செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

மீரா நாயரின் காம சூத்ரா - I யமுனா ராஜேந்திரன்

 

மீரா நாயரின் காம சூத்ரா - I யமுனா ராஜேந்திரன்

 

பாப்ரவ்யாவின் போதனைகளை பின்பற்றுபவர்கள் சொல்கிறபடி ஐந்து ஆண்களால் அனுபவிக்கப்பட்ட எந்த ஒரு பெண்ணும் எவராலும் அனுபவிக்கப்படுவதற்கு மிகச் சரியானவள். ஆனால் கனிகபுத்ரா சொல்கிறார் : அப்படியே ஐந்து ஆண்களால் அனுபவிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும் கூட உறவினர் மனைவியர்களையோ அதிகம் கற்ற பிராமணனின் மனையியையோ அரசனது மனைவியையோ இவ்வகையில் அனுபவிக்கக் கூடாது. அவர்கள் விதிவிலக்காக கருதப்பட வேண்டும்

 

பல்வேறு வகை விலைமாதர்கள் வருமாறு : பரத்தைத்தரகிய பெண் ஊழியை. ஒழுக்கமறைற பெண். நடனமாது. பெண் கைவினைஞர். குடும்பத்திலிருந்து வெளியேறிய பெண். அழகை ஆதாரமாகக் கொண்டு வாழும் பெண். முறைப்படியான பரத்தை.

 

வாத்ஸ்யாயனர் 

 

காமசூத்ராவின் செய்தி மிகமிக வெளிப்படையானது. காதல் இல்லாமலே பாலுறவு கொள்வீர்களானால் அது பாசாங்குக் கலை. காதலுடன் பாலுறவு கொள்வீர்களானால் அது புனிதமானது. காமத்தின் மூலம் இகவுலகம் நோக்கிச் செல்லமுடியும். இந்திய வாழ்க்கை காமத்தையும் முக்தியையும் இணைத்ததொரு நடைமுறையாக இருந்தது. இந்தியா அந்நிய ஆதிக்கத்தின் கீழ் வீழ்வதற்கு முன்பான காலம் குறித்து, பிரிட்டிஷ்காரர்கள் அல்லது மொகாலயர்களின் ஆதிக்கத்திற்கு முன்பான காலம் குறித்து, ஒரு திரைப்படத்தை உருவாக்க நீண்ட நாட்களாகவே நான் ஏங்கிக்கொண்டிருந்தேன். அப்போது ஆன்மீகத்தன்மையும் பாலுறவும் விலகிக் கிடக்கவில்லை. அன்றாட வாழ்க்கையில் எங்கெங்கு நோக்கினும் புலன்நுகர் இன்பம் கலந்து கிடந்தது. எனது காமசூத்ரா திரைப்படம் பாலுறவில் ஈடுபடும் உடலின் நிலைகள் குறித்தது என்பதை விடவும், பாலியல்பின் அரசியல் குறித்தது என்பதுவே பொறுத்தமாக இருக்கும்.

 

மீரா நாயர்

 

காமசூத்ரா திரைப்படம் மிகப்பெரும் சர்ச்சைகளை இந்தியாவில் ஏற்படுத்தியிருந்தது. இறுதித் தீர்ப்பின்படி வெட்டுக்கள் இன்றி காமசூத்ரா இந்தியாவில் திரையிடப்பட முடியாது என தணிக்கைக் குழு அறிவித்தது. அமெரிக்காவில் இந்திய சமூகத்தினரின் விமர்சனங்களiயொட்டி ஐரோப்பிய நாடுகளிலும் எந்தவிதமான வெட்டுக்களும் இன்றி திரையிடப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளிவரும் இந்திய பத்திரிகைகளும் இப்படம் குறித்து கண்ணோட்டங்களை எழுப்பியிருநந்தன. இந்த படலத்தில் அப்படி என்னதான் ஆட்சேபகரமான விசயங்கள் இருக்கிறது? மீரா நாயரும் சரி அவரை ஆதரித்துக் குரல் கொடுப்பவர்களும் சரி வீராவேசமாக சாதனை என்ற ஆர்ப்பரிப்பதற்கு ஏதேனும் நியாயங்கள் இப்படத்தில் இருக்கிறதா?  இந்தப்படம் எடுத்துக் கொள்ளும் பிரச்சினைதான் என்ன? பாலுறவுச் சித்தரிப்பில் இப்படத்திலிருந்து ஆக்கப்பூர்வமாகவே தேர்ந்து கொள்ள ஏதேனும் இருக்கிறதா? இவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பிக் கொள்ளும் போது நமக்குள் இரண்டு பிரச்னைகள் குறித்த தெளிவான புரிதல்கள் தேவையாகின்றது.

