இலங்கையில் கடந்த வருட இறுதி வரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. காணாமல் போயுள்ள 15 ஆயிரத்து 780 பேரில் அதிகளவானவர்கள் ஆண்கள் எனவும் ஆயிரத்து 494 சிறார்களும், 754 பெண்களும் இதில் அடங்குகின்றனர்.
ஜெனிவாவில் உள்ள தலைமையகத்தில் தனது வருடாந்த அறிக்கையை வெளியிட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜாகோப் கலன்பேர்க், இலங்கையில், ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பில் சரியான தகவல்கள் தெரியவில்லை எனவும் அவர்களின் உறவினர்களும், தமது உடன்பிறப்புகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாதிருப்பதாகவும் கூறியுள்ளார்.
கடந்த வருடத்தின் இறுதிவரை காணாமல் போனவர்களை கண்டுப்பிடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், வடக்கில் சுமார் மூன்று லட்சம் மக்கள் அகதிகளானதாக தெரிவித்துள்ள செஞ்சிலுவைச் சங்கம், அந்த மக்கள் போர் நடைபெற்ற இடத்தில் இருந்து இடம்பெயர்ந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு உதவிகளை வழங்க இடமளிக்காதது குறித்து தனது அததிருப்தியை வெளியிட்டுள்ளது.