட்டன.

இந்தச்சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்த போது இவர்களுடன் தொடர்பில் இருந்த பத்திரிகையாளன் என்ற வகையில் நடந்ததை குறிப்பிடவேண்டும்.

இவர்களுடன் சிறையில் இருந்த சக அரசியற் கைதி சரவணபன்தனியே பிரித்தெடுக்கப்பட்டு அனுராதபுரம் சிறைசாலைக்கு மாற்றப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்தொடர்பான தகவல்களும் இல்லாமல் போயின.

சரவணபவன் மீது கடுமையான சித்தரவதைகளை அரசாங்கச் சிறைக் காவலர்களே மேற்கொண்டுள்ளனர். இதற்குச் சிறை உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடையம் என்னவென்றால் சரவணனை மிக மோசமான உடற்சித்திரவதைகளுக்கு உட்படுத்திய பின்பு மனித மலக்கலவையால் குளிப்பாட்டியிருக்கின்றனர்.

இது என்ன விதமான நீதி?

இது எந்த விதமான பண்பாடு?

இந்த நிலையிற் தான் சரவணனுக்கு என்ன நடந்தது எனத்தெரிவிக்கும் படியும் அவனைத்தமக்குக் காட்டும் படியும் கூறி வவுனியாச் சிறையில் அரசியற்கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது உணவுத்தவிர்ப்பை கைவிடுமாறு பலாத்காரப் படுத்தப்பட்டனர். அவர்கள் மறுக்கவே 10 முதல் 15 வரையிலான அதிகாரிகள் அவர்களது கூண்டுகளுக்குள் புகுந்து அவர்களைத் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலினால் பொறுமையிந்த கைதிகள் 3 அதிகாரிகளைச் சிறைப்பிடித்தனர்.

இவ்வாறு சிறைபிடிக்கப்பட்ட அதிகாரிகளை தாங்கள்  திருப்பித்தாக்கவில்லை எனவும் அவர்கள் உணவு உண்பதைத்தடுக்கவில்லை எனவும் அந்த அரசியற்கைதிகளின் சார்பில் பேசியவர் எனக்கு தெரிவித்திருந்தார்.

தடுத்து வைக்கப்பட அதிகாரிகளை விடுவிக்க  நீதிபதி ஒருவர் ஏணி வைத்துச் சுவர் ஏறிச்சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போதும் பணயமாக வைத்திருந்த அதிகாரிகளை சரவணனை தமக்கு காட்டும் வரை விடுவிக்க அரசியற்கைதிகள் மறுத்து விட்டனர்.

இலங்கையின் சட்டவிதிகளில் தமது சக கைதிக்கு என நிகழ்கிறது என்பதை அறியும் உரிமை ஏனைய அரசியற்கைதிகளுக்கு உள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதிகாரிகளைப் பணயக்கைதிகளாக பிடித்துகொண்டு நிபந்தனைகளை விதிப்பது சட்டத்தினால் தவறானதாகவே பார்க்கப்படும்.

இதனை நான் வெளிப்படையாகவே சம்பவத்திற் தொடர்புபட்டிருந்த அரசியற் கைதி ஒருவரைச் செவ்வி கண்ட போது தெரிவித்திருந்தேன். நீங்கள் உங்களது போராட்டத்தை அகிம்சை வழியிலே தொடர்ந்தும்  நடத்தாமல் அதிகாரிகளைச் சிறைப்பிடித்தமை நிலமையை இன்னும் மோசமாக்கும் செயலாகும்  என தெரிவித்திருந்தேன். மேலும் அரசியல் கைதிகளான நீங்கள் சிறையின் உள்ளிருந்து எம்முடன் தொடர்பு கொள்வது என்பது கூடச் சிக்கலை எற்படுத்தும் எனவும் கூறியிருந்தேன்.

ஆனால் மனிதாபிமானத்தின் பார்வையில் சகமனிதன் ஒருவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு விளக்கம் தருமாறு அவர்கள் கோருவது எந்த வகையில் பிழையானது?

தம்முடன் இருந்த சக அரசியற்கைதிக்கு என்ன கருணாவைப்போல சுகவாழ்வைக் கேட்டார்களா அல்லது தமிழினியைப் போல உடனடி யான புனர்வாழ்வைக் கேட்டார்களா அவனுக்கு என்ன நடந்தது என்று கேட்டார்கள் அவனை மீண்டும் வவுனியாவுக்கு கொண்டு வாருங்கள் எனக் கேட்டர்கள். அவனை எமக்கு காட்டுங்கள் எனக் கேட்டார்கள். இதற்காகவே உணவு உண்ணாமல் தவிர்த்தார்கள். இதற்காக அவர்கள் அடிதடியில் இறங்கவில்லை ஆயுதங்களை இறக்குமதி செய்து தரும்படி  கே.பீ யைக் கேட்கவில்லை. அய்யா தங்களுடைய சாப்பாட்டைச் சாப்பிடாமல் விட்டார்கள். அதற்காக கூண்டுக்குள் புகுந்து பதினைந்து பேர் தாக்குவதா?