 

காமசூத்ரா எனும் வாத்ஸயாயனரின் நூலின் முக்கியத்துவம் என்ன? அதன் செய்தி என்ன? அந்த நூல் சொல்லும் விஷயங்களின் இன்றைய பொருத்தப்பாடு என்ன? காமசூத்ரா எனும் திரைப்படம் தனது சித்தரிப்பில் கையாளும் மையமான பிரச்சினைதான் என்ன?

 

இப்படம் காமசூத்ரா எனும் கருத்தியல் நிறுவனத்தை சித்தரிக்கிறது. புலன் நுகர் இன்பம் தரும் சந்தோசத்தை காட்சி ரூபமாக சித்தரிக்கிறது. உடல்களின் அழகை அதன் இயல்பில் கொண்டாடடுகிறது. காமசூத்ரா எனும் வாத்ஸயாயனரின் நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. ஒன்றாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டு வரையிலான கால இடைவெளியில் எப்போதோ எழுதப்பட்டிருக்கிறது. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த காளிதாசரும் காமசூத்ரா நூலிலிருந்து நிறைய மேற்கோள்களைக் கையாள்கிறார். வாத்ஸாயனரின் நூல் அவருக்கு முன்பே இப்பிரச்சினைகள் குறித்து எழுதிய பாவ்ரய்யா, நந்தி, கனிகபுத்ரா போன்றோரது புத்தகங்களின் அடிப்படையில் அமைகிறது. காமசூத்ரா நூலின் செய்தி நால்வருணங்களின் அடிப்படையிலும் (பிராமணன்-சத்ரியன்- வைஸ்யன்-சூத்திரன்) நான்கு வாழ்க்கைப் படிநிலைகளின் அடிப்படையிலும் அமைகிறது. இந்நூலின் தத்துவப்படி நிலையும் நான்கு வகைகளில் அமைகிறது. தர்ம,அதர்ம,காம,மோட்ச நிலைகள்.

 

தர்மம் ஸ்மிருதியில் இருந்து  பெறப்பட வேண்டும். அர்த்தம் அரசாங்க அதிகாரிகளிடம் இருந்தும் அறியப்பட வேண்டும். காமம் காம ஸாஸ்திரா(64 கலைகள்)விலிருந்து பெறப்பட வேண்டும். இந்த மூன்று நிலைகளையும் கடந்தவன் முக்தி அடைவான். தர்மம் சமம் பிராமணன். அர்த்தம்  சமம் பொருள், அரசதிகாரி மற்றும் வியாபாரி. காமம் சமம் காமசாஸதிரம்,  மனைவி மற்றும் விலைமகளிர. முக்தி சமம் கடவுள்தன்மை.

 

