அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் எதிராக பொய்யான தகவல்களை வெளியிட்டு, அரசாங்கத்தை கவிழ்க்கும் பாரிய திட்டங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய கணனிகள் ஸ்ரீலங்கா மிரர் இணையத்தள அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் இந்த விடயங்களை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி பொறியிலாளர்கள் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர், கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன சில்வாவிடம் சமர்பித்த மேலதிக விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள இணையத்தளமான லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திற்கு தகவல்களை வழங்க பயன்படுத்தப்பட்ட கணனியும் அங்கிருந்து பொறியியலாளர்களினால் கண்டுப்பிடிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கு எதிராக பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்தும் அரச விரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தமை குறித்து, கடந்த மாதம் 19 ஆம் திகதி விசேட அதிரடிப்படையின் பணிப்பாளரான பிரதிக்காவற்துறை மா அதிபருக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், காவற்துறையின் கணனி பிரிவின் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.எஸ். சேனாரட்ன இது சம்பந்தமான விசாரணைகளை நடத்தியுள்ளார்.
இலக்கம் 71- போரி வீதி எத்துல் கோட்டே என்ற முகவரியில் உள்ள வீடொன்றில் இயங்கி வந்த இந்த இணையத்தளத்தின் மூலம் அரச விரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளதுடன், ஜனாதிபதிக்கு அவமதிப்பையும், அகௌரவத்தையும் ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.