செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

ராம்கோபால் வர்மாவின் நிசப்தம்யமுனா ராஜேந்திரன் -

 

ராம்கோபால் வர்மாவின் நிசப்தம் யமுனா ராஜேந்திரன் -

 

இரண்டாம் முயையாக ‘நிசப்த்’ படத்தைப் பார்த்தபோது மனிதர்களற்று மோனத்தவம் புரியும் அந்த நிலவெளியின் மலைகளும் மரங்களும் தனித்த பாதைகளும்தான் ஞாபகத்தில் நின்றது. கேரளாவின் மூணாறு மலைகள்தான் திரைப்படத்தின் கதை நிகழிடம். இப்போது யோசித்துப் பார்க்க மனித அரவமற்ற பிரதேசம் என்பது மிக நிச்சயத்துடன் வெளி உலகிலிருந்து துண்டித்துக் கொண்ட இயக்குனரின் கதைசொல்லலுக்கான ஒரு யுக்தி என்பது தெரிகிறது.

 

மத்தியதர வயதைக் கடந்துவிட்ட புகைப்படக் கலைஞர் விஜய் (அமிதாப்பச்சன்), பரதநாட்டியத்தை அவரது கணவனுக்காகவும் வளர்ந்த மகளுக்காகவும் விட்டுக் கொடுத்துவிட்ட குடும்பத் தலைவி அம்ருதா(ரேவதி), இறுதிக் காட்சியில் அந்த மலைப் பிரதேசத்திற்கு அவர்களைக் காணவரும் அம்ருதாவின் சகோதரன் சிறிதர் (நாஸர்), இவர்களது வீட்டுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து தங்கவரும் ஜியா மற்றும் அம்ருதா-விஜய் தம்பதியினரின் மகள் ரிது, பெயரில் முகம் கரைந்துவிடும் தூரத்து உருவமாகக் காதுகேளாத வீட்டு வேலைக்காரன் மண்டல், இறுதிக் காட்சியில் மட்டுமே தலைகாட்டும் ஜியாவின் காதலன் என படத்தின் கதா பாத்திரங்கள் மொத்தமாக ஏழுபேர்கள்.

 

படமெங்கிலும் நிறைந்து நிற்பவர்கள் விஜய்-அம்ருதா-ஜியா-ரிது என நான்கே நான்கு கதாபாத்திரங்கள். இதுவன்றி திரைப்படத்தின் எந்தக் காட்சியிலும், அது வீடானலும் பிரதான சாலைகளானாலும் மலைப் பகுதிகளாயினும் மனிதர்கள் இந்தப் படத்தில் துப்புரவாக இல்லை. வெளியுலகம் என்பது படத்தில் துப்புரவாக இல்லை. விஜயின் வாகனம் தவிர சாலைகளில் கூட நமக்கு வேறு வாகனங்கள் தென்படுவதில்லை.

 

புகைப்படம் உள்பட எதுவாயினும் மனிதர்களின் தனித்துவமான பார்வையினால் மட்டுமே அவை அர்த்தம் பெறுகிறது’ என நம்புபவர் விஜய். கவிதைகளை ரசிக்கத் தெரிந்தவர். பிறருக்காக அல்லாது தனது உணர்வுகளை அறிவார்ந்தும் நேர்மையாகவும் முன்வைத்து அதன்படி வாழ நினைப்பவர் அவர். அவரது மனைவி அம்ருதாவுக்கு கணவனும் வளர்ந்த மகளும்தான் உலகம். சமையலறை அதனோடு தொலைக் காட்சியின் உணர்ச்சிகரமான கண்ணீர் தொடர்கள் அவளது உலகம்.

 

அவர்களது மகள் ரிது விடுமுறைக்காகப் பெற்றோர்களுடன் தங்க வந்திருக்கிறாள். இந்தியாவில் படிக்க வந்திருக்கும் அவளது அவுஸ்திரேலியச் சிநேகிதி ஜியா இவர்களோடு விடுமுறையைக் கழிக்க வந்திருக்கிறாள். ஜியாவின் வயது பதினெட்டு. படத்தின் கதைக்கு இந்த ஜியாவின் வயது பதினெட்டு என்பது மிக முக்கியமாக ஞாபகம் இருக்க வேண்டும்.