காமசூத்ரா நூல் ஏழு பகுதிகளால் ஆனது. காமசூத்திரத்தின் முதல் பகுதி, பெண்களின் யோனிகளை நான்கு வகைகளாhகப் பிரிக்கிறது. பெண்கள் பயிலவேண்டிய 64 கலைகளை வகைப்படுத்துகிறது. இரண்டாம் பகுதி, பாலுறவில் ஈடுபடும்போது பாவிக்க வேண்டிய உறுப்புகளின் நிலைகளை விவரிக்கிறது. தழுவுதல் முத்தமிடுதல் யோனி லிங்கம் போன்வற்றின் சங்கம நிலைகள் போன்றவற்றை விவரிக்கிறது. மூன்றாம் பகுதி, மனைவியை எப்படித் தேர்ந்தெடுத்து அடைவது மற்றும் அதில் கையாளப்பட வேண்டும் தந்திரம் போன்றவற்றைப் பேசுகிறது. நான்காவது பகுதி, மனைவியைக் கையாளும் போது ஏற்படும் பிரச்சினைகள் சிக்கல்கள் பற்றிப் பேசுகிறது. ஒரு ஆணின் பல்வேறு மனைவியர்க்கிடையில் பிரச்சினைகள் எப்படிக் கையாளப்பட வேண்டும் என்று பார்க்கிறது. கணவனின் பாலுறவுப் பிரச்சனைகளை கையாள்வது தொடர்பாக மனைவிக்கு ஆலோசனைகள் தருகிறது. ஐந்தாவது பகுதி, பிறரது மனைவியரை எவ்வாறு தமதாளுமைக்குள் கொண்டுவருவது என ஆண்களுக்கு ஆலோசனை தருகிறது. பெண்களின் மனநிலையறிந்து அவர்களை அடித்து வீழ்த்துவது குறித்து கற்றுத் தருகிறது.  ஆறாவது பகுதி, விலை மகளிர்க்கும் இரண்மனைத் தாசிகளுக்கும் இருக்க வேண்டிய சாகசங்கள், மனப்பக்குவங்கள் பற்றி ஆலோசனை தருகிறது. ஏழாவது பகுதி, ஆண்களும் பெண்களும் பரஸ்பவரம் கவர்ந்து கொள்வதற்கான வசியக்கலைகளை பற்றிய செயன்முறை விளக்கங்களைத் தருகிறது.

 

மீரா நாயரின் பார்வையில் காமசூத்ரா தரும் செய்திதான் என்ன? மீரா நாயரின் வரவேண்டிய காரணம் என்ன? யாரின் விமர்சனத்துக்கு எதிரிடையாக, எவருக்குப் பதில் வழங்கும் முகமாக இப்படம் வந்திருக்கிறது? இந்த மேன்மையான இந்திய வாழ்க்கையைக் குலைத்த அந்நியர்கள் யார்?

 

காமசூத்ரா படம் பதினாறாம் நூற்றாண்டில் நிகழ்வதாக அமைக்கப்படுகிறது. படத்தின் இறுதியில் இரண்டு இந்து மன்னர்களுக்கிடையிலான பகைமையில் ஒருவருக்கு ஆதரவாக நுழையும் இஸ்லாமியப் படைவீரர்கள் முகம் கறுப்புத் துணிகளுடன் ஆரவார முழுக்கமிட்டபடி குதிரையின் குளம்படியோசை இடிபோல் வெடிக்க ஆதிக்கம் கொள்ள நுழைகிறார்கள். படத்தின் நாயகி வானத்தின் உள்நோக்கி புழுதி மூட்டத்தில் நடந்து போகிறாள்.

 

காமமும் தெய்வீகத்தன்மையும் கலந்து கிடந்த இந்திய வாழ்க்கைமுறையில் நுழைந்து, பாலுறவு குறித்த பிரம்மைகளை விதைத்தவர்கள் யார்? புலன் நுகர்வு இன்பம் குறித்து பொய்யான ஒழுக்கங்களை விதைத்தவர்கள் யார்? இந்தியர்கள் பாலுறவு சாகசங்கள் புரியாதவர்களா? ஆண் பெண்ணுக்கிடையிலான இயல்பான உறவில் விவகாரங்களைக் கொண்டு வந்தவர்கள் யார்? ஆண் பெண் பாலுறவை இருண்ட குகைகளுக்குள் அடைத்த வைதீகர்கள் எவர்?

 

இக்கேள்விகளை இரண்டு விதமானவர்களிடம் கேட்கிறார் மீராநாயர்.

