பெட்ரீக்கா ஜேன்ஸ் விசேட மொழியாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள்
சுவிஸர்லாந்தின் சூரிச் நகரில் இருந்து நாய் குட்டி ஒன்றை கொண்டு வருவதற்காக 56 பயணிகளின் பயணத்திட்டத்தை மாற்றி, சிறிய விமானம் ஒன்றின் மூலம் அவர்களை அழைத்து வர மேற்கொள்ளப்பட்ட முயற்சி குறித்து கேள்வி எழுப்பிய போது, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தனக்கு அச்சுறுத்தில் விடுத்ததாக சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரீக்கா ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.
சுவிஸில் இருந்து நாய் குட்டியை கொண்டு வருவதற்காக பாதுகாப்புச் செயலாளரினால், பிரவீன் விஜேசிங்க என்ற விமானி மற்றும் கப்டன் ஒருவரை தெரிவுசெய்திருந்தாலும் அந்த விமானிக்கு ஏ 330 விமானத்தை செலுத்தி செல்லும் தகுதி மாத்திரமே இருப்பதால், குறிப்பிட்ட பயணத்திற்காக தயார் நிலையில் இருந்த ஏ 340 என்ற விமானத்தை மாற்றுமாறு இலங்கை விமான சேவையின் முகாமையாளர் கபில சந்திரசேன அழுத்தம் கொடுத்துள்ளதாக சன்டே லீடர் பத்திரிகைக்கு தெரிய வந்திருந்தாக ஜேன்ஸ் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த திட்டத்திற்கு இலங்கை விமானிகளின் ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்திருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை கோத்தபாய ராஜபக்ஷ அறிந்திருக்க மாட்டார் என்றே நான் நினைத்திருந்தேன். இதுபற்றி அவருக்கு தெரியுமா, அவர் அதனை அறிந்திருந்தாரா என்பதை கேட்கவே நான் அவரை தொடர்பு கொண்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பெட்ரீக்கா ஜேன்ஸ், பாதுகாப்புச் செயலாளரை கடந்த வியாழக்கிழமை தொடர்புக்கொண்ட போது, தானே அந்த நாய் குட்டியை கொண்டு வரு திட்டமிட்டதாக பாதுகாப்புச் செயலாளர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதனை கூறிய போது, பாதுகாப்புச் செயலாளர் மிகவும் கேவலமாக திட்ட ஆரம்பித்தார். கத்தினார். என்னை தகாத வார்த்தைகளால் பேசினார். கெட்டவார்த்தைகளில் திட்டிய அவர், நான், மலம் தின்னும் பன்றி போன்றவள் என கூறினார். இதனையும் மிகவும் கீழ்த்தரமாகவே அவர் குறிப்பிட்டதாக சன்டே லீடர் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முன்னர், தனக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் நட்புறவாக தொடர்புகள் இருந்தாக ஏற்றுக்கொண்டுள்ள ஜேன்ஸ், சில வாரங்களுக்கு முன்னர், பாதுகாப்புச் செயலாளர் சன்டே லீடர் பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை வழங்கியிருந்தாகவும் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை நான் மீண்டும் பாதுகாப்புச் செயலாளரை தொலைபேசியில் தொடர்புக்கொண்டேன். மேற்கூறிய சம்பவம் பற்றி செய்தியை வெளியிட போவதில்லை அவரது அச்சுறுத்தலுக்கு அஞ்சி அதனை செய்யவில்லை என்பதை தெரிவிப்பதற்காக அவரை தொடர்பு கொண்டேன். அப்போது ஊடகவியலாளர் வருண கருணாதிலக்க, நிறுவனத்தின் உரிமையாளர் லால் விக்ரமதுங்க ஆகியோர் என்னுடன் இருந்தனர்.
பாதுகாப்புச் செயலாளர் என்னை தூஷண வார்த்தைகளால் திட்டிக்கொண்டே சென்றார்.என்னை கொலை செய்ய போவதாக கூறினார். நீங்களா என்னை கொலை செய்ய போகிறீர்கள் என நான் கேட்டேன். மக்கள் என்னை கொல்வார்கள் என அவர் சொன்னார். பச்சை தூஷணத்தில் பேசினார் என பெட்ரீக்கா ஜேன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பதிலறிய தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தை தொடர்பு கொண்ட போது, பதில் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.