அறிக்கையில் கையொப்பமிட தாய் ராஜேஸ்வரி மறுப்பு:-
09.03am
றாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் பிரேத பரிசோதனையை அரசாங்கம் நிறைவு செய்திருக்கிறது என தாய் ராஜேஸ்வரி குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார். பிரேதே பரிசோதனை அறிக்கையை பொலிசாரின் பிடியில் இருந்த தாய் ராஜேஸ்வரியிடம் காட்டிய வைத்தியர் 'உங்களின் மகன் மாரடைப்பால்தான் மரணமானார்' என கூறி கையெழுத்து வாங்க முயற்சித்துள்ளார். அதனை ஏற்க மறுத்த தான் அழுது குழறி தன் மகனின் உடலை முழுமையாக பார்த்தேன். அவனது கால்கள் நேரான திசையில் இல்லாது பிரண்டு திரும்பியிருக்கிறது. உடலில் காயங்கள் இருக்கின்றன அதனால் மாரடைப்பால் மரணமானது என்பதனை ஏற்க முடியாது எனக் கூறியதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவை காட்டி உடலைப் பொறுப்பெற்று றாகமவில் அடக்கம் செய்யுமாறு காவற்துறையும் வைத்தியசாலைத் தரப்புகளும் தன்னை வற்புறுத்தியதாக கூறிய தாய் ராஜேஸ்வரி தான் நிலத்தில் கிடந்து புரண்டு கத்தி அழுது தனது மகனின் உடலை கையளிக்குமாறு கோரியதாகவும் கூறினார்.
எனினும் காவற்துறையினர் அதற்கு மறுப்புத் தெரிவித்த நிலையில் உடலை திங்கட் கிழமைவரை பிரேதசாலையில் வைக்குமாறு கூறி தான் வவுனியா திரும்பியதாகவும் கூறிய நிமலரூபனின் தாயார் ராஜேஸ்வரி இன்று மனித உரிமைகள் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்தார்.
அங்கே தனது மகனின் உடலை மீண்டும் சுயாதீனமான பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரியும் உடலை தம்மிடம் கையளித்து அதனை உரிய சடங்குகளின் பின் வவுனியாவில் அடக்கம் செய்ய அனுமதி கோரியும் மேன்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். மேலதிக தகவல்களை தாயார் ராஜேஸ்வரி மீண்டும் எமக்குத் தருவதாக கூறியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் மரணச்சடங்கிலும் இழுபறி
வவுனியா சிறைச்சாலையிலிருந்து கடந்த 28ஆம் திகதி பகல் அனுராதபுரத்திற்கு தூக்கிச்செல்லப்பட்ட அரசியல்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதலில் காயமுற்று பின் உரிய சிகிச்சை அளிக்காமையினால் உயிரிழந்த நிமலரூபனின் மரணச்சடங்கை கொழும்பில் வைத்துக்கொள்ளுமாறு பாதுகாப்புத்தரப்பினர் தெரிவித்துள்ளதாகவும், இதற்கு அவரது தாய் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்களத்தில் எழுதப்பட்ட பிரேதப்பரிசோதனை அறிக்கையில் கையொப்பமிடுமாறும் மிரட்டியுள்ளதாகத் தெரியவருகிறது. மருத்துவப் பரிசோதனை அறிக்கை சிங்களத்தில் இருப்பதால் அதில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியவில்லை என்றும் மாரடைப்பால் மரணித்திருப்பதாக நீங்கள் கூறுவதாலும் இதில் கையொப்பமிடுவதற்கு என்னால் முடியாது என்று நிமலரூபனின் தாய் மறுத்துள்ளார். எதற்கும் அசைந்துகொடுக்காத நிமலனின் தாயாரை அடிப்பதற்குக்கூட ஒருவர் கையோங்கியுள்ளார் என்று தெரியவருகிறது.
நிமலனின் தாயார் எனக்கு எந்த உதவியும் வேண்டாம். எனது மகனை என்னிடம் தாருங்கள். எங்களுக்குக் கொள்ளிவைக்க வேண்டிய மகனுக்கு எங்கள் கைகளால் எங்களது சுற்றமும் நட்பும்சூழ இறுதிக்கிரியையாவது செய்ய வழிசெய்யுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுள்ளார். இவ்வாறு அவரது இறுதிக்கிரியைகள் கூட இழுபறிநிலையிலேயே உள்ளது. தனது மகனின் தனது கைகளில் கொடுக்க வலியுறுத்தி நிமலனின் தாயார் வவுனியா நீதிமன்றத்தை நாடியபோது இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில்தான் தாக்கல்செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மகனின் உயிரற்ற உடலையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் தனது வயதையும் பொருட்படுத்தாது அவரது தாய் கொழும்பிற்கு வழக்குத் தாக்கல் செய்வதற்காகச் சென்று கொண்டிருக்கின்றார்.