 

இந்தியாவில் பாலுறவு இன்பம் குறித்த இரட்டை மதிப்பீடுகள் கொண்டிருக்கும். ‘ஐரோப்பிய சிந்தனைகொண்ட’ இந்தியர்களை நோக்கி இக்கேள்விகளைக் கேட்கிறார். தணிக்கை அதிகாரிகளை நோக்கி. மதகோஷத்தின் கீழ் திரண்டிருக்கும் அரசியல்வாதிகளை நோக்கி இக்கேள்விகளை முன்வைக்கிறார் மீரா நாயர். இந்தியர்கள் பாலுறவு இன்பம் குறித்து போலியான மதிப்பீடுகள் கொண்டவர்கள் என விமர்சிக்கும் அமெரிக்க-ஐரோப்பியர்களை நோக்கி எங்கள் கலாச்சாரம் எவ்வாறாக இருந்தது தெரியுமா? பாலுறவு இன்பம் குறித்து எவ்வளவு வெளிப்படையாக இருந்தோம் தெரியுமா? இதோ பாருங்கள் எங்கள் காலம் பார்த்து விட்டுச் செல்லுங்கள் எங்கள் பாலுறவு அணுகுமுறைகள் அவ்வாறாய் இருந்தது என்பது பற்றி என்கிறார் மீரா நாயர்.

 

ஒரு காலத்தில் பாலுறவு இன்பம் குறித்து வெளிப்படையாக இருந்த எங்களை போலி ஒழுக்கங்களுக்கு இட்டுச் சென்றவர்கள் யார், எவரது பாலுறவு மதிப்பீடுகள் எங்களை மாற்றி விட்டது என்று கேள்வி எழுப்பிக் கொண்ட மீரா பதிலாகச் சொல்வது இதுதான். மொகலாயப் படையெடுப்பு - இஸ்லாமியர்களின் கலாச்சாரம் எமது பாலுறவு மதிப்பீடுகளில் பாதிப்புச் செலுத்தியது.       பிரிட்டிஷாரின் படையெடுப்பு,  பிரிட்டிஷ்காரர்களின் ஜீடோ கிறிஸ்டியன் பாலுறவு மதிப்பீடுகள் எமது பாலுறவு நடவடிக்கைகளில் பாதிப்புச் செலுத்தியது. மீரா நாயரின் பாலியல் அரசியல்  என்பது இதுதான். ஒரு காலத்தில் பாலுறவு இன்பம் குறித்து மிக வெளிப்படையாக நாங்கள் இருந்தோம். ஐரோப்பியர்களாகிய நீங்கள் போலிகளாக, பொய்யான ஒழுக்கம் கொண்டவர்களாக, முக்தியிலிருந்து பாலுறவு இன்பத்தை விலக்கியவர்களாக இருந்தீர்கள். ஆனால் இப்போது நீங்கள் எங்களது வெளிப்படைத்தன்மை பற்றி எங்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறீர்கள் என்கிறார் மீரா நாயர்.

 

இது அறிவற்ற நிலைபாடு. பாலுறவு இன்பம் குறித்து இரட்டை வேடம் போடும் இந்தியர்களே, நீங்கள் ஐரோப்பிய இஸ்லாமிய பெண்ணடிமை அறவியல்களால் பாதிக்கப்பட்டுவிட்டீர்கள். உமது கடந்து காலத்துக்கு நீங்கள் திரும்பிப் போங்கள், அந்நியர்களின் அறவியல் மதிப்பீடுகளிலிருந்து விடுபடுங்கள் என்கிறார் மிருh நாயர்.

 

கலாச்சாரங்கள் குறித்துதும், பாலுறவு குறித்ததுமான மீராநாயரின் புதிதல் சனாதனச் சட்டகங்களைத் தாண்டி வரமுடியவில்லை. மதம்,கலாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையில் இஸ்லாமிய,கிறிஸ்தவ பாலுறவு அறங்களை விமர்சிக்கும் அவர், இந்துமதம் இந்திய வாழ்க்கை முறை என்று வரும்போது தனக்குள்ளேயே பெருமிதப்பட்டுக் கொள்கிறார். தனது மதம் கலாச்சாரம் குறித்த பெருமைப்படும் அவரது மனம், தனது மதம், வாழ்வு குறித்த விமர்சனத்தைத் தவிர்த்து விடுகிறது. காசூத்ரா எனும் கருத்தியல் நிறுவனத்தின் படுகேவலமான ஆணாதிக்க நிலைப்பாட்டையும், பாலியல் அடிமைகளாக அரண்மனைத் தாசிகளையும் தேவதாசிகளையும் நிரந்தரப்படுத்தியதையும் மீராநாயர் கண்டு கொள்ளவில்லை. காதலில் ஈடுபடும் உடல்களின் கவிதைத்தன்மை வாய்ந்த உடலுறவின் சந்தோசத்தைப் படைக்க முடிந்த மீராநாயருக்கு அரண்மணைத் தாசியின் சோகத்தின் ஆழத்தையோ, மன்னனின் காமசேட்டை வக்கிரங்கள் மீதான விமர்சனத்தையோ எமக்குள் கொண்டு தரமுடியவில்லை.