 

ஜியாவினது பெற்றோர் விவகாரத்துச் செய்தவர்கள். அவளது தந்தையை அவள் வாஞ்சையுடன் நினைவுகூர்கிறாள். ‘எவ்வளதுதான் துன்பம் வந்தாலும் தெளிவுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்’ எனும் தந்தையின் தாரகமந்திரத்தை அவள் அடிக்கடி நினைவுகூர்கிறாள். அவளது தாயைக் குறித்த அவளது நினைவுகள் இனிமையானது இல்லை. தாயையும் அவளது அவஸ்திரேலிய அண்டை வீட்டாரையும் அவர்களது நாயையும் ஜியா வெறுக்கிறாள். அனைத்துக்கும் மேலாக, அவளது தாயின் புதிய ஆண் நண்பனை அவளால் ஒப்ப முடியவில்லை. சந்தோசமாகத் தனது தாயும் தந்தையும் ஒன்றாக இருந்து அவள் பார்த்ததில்லை என விஜயிடம் ஒரு தனித்த இடத்தில் அவள் சொல்லவும் செய்கிறாள். ‘மரணம் குறித்துத் தனக்குப் பயமில்லை’ எனவும் அவள் சொல்கிறாள். தனிமையான, தந்தமைக்கு ஏங்குகிற, திட்டங்களற்ற இளம் பெண்ணாக ஜியாவின் குணச்சித்திரம் இருக்கிறது.

 

படத்தில் ஜியாவின் மீதான விஜயின் பாலுறவு வேட்கையும், அதனை மீறியுமான அவள் மீதான ஈடுபாடும் ஏற்படுவதற்கு முன்னாகவே ஜியாவினது உடலின் மீதான ஈடுபாட்டை படத்தைப் பின் தொடர்கிற பார்iவாளருக்கு காமெராவின் லென்ஸ் ஏற்படுத்தி விடுகிறது. ஜியா தோன்றும் முதல் காட்சி தொடக்கம் அவளும் விஜயும் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திலும் காமெரா பதினெட்டு வயதுப் பெண்ணான ஜியாவின் தொடைகளின் இடையில்தான் அலைகிறது. அவளது இடைக்குக் கீழும் அவளது தொடைகளின் இடையிலும் அவைகளது அருகாமையிலும்தான் காமெரா நிலைத்திருக்கிறது. ஓரு காட்சி ஜியாவின் உடலின் மீதான உச்சபட்சமான விரகதாபத்தைப் பார்வையாளருக்கு ஏற்படுத்தி வருகிறது. பெண்ணின் உடல் ஆணுக்கான போக்கிடம் எனபது நீலப்படம் கடைபிடிக்கும் ஒரு அடிப்படை நியதி. ‘நிசப்த்’ இந்த நியதியை அறிந்தோ அறியாமலோ கடைபிடித்திருக்கிறது.

 

பின்வரும் காட்சி படத்தில் விஸ்தாரமான ஒரு காட்சியாக வருகிறது. விஜய் எதேச்சையாகச் ஜன்னலில் பார்க்கிறபோது. குறைந்த வெள்ளை உடையில் ஜியா தோட்டத்தில் தண்ணீர்க் குழாயில் நீரைப் பீய்ச்சி விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ணுறுகிறார். காமெராவுக்காக ஒடுகிறார். நீண்ட ரப்பர் குழாயை பின்புறமிருந்து முன்புறமாகத் தனது தொடைகளுக்கிடையில் இழுத்தபடி, மண்டியிட்டு அதனை நிமிர்த்திப் பீச்சியடிக்கும் நீரைத் தனது திறந்த வாயை நோக்கி அடிக்கிறாள் ஜியா. பீச்சியடிக்கும் ரப்பர் குழாய் நீர் அவளது உடலெங்கும் வேகமாக அடித்துத் தெறிக்கிறது.  தொடைகளினிடையில் நீளும் ரப்பர் குழாய் ஆணுறுப்பின் குறியீடாக, உக்கிரமான கலவியின்பத்தின் பிரதியிடாக இக்காட்சி படத்தின் ஆரம்பத்திலேயே இடம்பெறுகிறது.

 

விஜயுடன் ஜியா தோன்றும் பலகாட்சிகள் தொடைகளை விரித்த நிலையில், வாய் திறந்த நிலையில், வாயிற்குள் ‘லாலிபப்’ உள்பட விரல்களை விட்டு வெளியில் எடுத்த நிலையிலான காட்சிகள் என பற்பல படத்தில் இருக்கிறது. அந்தப் பெண்ணின்  உடல்மொழி சதா பார்வையாளனை உடல்உறவுக்கு அழைப்பதான தோற்றத்திலேயே படம் முழுக்கச் சித்தரிப்புப் பெறுகிறது. இந்தக் காமெரா கோணம் திடீரென்று மாறிப் போவதை, படத்தின் பிரச்சினை விஜய்-அம்ருதாவின் குடும்ப உடைவாக ஆகிறபோது ஒருவர் அவதானிக்க முடியும். ஜியாவின் மீதான ஆண் பார்வையாளரின் காமமாகத் துவங்கும் கதை, படத்தின் பிற்பகுதியில்தான் விஜய்-அம்ருதா தம்பதியினரின் மகளான ரிதுவின் பார்வையிலான கதையாக மாறுகிறது.

