தென் மாகாணத்தில் கொலைகள் மற்றும் மிகப்பெரிய கொள்ளைச் சம்பவங்கள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில், பௌத்த பிக்கு ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்கத்தின் அதிகாரிகள் நேற்று அதிகாலை கைதுசெய்துள்ளனர்.
மொரகொல்ல பிரதேசத்தில் சுமார் 5.5 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் மாணிக்ககற்களை கொள்ளையிட்டமை, பெந்தர மற்றும் இந்துருவ பிரதேசத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தமை தொடர்பில் பிக்குவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிக்கு, நீதிமன்ற சங்க நாயக்கர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக போலி பிறப்புச்சான்றிதழ் ஒன்றை பயன்படுத்தி உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் நீண்டகாலமாக பிரதேசத்திற்கு பொறுப்பான காவற்துறை அதிகாரிகளுடன் இந்த பிக்கு நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்து வந்துள்ளார்.
இந்துருவ பண்டாரிகொட பிரதேசத்தில் உள்ள விகாரையில் வைத்து இநத பிக்கு கைதுசெய்யப்படும் போது, அவரிடம் இருந்து மடிக்கணனி உள்ளிட்ட ஆவணங்கனை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள பிக்கு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். பிக்குவிடம் உதவிகளை பெற்றுக்கொண்ட குற்றவாளிகளை கைதுசெய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவற்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.