திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் வீடொன்றில் எரிந்த நிலையில் நேற்று (10) சடலமாக மீட்கப்பட்டவர்கள், கொலை செய்யப்பட்டு, பின்னர் எரியூட்டப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தனியாக வசித்து வந்த தாயும் மகளும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
55 வயதான மகேந்திரன் விஜயராணி, 22 வயதான மகேந்திரன் ஜானகி ஆகியோரே கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மகளது உடல் முற்றாக தீயில் எரிந்து சம்பலாகி இருந்ததாக கிண்ணியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தனித்தனி அறைகளில் சடலங்கள் காணப்பட்டன.
சில காலங்களுக்கு முன்னர், விஜயராணியின் கணவர் உயிரிழந்ததுடன், மூன்று மகன்கள் திருணம் செய்து கொண்டபின்னர், திருகோணமலை நகரில் குடியேற்றி விட்டனர்.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்காக மோப்ப நாய்களுடன் சில காவற்துறை குழுக்களை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதுடன் விசாரணகளை ஆரம்பித்துள்ளதாக திருகோணமலைக்கு பொறுப்பான காவற்துறை அத்தியட்சகர் பந்துல விஜேவர்தன தெரிவித்துள்ளார். எனினும் இந்த சம்பவம் நேற்று மாலை வரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.
கிண்ணியா ஆழங்கேணி பிரதேசத்தில் எரிகாயங்களுடன் இரண்டு சடலங்கள் மீட்பு :
10-07-2012 -07:05
கிண்ணியா ஆழங்கேணி பிரதேசத்தில் எரிகாயங்களுடன் இரண்டு சடலங்கள் மீட்;கப்பட்டுள்ளதாக கிண்ணியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
55 வயதான தாய் மற்றும் 21 வயதான மகள் ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இந்த மரணங்கள் சம்பவித்திருக்காலம் என காவற்துறையினர் கூறியுள்ளனர். எவ்வாறாயினும் சம்பவம் குறித்து காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காவற்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.