 

விஜயாக நடிக்கும் அமிதாப் பச்சன் ஒரு மலைமுகட்டில் தற்கொலை செய்து கொள்வதற்கான ‘உணர்ச்சிகரமல்லாத அறிவார்ந்த முடிவில்’ நிற்கும் போது கதை துவங்குகிறது. அவர் தனது தற்கொலை முடிவுக்கான கதையைச் சொல்லத் துவங்குகிறார். எதிரில் அவரது மைத்துனர் சிறிதராக நடிக்கும் நாஸர் அமர்ந்திருக்கிறார். விஜய் தற்கொலை செய்வதில்லை. வீடு திரும்பும் அவர் தான் தற்கொலையைத் தேர்ந்ததற்கான காரணங்களைச் சொல்வதிலிருந்து படம் துவங்குகிறது.

 

‘ஜியாவில் நான் காதலில் வீழந்துவிட்டேன். எப்படி நேர்ந்தது என்கிற காரணம் எனக்குத் தெரியாது. அது நேர்ந்து விட்டது’ என மனைவியிடம் சொல்கிறார் விஜய். மகள் தகப்பனைக் கலந்துகொள்ளாது அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்குப் போக முடிவு செய்கிறாள். அம்ருதா இனி எப்போதும் விஜயை நம்புவது என்பது சாத்தியமில்லை. அவளுடனான எவ்வகையிலான உறவும் இனி விஜய்குச் சாத்தியமில்லை. மனைவி மகள் என இருவரிடமும் அவரது மரியாதையும் இனிச் சாத்தியமில்லை. வாழ்நாள் முழுக்கவும் இனி விஜய்க்கு விதிக்கப்பட்டிருப்பது தனிமைதான்.

 

நிஜத்தில், ஜியாவின் மீதான தனது ஈடுபாட்டுக்கான காரணங்கள் விஜய்க்குத் தெரிவதில்லையா என்ன? அதனை அவர் காரண காரிய வரையறைக்குள் விளக்கத்தான் முடிவதில்லையா என்ன? அவரளவில் நேர்த்துவிட்ட உறவுக்குத் திட்டவட்டமான காரணம் இருக்கிறது. ஜியாவுக்கும் விஜய்க்குமான உடல் சார்ந்த உறவென்பது, அப்படி நம் கருதிக் கொள்வோமானல், அது இரண்டு காட்சிகளில் இருக்கிறது. வாகனப் பயணமொன்றில் உற்சாக மிகுதியில் ஜியா விஜயின் கன்னத்தில் முத்தமிடுகிறாள். அடுத்ததாக விஜயின் படுக்கையில் அமர்ந்தபடி, அறை திறந்திருக்க, அவனது முகத்தை ஏந்தி உதட்டில் முத்தமிடுகிறாள். இதுவன்றி ஜியாவை அருகிருந்து விஜய் வெறிக்கும் இரு காட்சிகள் இருக்கிறது. மலைக் காட்டின் தனியறையில் ஜியாவின் தொடைகளை வெறிக்கிறார் விஜய்.  அவள் கவிதைகளை வாசித்துக் காட்டிக் கொண்டிருக்கையில் அவளது உதடுகளை வெறிக்கிறார். ஜியாவின் மீதான ஈரப்புக்கான உளவியல் ரீதியான காரணங்களையும் விஜய் அறிந்துதானிருக்கிறார்.

 

‘வயதாகிக் கொண்டு போவது குறித்த பயமும், மரணம் குறித்த பயமும் மத்தியதர வயது மனிதர்களிடம் இளைய வயதுள்ளவர்களின் பால் ஒரு பொறாமையுணர்வையும் பய உணர்வையம் ஏற்படுத்துகிறது’ என்கிறார் விஜய். ‘மரணத்திலிருந்தும் வயதாகிப் போவதிலிருந்தும் மீண்டு, மறுபடியும் இளமைக்குத் திரும்புவதான ஒரு வேட்கையாகவே இளம் வயதினர் மீதான ஈடுபாடு வருகிறதே அல்லாமல், வெறுமனே அவர்களது இளமையான உடம்பின் மீதான ஈர்ப்பு மட்டுமே இதற்குக் காரணம் இல்லை’ என்கிறார் விஜய். இந்த நிலைபாடு ஒரு மனிதார்த்தம் சார்ந்த தத்துவ நிலைபாடு. அல்லது இளவயதினர் மீதான முதிய வயதினரின் உடல் சார்ந்த ஈடுபாட்டுக்கான காரணம் சார்ந்த ஒரு நம்பிக்கை.

