சுரேஸ் பிறேமச்சந்திரன் GTBC FMற்கு வழங்கிய செவ்வி
வவுனியா சிறையில் இருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு அங்கு துவைக்கப்பட்ட பின்னர் றணகாயங்களுடன் மகர சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு போடப்பட்டுள்ள தமிழ் சிறைக் கைதிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்;தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குளோபல் தமிழச் செய்திகள் மற்றும் ஜீரீபீசீ எவ். எம் ஆகியவற்றிற்கு வழங்கிய நேர்காணல் இங்கு தரப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா சிறையில் அடித்து உதைக்கப்பட்ட அரசியற் கைதிகள் பின்னர் அங்கிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு அங்கு மாலை பிற்பகல் 1 மணியில் இருந்து இரவு 11 மணிவரை கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். மகர சிறைச்சாலையில் 22 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் மகர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சசி, கிருஸ்டி, கண்ணன், குலேந்திரன், எஸ் கர்ணன், விக்கினேஸ்வரன், ஆகியோர் வைத்தியசாலையில் உள்ளனர். இதனை விட மிகுதி 16 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எழும்பி நடக்க முடியாத அளவிற்கு கைகள் கால்கள், தலை என உடல் முழுவதும் அடிகாயங்கள் முறிவு காயங்கள் காணப்படுகின்றன. கடந்த வெள்ளிக் கிழமை 23 க்கும் மேற்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டு அனைவரும் மயக்கப்பட்ட நிலையில் உட்புகுந்த பொலிசார் சிறைக் காவலர்கள் மயங்கிய நிலையிலேயே வைத்து தாக்கப்பட்டுள்ளனர். பொல்லுகளால், ஆயுதங்களால் தாக்கப்பட்டது மட்டும் அன்றி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவரின் காலிற்கு கீழ் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் 1 மணியளவில் அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்டு இரவு 11 மணிவரை மாறி மாறி சிறைக் காவலர்களும் கைதிகளுமாக சிறை சுப்பிரிண்டன் தலைமையில் அடித்து நொருக்கப்பட்டுள்ளனர். உணவோ தண்ணீரோ வழங்கப்படவில்லை. ஆதன் பின் அதிகாலை மகர சிறைக்கு மாற்றப்பட்ட பின்னரே உணவு தண்ணீர் சவற்காரம் என்பன கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்களைவிட ஜேபனேசன், சசி, வேலாயுதம், டில்ருக்ஸன் ஆகிய நால்வர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டில்ருக்ஸன் என்பவர் தலையில் பலத்த அடிகாயத்தினால் ரத்தக் கசிவு ஏற்பட்டு கோமாவில் இருக்கிறார். ஏனையவர்களில் ஒருவருக்கு 2 கால்களும் முறிக்கப்பட்டுள்ளன. மற்றையவருக்கு ஒரு கால் உடைக்கப்பட்டுள்ளது. இதனை விட ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையிலும் ஒருவர் சிறையிலும் இருக்கிறார். மற்றும் 3 பேர் கண்டி போகம்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கண்டி போகம்பர சிறையின் சுப்ரிண்டனே வவுனியா சிறைச்சாலைக்கும் பொறுப்பு இவருடைய தலைமையிலேயே இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.