 

கதை பதினாறாம் நூற்றாண்டு இந்தியாவில் இடம் பெறுகிறது.

 

ராஜ்சிங்க் நாட்டைப் பரிபாலனம் செய்வதை விடவும் போகங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவன். மல்யுத்தம் வேட்டை கணக்கற்ற பெண்கள் எனதிளைப்பவன். தாரா ராஜவம்சத்தைச் சேர்ந்தவள். ராஜ்சிங்கை மணமுடிக்க இருப்பவள். மாயா அவளது தோழி. பொருளாதார ரீதியில் கீழ்நிலையிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவள். தாராவின் மீது மாயாவுக்கு இதையிட்டு ஒரு வன்மமும் பழிவாங்கும் உணர்ச்சியும் மனத்திற்குள் இருக்கிறது. மாயா பாலுறவுச் சாகசங்களில் ஈடுபாடு கொண்டவள். தாராவுக்கும் ராஜ்சிங்கிற்கும் திருமணம் நடக்கவிருந்த அன்றிரவில் ராஜ்சிங்கை தனது மயக்கும் சாகசத்தால் மயக்கி அவனோடு உடலுறவு கொள்கிறாள் மாயா. ’உன் வாழ்வில் என்றென்றும் ஞாபகமிருக்குமாறு நான் உபயோகப்படுத்திய ஒன்றை உனக்கு விட்டுச் செல்கிறேன்.’ எனத் தனது தோழி தாராவிடம் சொல்கிறாள் மாயா. தாராவின் உடல் ஊனமுற்ற சகோதரனுக்கு மாயாவின் மீது ஈடுபாடு இருக்கிறது. மாயாவின் இச்செயல் தெரிய வருகிறபோது அவள் அரண்மனையினின்று வெளியே வீசப்பட்டு விரட்டப்படுகிறாள்.

 

வீட்டை விட்ட வெளியேறி எங்கெல்லாமோ அலைந்து திரியும் மாயா ஜெய் எனும் சிற்பியைச் சந்திக்கிறாள். அவனது வேண்டுகோளுக்கு இணங்க காமரசம் ததும்பும் ஒரு சிலைக்கான மாடலாக இருக்கிறாள் மாயா. மாயாவும் ஜெய்யும் பரஸ்பரம் காதல் வயப்படுகிறார்கள். அங்கிருக்கும் ரஸா தேவியின் காம சாஸ்திரா பள்ளியில் காமக்கலைகளைப் பயில்கிறாள் மாயா. ஜெய்யும் மாயாவும் காம சாஸ்திரா நிலைகளிலிருந்து கலவியில் ஈடுபடுகிறார்கள். மனமும் உடலும் இணைந்த அந்த கலவிக்குப்பின் மாயா ஜெய்யின் முழு மனதையும் சிந்தனையையும் ஆகர்சித்து விடுகிறாள்.

 

தனக்குள் எங்கெங்கும் நிறைந்திருக்கும் மாயாவை தனது சிற்பக்கலை வேலையில் ஈடுபடமுடியாது தவிக்கிறான் ஜெய். தனது வேலையைக் குழுப்பும் மாயாவின் நினைவையிட்டு அவளை வெறுக்கத் தலைப்படுகிறான். ஜெய்யின் நிராகரிப்பினால் கண்ணீர் உருக்கும் மாயா அவனை மறப்பதன் பொருட்டு ரஸா தேவியிடம் விடைபெற்றுக் கொண்டு விலைமகளாக நினைக்கிறாள். இந்தச் சூழலில் வேட்டையாடி விட்டு மலையொன்றுக்கு வரும் ராஜ்சிங் ஜெய்யின் சிற்பக்கூடத்துக்கு வந்து மாயாவின் சிலையைப் பார்த்தவுடனேயே அதை மாயா என்று அடையாளம் காண்கிறான். இவளது சருமத்தின் வெப்பமும் வாசனையும் தனக்குத் தெரியும் என்கிறான். அவளைத் தேடிக் கண்டு பிடித்துவர ஆட்களை அனுப்புகிறான்.

