ருவான் பேர்டினன்ஸ் குற்றப் புலனாய்வுப்பிரிவில் ஆஜராக வேண்டும்:-
அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் எதிராக பொய்யான தகவல்களை வெளியிட்டு, மக்களை தவறாக வழி நடத்தும் வகையில், இரண்டு இணையத்தளங்களில் செய்திகளை வெளியிட்டமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ருவான் பேர்டினன்ஸ், இன்று(06) தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் ஆஜரானார்.
எனினும் ருவான் பேர்டினன்ஸை நீதிமன்றம் பொறுபேற்காது என நீதவான் பிரசன்ன அல்விஸ் நீதிமன்றத்தில் அறிவித்தார். மேற்படி இணையத்தளங்கள் தொடர்பான வழக்கில், ருவான் பேர்டினன்ஸை குற்றவாளியாக சேர்க்க போவதில்லை என குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இதனையடுத்தே நீதவான் மேற்படி அறிவிப்பை வெளியிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள 8 சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
அதேவேளை ருவான் பேர்டினன்ஸிடம் வாக்குமூலம் ஒன்றை பெறவேண்டியிருப்பதாக புலனாய்வுப்பிரிவின் கணனி தொடர்பான பிரிவின் பொறுப்பதிகாரி சேனாரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனடிப்படையில் இந்த மாதம் 16 ஆம் திகதி 9 மணி முதல் 4 மணி வரையான காலபகுதியில் புலனாய்வுப்பிரிவுக்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறு நீதவான், ருவான் பேர்டினன்ஸூக்கு உத்தரவிட்டார்.
ருவான் பேர்டினன்ஸ், மங்கள் சமரவீரவின் ஆலோசகராக இருந்து வருவதுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது, முன் வைத்த தேர்தல் விஞ்ஞாபனமான மகிந்த சிந்தனை கொள்கை திட்டத்தை வகுத்தவர்களின் முக்கியமான நபர் என்பது குறிப்பிடதக்கது.