 

குழந்தைகளின் மீதான பாலுறவு ஈடுபாட்டுக்கும் இவ்வாறான காரணங்கள் இலக்கியத்தில், நபக்கோவின் ‘லோலிடா’வில் சொல்லப்படுகிறது. குழந்தைகளையும் அவர்களது கள்ளமற்ற தூயமனதையம் உடலையும் காமவயப்படுத்துவதும் (eroticising)  மனோரதியப்படுத்துவமான நிலைபாடு என்பது மேற்கத்தியக் காலச்சாரம் முழுக்கவுமே இருந்து வருகிறது எனும் பார்வையை 'லோலிடா' குறித்த விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். எடுத்துக் காட்டாக ‘ப்ளு லாகுன்(Blue Lagoon)’ படத்தையும் அதில் குழந்தைகளின் நிரிவாணமும் பாலுறவும், போடெரக் எனும் ஹாலிவுட் சிறுமியின் உடலும் மனோரதியப்படுத்தப்பட்டிருப்பதையும், காமஉணர்வுக்கு உரியதாக உருவாக்கப்பட்டிருப்பதையும் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

 

விஜய் ஒரு இந்திய மத்தியதர வயது ஆண். அவரது நண்பரும் மைத்துனருமான சிறிதர் அவரிடம் கேகிற கேள்விகள் எதற்கும், காரண காரிய அடிப்படையில் நேர்மறையான பதில்களை அவரால் சொல்ல முடிவதில்லை. சிறிதர் ஒரு நண்பனாக இரண்டு பிரதான கேள்விகளை விஜயிடம் கேட்கிறார். ‘பதினெட்டு வயதில் ஒரு பெண் அறிவுபூர்வமான முதிர்ச்சியுள்ள முடிவுகளை எடுக்க முடியும் என நீ கருதுகிறாயா? அதனோடு அந்தப் பதினெட்டு வயதுப் பெண்ணுக்கு நீ பொறுத்தமானவன் எனக் கருதுகிறாயா?’. இந்த இரு கேள்விகளுக்கும் விஜயின் பதில் இல்லை என்பதுதான். விஜய் தன்னளவில் பதில் தேட வேண்டிய அவசியமற்று ஜியாவின் ஒரு தலைக்காதலன் படத்தில் தோன்றுகிறான். அவன் வந்திருப்பதை விஜய் ஜியாவுக்குத் தெரிவிக்கிறார்.

 

இடையில் மனைவி-மகள்-மைத்துனர் என அனைவரையும் முகத்துக்கு நேரில் எதிர்கொள்கிறார். ‘நான் உன் மீது எத்தனை மரியாதை வைத்திருக்கிறேன் தெரியுமா?’ என மனைவியை விஜய் கேட்கிறபோது, அம்ருதா ‘உங்களுக்கு யாரையும் மதிக்கவும் கூடத் தெரியுமா?’ என்கிறாள். தனது சிநேகிதி ஜியாவை ரிது விட்டை விட்டு வெளியே போகுமாறு கத்துகிறாள். அங்கு வரும் விஜய் ‘அறிவுடன் நடந்து கொள்’ என மகளிடம் சொல்ல, ‘அறிவுடன் நடப்பது பற்றிச் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி?’ எனத் தகப்பனைப் பார்த்து மகள் கேட்கிறாள். அவரது காரண காரிய சிந்தை செயல்படுவதற்கான வாய்ப்பே இல்லை. அவரது நேர்மையைக் கேள்வி கேட்டுவிட்டு, ‘நான் நிராதரவான யாருமற்ற தனியள் என நினைத்துவிட வேண்டாம்’ எனக் கத்திவிட்டு, வீட்டை விட்டு வெளியேறும் ஜியாவை அவளது காதலன் தோளில் சாய்த்துக் கொண்டு விஜயின் கண்பார்வையிலிருந்து இருவரும் மறைகிறார்கள்.