இப்பொழுது சொலுங்கள் அவர்களிடமிருந்த அகிம்சை உணர்வையும் பொறுமையையும் யார் பறித்தது? பிரபாகரனா?

இந்தச்சம்பவத்தைச் சுட்டித்தான் புலிகள் சிறையில் இருந்தாலும் சரி வெளியில் இருந்தாலும் சரி வன்முறையாளர்களே எனப்பலர் கூக்குரலிடத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு கூக்குரலிடுபவர்கள் தாம் மிக மோசமான உடல் உளச்சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு தம்மீது மனித மலம் கரைத்து ஊற்றப்பட்டால் என்ன செய்வார்கள்…?

இங்கேதான் ஒரு தலைப்பட்சமாகப் பேசுபவர்கள் கவனிக்க வேண்டும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் இருந்து, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வரை தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் புர்வாழ்வுமற்றும் அடிப்படை மனித உரிமை சார்ந்தவிடயங்கள் குறித்து பேசிய விடயங்களை இந்த அரசு எள்ளவும் கணக்கிலேயே எடுக்கவில்லையே.

நீங்கள் அதனைப்பற்றியும் பேசுவீர்களா?

மனிதத்தன்மைக்கு விரோதமான விசாரணை முறைகளையும் சித்திரவதைகளையும் தாங்கிக்கொண்டு எந்த நம்பிக்கையும் இல்லாமல் சிறைகளில் சித்தம் கலங்கி வாழ உங்களுக்கு முடியுமா?

நீதியின் முன் அனைவரும் சமம். இலங்கையில் இனங்கள் இல்லை. மனிதர்களே உள்ளனர் எனப்பார்ப்பதும் பரிபாலிப்பதும் தான் நீதித்துறையின் கடமை. இது இல்லை என்று வருகிற போது நீதி என்ன நீதி

முன்னாள்ப் புலிப் போராளிகளை விடுதலை செய்வதற்கு அல்லது அவர்களுக்குப் புர்வாழ்வளிப்பதற்கு அல்லது அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தவதற்கு, அல்லது அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு என்ன அளவுகோலை இலங்கையின் நீதித் துறையும் அரசாங்கமும் பயன்படுத்துகின்றன?

கேள்வி எழுகிறதே இதயத்தில்.

கிழக்கில் கருணாவால் புலிகள் இயக்கத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டவர்கள், இன்று இலங்கைச்சிறைகளில் வாடுகின்றனர். எல்லோருக்கும் தெரிந்த சரணடைந்த 600 பொலிசாரின் கொலை மற்றும் கிழக்கில் நடந்த பெரும்பாலான கொலைகளுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய கருணா இன்று பிரதி அமைச்சராகவும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவராகவும் இருக்கிறார். அவருடன் இணைந்து இயங்கிய பிள்ளையான் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் ஆக இருக்கிறார். இவர்கள் குறைந்தபட்ச சாக்குபோக்கான நீதிவிசாரணைகளுக்குக் கூட உட்படவில்லையே. புலிகளின் அதி உச்ச இராணுவ வளர்ச்சிக்கு பிரதான பங்காற்றிய கே.பீ என்கிற குமரன் பத்மநாதன் அரச விருந்தாளியாக இருக்கிறார்.. புலிகளின் மகளீரணி அரசியற் பொறுப்பாளர் தமிழினி வவுனியாவிற் புனர்வாழ்வு பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். புலிகளின் அரசியற் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ச் மாஸ்ரர், மற்றும் தயாமாஸ்ரர் ஆகியோர்விடுவிக்கப்பட்டு சமூகத்துடண் இணைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் சரணடைந்த ஆயிரக்கணக்கான சாதாரண இளைஞர்கள் யுவதிகள் இன்னும் புலிகளாகவே பார்க்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகின்றனரே ஏன்?

எய்தவர்களுக்கே மன்னிப்பென்றால் அம்புகளுக்கு மட்டுமேன் இந்தப்பாரபட்சம். சொல்லுங்கள் என்ன வகையான நீதியிது?

