ஊடக அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய ஒன்பது இணைய தளங்களை இலங்கை தொலைதொடர்பு
கட்டுப்பாட்டு ஆணையகம் முடக்கியுள்ளது. தனிப்பட்ட நபர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் தகவல்களையும் செய்திகளையும் வெளியிட்டு வந்த இணைய தளங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. தற்காலிக அடிப்படையில் இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணைய தளங்கள் முடக்கப்படவில்லை எனவும், தற்காலிக அடிப்படையில் குறித்த இணைய தளங்களை முடக்குமாறு இணைய சேவை வழங்குனர்களிடம் கோரியதாகவும் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் யூ.எச்.சீ. பிரியந்த தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சின் பணிப்புரைக்கு அமைய இந்த இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகக்
குறிப்பிட்டுள்ளார்.
இந்த இணைய தளங்கள் இலங்கையில் முடக்கப்பட்ட போதிலும் வெளிநாடுகளில் பார்வையிடக் கூடிய வசதிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில இணைய தளங்களில் அதன் உரிமையாளர் பெயரோ தொடர்பு கொள்ளக்கூடிய விபரங்களோ கிடையாது என ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.