 

தனியனாகிய விஜய் தற்கொலை செய்துகொள்ளப் போய் திரும்பி வருகிறார். தனது நண்பனான சிறிதருக்கும் நமக்கும் மிகமெல்லிய, தெளிவான குரலில் தான் வாழ்நாள் முழுக்கவும் சுமந்தே தீர வேண்டிய தனிமைத் துயரைக் குறித்துச் சொல்வதுடன் படம் நிறைகிறது.

 

விஜய் இறுதியில் சொல்கிறார் : ‘மனைவி இனி எப்போதும் என்னை நம்பப் போவதில்லை. எனது மகள் என்னிலிருந்து தொலைதூரம் சென்று விட்டாள். ஜியாவும் இனி எப்போதும் என்னிடம் இல்லை. அவளது நினைவுகளுடன்தான, இனி தான் வாழ வேண்டும்’.

 

'லோலிடா'வைப் படித்திருப்பவர்களுக்கு அல்லது ஸ்டான்லி குப்ரிக்கின் 'லோலிடா' திரைப்பட வடிவத்தைப் பார்த்திருப்பவர்களுக்கு, அமிதாப்பச்சனின் அறிவார்ந்த மெல்லிய தெளிவான கதை சொல்லலைப் புரிந்துகொள்ள முடியும். தன்னைப் ‘பரிவுடன்’ புரிந்துகொள்ள அவர் கோருகிறார். ஜியாவுக்கும் அவருக்கும் சரீரரீதியாக எந்த உறவும் திரைப்படக் கதையில் இடம்பெறுவதில்லை. அவளது இரண்டக மனநிலை தந்தமைக்கான தேடல், சதா அம்ருதாவை சித்திரவதைக்கு முயன்று பார்க்கும் அவளது மனநிலை போன்றன ஒரு இரண்டக உளவியல் கொண்ட பெண்ணாகவே அவளை முன்வைக்கிறது. அவள் குழந்தமைதான் விஜய்க்கு வேட்கைக்கும் பரிவுக்கும் உரியதாக இருக்கிறது. ஜியாவுடனான நினைவுகள் அளவே காலமெல்லாம் அவர் யோசித்துப் பார்க்க தமது மகள் ரிதுவுடனான அல்லது தனது மனைவி அம்ருதாவுடனான நெகிழ்வான நினைவுகளும் அவருக்கு இருக்கவே செய்யும். அதுபற்றியெல்லாம் அவர் தனது நண்பனும் மைத்துனனுமான சிறிதரிடம் பகிர்ந்து கொள்வதும் இல்லை.

 

ஜியாவுடனான நினைவுகளுடன் மட்டுமே அவர் வாழ வேண்டியிருக்கும் எனச் சொல்வது, ஒரு வகையில் செயற்கையான, மனோரதியமான அல்லது இட்டுக் கட்டப்பட்ட இயக்குனரது நிலைபாடாக இருக்கிறது. இறுதிக் காட்சியில் வெளிப்படும் முத்தாய்ப்பான வசனங்கள் பாத்திரத்தின் குணச்சித்திரத்தின் நீட்சியாக வெளிப்படுவதில்லை. மாறாக, ஒரு ‘அறிவார்ந்த’ இயக்குனரின் 'செயற்கையான' சொற்களாக இருக்கிறது.

 

இந்தத் திரைப்படத்தை இன்னும் எத்தனை முறையும் பார்க்கலாம். அதற்கான காரணம் அமிதாப்பச்சன் எனும் அற்புதம். அமிதாப்பச்சன் தவிரவும் இந்தப் பாத்திரத்தை இவ்வளவு அழகாக எவரும் செய்ய முடியும் எனக் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. ராணிமுகர்ஜியிடமிருந்து முத்தம் பெற்றதும் (பிளேக்-Black) உறைந்துபோக, தபு கேட்டுக் கொண்டார் என்றதற்காக மைதானத்தின் மற்றொரு பக்கம் ஓடிப் போய் வந்து, அசடு வழிய(சீனி கம்), முத்தம் பெற்ற பின், ‘ஆம்’ என உன்மத்தத்தில் கண்கலங்க (நிசப்த்) இந்தக் கிழட்டுக் குழந்தைக்கு மட்டும்தான் முடியும். கதையின் மௌனத்திற்கு ஏற்ற இசைக்காகவும், அமிதாப்பச்சனுக்காகவும் மட்டுமே நினைவில் நிற்கிறது ‘நிசப்த்’ எனும் இந்தியத் திரைப்படம்.

 

அனுப்புக Home, Literature
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.