இங்கே தெளிவாக ஒன்றைக்கூற விரும்புகிறேன். கருணாவையோ பிள்ளையானையோ, கேபியையோ, தமிழினியையோ, தயாமாஸ்ரரையோ, ஜேர்ச் மாஸ்ரரையோ திரும்பவும் பிடித்துச் சிறையிற் போடுங்கள் மண்வெட்டிப்பிடிகளால் உடலெங்கும் அடித்துக் கைகால்களை உடைத்து மனித மலத்தால் குளிப்பாட்டுங்கள் என நான் சொல்ல வரவில்லை.

அவர்களுக்குச் சமுகத்துடன் இணைந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டது மிகவும் மகிழ்சிக்குரியது. ஆனால் அதே நீதிதானே சரணடைந்த சகல போராளிகளுக்கும் செயற்படவேண்டும் அல்லது நான் பிழையாக விளங்கிக்கொண்டேனோ? இங்கே வேறேதும் ஒரு நிபந்தனையுள்ளதோ? அவ்வாறாயின் அதை வெளிப்படையாக அரசியற்கைதிகளுக்கும் ஊடகங்களுக்கும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரிவியுங்கள

சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கத்துவம் பெற்றவேண்டும்; அரசங்கத்தை வெளிப்படையாக ஆதரிக்கவேண்டும்; கடந்த 50 வருட அழிவுகள் அனைத்துக்கும் புலிகளே பொறுப்பெறுன்று கூறவேண்டும் மகிந்தகுடும்பம்  தமிழர்களை மீட்க வந்த மீடபர்கள் எனச் சொல்லவேண்டும் புலிகள் மட்டுமே போர்க் குற்றவாளிகள் எனக்கூறவேண்டும். இவை எல்லாவற்றையும் அல்லது இவற்றுள் ஏதாவது ஒன்றையாவது செய்தால் இலங்கையின்  நீதிதுறை உங்கள் மீது தனது கடைக்கண் பார்வையைச்செலுத்தும் என வெளிப்படையாக எழுதி ஒட்டுங்கள் எல்லாப்பிணங்கள் மீதும்.

1971 புரட்சியின் போதும் 1988/89 புரட்சியின் போதும்  ஆயிரக்கணக்கான  ஜேவிபீ கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டும் காணாமல் போகவும் செய்யப்பட்டார்கள். ஆனால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட  ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் மற்றும் யுவதிகளைக் கைகால்கள் தினவு எடுக்கும் போதேல்லாம்  சென்று தாக்கினீர்களா? மனித மலங்களை அவர்கள் மீது கரைத்து ஊற்றினீர்களா? இல்லையே!

ஜே.வீ.பீயும் புத்திஜீவிகளை, அரசியற் பிரமுகர்களை, படையினரை பொலீசாரை சாதாரண மக்களைக் கொலை செய்திருந்ததுதானே! காணாமல் போனவர்கள் மற்றும் கொல்லப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர்கள் தவிரக் கைதாகிச் சிறைகளில் இருந்தவர்களை எல்லாம் நிபந்தனையின்றி விடுதலை செய்தீர்கள்தானே?.

இன்று அவர்களிற் பலர் பாராளுமன்ற அரசியலிற் கலந்து கருணா பிளையான் போல உங்களின் செல்லப்பிள்ளைகளாகவும் உள்ளார்களே!

ஜே.வீ.பீக்கொரு நீதி புலிக்கொரு நீதியென்றால் அதை இன்னும் தெளிவாக “………………………………………………………..ஒரு நீதி “…………………………… ஒரு நீதி எனக்கூறலாமே

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அதாவது அரசியல் கைதிகள் கையடக்கத் தொலைபேசிகளை அனுமதியின்றி சிறையினுள் வைத்து பேசுகிறார்கள். புலம்பெயர் தமிழர்களுடன் பேசுகிறார்கள் எனக் குற்றம் சாட்டுகிறீர்கள்.

இலங்கையின் மேல்நீதிமன்ற நீதிபதி வரகாப்பிட்டியவை சுட்டுக் கொன்ற பொட்டை நௌபரும் சிறையிலிருந்து தனது கையடக்கத் தொலைபேசியில் சர்வசாதாரணமாக தனக்கு வேண்டப்பட்டவர்களுடன் பேசுகிறாரே? மிகக்கொடூரமான கொலைகளைப் புரிந்த அரச ஆதரவுப்பாதாள உலகக் குழுக்களின் முக்கியஸ்த்தர்கள் சிறையில் இருந்துகொண்டே அனைத்து சுகபோகங்களையும் அனுபவிப்பதோடு தமது பாதாள உலகநடவடிக்கைகளை  தொலைபேசி மூலமேயே ஒழுங்கு படுத்தி விடுகிறார்களே! தமிழர் கையிலிருப்பது மட்டுமே கண்ணுக்குத் தெரிவதன் மாயமென்ன நீதி தேவதையே.

