வடக்கு - கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி எந்த மாகாணங்களையும் இணைக்க முடியும் எனவும் இதனடிப்படையில் வடக்கு கிழக்கை மீண்டும் ஒன்றாக இணைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர் ஒருவர், வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்குமாறு கூறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழநாட்டை உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை வழங்க வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் இனப்பிரச்சினையை ஈழம் என்ற எண்ணக்கருவில் இருந்து தீர்வுகாண முடியாது என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் எனவும் ஈழத்தையோ தனிநாட்டை ஏற்படுத்த கூட்டமைப்பு எந்த விதத்திலும் முனைப்புகளை மேற்கொள்ளாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்க வேண்டும் எனக் கூறுவது ஈழத்தையோ, தனிநாட்டையோ உருவாக்க வேண்டும் எனக் கூறுகின்ற கருத்துக்கள் என எந்த தரப்பினரும் அர்த்தப்படுத்தி கொள்ளக் கூடாது. இது முற்றாக நாட்டு மக்களை தவறாக வழிநடத்த மேற்கொள்ளப்படும் அடிப்படையற்ற பொய் பிரசாரமாகும். அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு அமையவே, தமிழத் தேசியக் கூட்டமைப்பு வடக்கு - கிழக்கை இணைக்க வேண்டும் என்று கூறுகிறதே தவிர வேறு எதிர்பார்ப்பில் அல்ல எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.