இப்பொழுது சிறைக்குள் இருந்து அரசியற்கைதிகள் புலம்பெயர் தமிழர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிதான் முடிவுகளை எடுக்கிறார்கள் என்றும் வவுனியா சிறைக்குள் கொல்லப்பட்ட புலிகளின் முக்கியஸ்த்தர்களுக்கு நினைவு ஸ்தூபி வைக்கப்பட்டிருந்ததாகவும் அரசாங்க சார்பு ஊடகங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றன.

இருக்கச்சகிக்க முடியாத சிறைக்குள் இறந்தவர்களுக்குச் எப்படி சின்னம் வைத்தார்கள் என்று அரசியற் கைதிகளைத் தான் கேட்கவேண்டும்.

புலம் பெயர்ந்த தேசத்திலிருந்து ஒரு பத்திரிகையாளனாக நான் அவர்களுடன் பேசி இருந்தேன். உள்ளே என்ன நடக்கிறது என்பதனை வெளிக் கொண்டுவரும் நோக்குடனேயே அவர்களுடன் பேசியிருந்தேன். என்னுடன் பேசியவர்க்கு அது குறித்து தெளிவாக்கியும் இருந்தேன். ஆனால் தமக்கு தமது பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்கு வேறு வழி தெரியவில்லை என அச்சந்தர்ப்பத்தில் அக்கைதி கூறி இருந்தார்.

இலங்கை ஒரு சனநாயக நாடாகவிருந்து பத்திரிகையாளர்களும் பக்கசார்பற்றவர்களாக இருந்திருந்தால்  கைதிகளுக்கு தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிச்சொல்ல சந்தர்ப்பமும் உரிமையும் வழங்கப்பட்டிருந்தால் அந்தக்கைதிகள் நிட்சயமாக புலம் பெயர்பத்திரிகையாளர்களை  அழைத்திருக்கமாட்டார்கள் என நான் நம்புகிறேன்.

மற்றயது கொல்லப்பட்ட புலிகளுக்கு நினைவுத் தூபி வைகிறார்கள் என்று  குமுறுகிறீர்கள்.

ஜே.வீ.பீ தோல்வியில் முடிந்து போன இரண்டு கிளர்ச்சிகளையும் நினைவு கூர்ந்து கொல்லப்பட்ட அவ் அமைப்பின் தலைவர் றோகண விஜயவீர உட்பட்ட அனைத்துப் போராளிகளின் நினைவாக   வருடாவருடம் கார்த்திகைவீரர் நினைவு தினத்தை அனுஸ்டிக்கிறது. ஜே.வி.பியும் இலங்கையின் அரச இயந்திரத்திற்கு எதிராகப் போராடி பல நுற்றுக் கணக்காணவர்களைக் கொன்ற பயங்கரவாத இயக்கம் எனக் கூறி அழிக்கப்பட்ட இயக்கமாகும். தமிழீழ விடுதலையை விரும்பிய புளொட் இயக்கம் வீரமக்கள் தினம் என ஒன்றை அனுஸ்டிக்கிறது. ஈபீஆர்எல்எவ் தியாகிகள் தினம் என ஒன்றை அனுஸ்டிக்கிறது. இவற்றுக்கெல்லாம் தடையில்லையென்ன்றால்… விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பால் தம்மளவிலாவது உன்னதமான கனவோடு தனது இனத்தின் விடுதலைக்கு போராடிய ஒரு போராளிக்கு போரில் மரணித்த தனது சக போராளியை நினைவு கூரக்கூட உரிமை இல்லையா.

பிறக்கும் போது எவரும் துப்பாக்கிகளுடனோ அல்லது வன்முறையாளர்களாகவோ பிறப்பது இல்லை. ஆனால் உங்கள் போன்ற அடக்கு முறையாளர்கள்தான் மக்களின் கைகளில் வலிந்து ஆயுதங்களைக் கொடுக்கிறீர்கள். வன்முறையில் இருந்து சாத்வீகத்திற்கு திரும்பிய அந்தப் போராளிகளை தமது கோரிக்கைகளை முன்வைத்து தமது உணவைத் தவிர்த்து போராடியவர்களை வலிந்து இப்போ வன்முறையாளர்களாக உலகுக்கு காட்டியுள்ளீர்கள்.

ஆனால் தமிழில் ஒரு பழமொழி உள்ளது சாது மிரண்டால் காடுகொள்ளது என்று. இது இப்போது சாத்தியமில்லாதிருக்கலாம் ஆனால் எப்போதுமல்ல.

 

அனுப்புக Home, Srilankan News, Articles
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.