 

மாயா கண்டுபிடித்துவரப்பட்டு ராஜ்சிங்கின் அரண்மனைத் தாசியாக ஆகிறாள். காம சாஸ்திர ஒழுக்கங்களின் படி காமலீலைகளை பாசாங்குக்கலை என்னும் அளவில் ராஜ்சிங்கின் மீது பாவிக்கிறாள் மாயா. தாராவினால் ராஜ்சிங்கின் போக ரசனைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்களுக்கிடையில் உடலுறவு என்பதே இடம் பெறுவதில்லை. மாயாவின் சிலையொன்றை உருவாக்குவதன் பொருட்டு ராஜ்சிங் சிற்பி ஜெய்யை அரண்மனைக்கு வரவழைக்கிறான். மாயாவும் ஜெய்யும் சந்திக்கிறார்கள். ஜெய்யின் முன்பேயே மாயாவின் முலைகளைப் பிசைகிறான் ராஜ்சிங். மாயாவின் உடல் இன்னொருவரால் ஆளப்படுவதை ஜெய்யினால் சகிக்க முடிவதில்லை. இச்சந்தர்ப்பத்தை ஜெய்யிக்கு பொறாமை ஏற்படுமாறு பாவிக்கிறாள் மாயா.

 

அரண்மனையில் கொஞ்ச நாட்கள் தங்கியிருக்கும் இடைவெளியில் ராஜ் சிங்குக்குத் தெரியாமல் ஜெய்யும் மாயாவும் கலவியில் ஈடுபடுகிறார்கள். மனமும் உடலும் இயைந்த காம சாஸ்திரநிலைக் காட்சிகள் இவை. விஷயம் அறிய வரும் ராஜ்சிங் கோபம் கொள்கிறான். மாயா ஜெய் தனித்திருக்கும் வேளையில் அறைக்குள் நுழைகிறான். நான் உன்னைக் கூப்பிடவில்லை. ‘என்மீது உனக்கு அதிகாரம் ஏதுமில்லை. என் உடலை நீ ஆளலாம் என் காதலை நீ பெற முடியாது‘ என ராஜ்சிங்கைப் பார்த்து மாயா சொல்கிறாள். சிற்பி ஜெய்யை யானைக் காலில் வைத்து நசுக்கிக் கொல்ல உத்தரவிடுகிறான் ராஜ்சிங். ‘ஜெய்யை விட்டு விடு, நீ சொல்வதையெல்லாம் நான் செய்கிறேன்’ என்கிறாள் மாயா.

 

ஜெய்யின் மீதான மாயாவின் காதலை ராஜ்சிங்கால் சகிக்க முடியவில்லை. மாயாவின் காதல் தனக்கு இல்லை என்பதை நினைத்து தீராத வேதனையில் வீழ்கிறான்.

 

தாரா மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயல்கிறாள். மாயா காப்பாற்றுகிறாள். மாயாவிடம் காம சாஸ்திர நிலைகளைக் கற்கும் தாரா அதை ராஜ்சிங்கிடம் பாவித்து அவன் அவளை நெருங்கும் போது தாரா விலகுகிறாள். வௌவேறு காரணங்களுக்காக மாயா, தாரா இருவருமே ராஜ்சிங்கை வெறுக்கிறார்கள். ராஜ்சிங் கஞ்சா போதையிலும் மனவேதனையிலும் மூழ்குகிறான். ஜெய் யானையின் கால்களில் நசுக்கப்படும் அந்நேரம் ராஜ்சிங்கின் மீது படையெடுத்து வருகிறான் தாராவின் அண்ணனும் மாயாவை விரும்பியவனுமான அரசன்.

 

சரியாகப் பரிபாலிக்கப்படாத நாட்டைக் கைப்பற்ற அவனுடன் உள்ளே நுழைகிறார்கள் முஸ்லீம் படையெடுப்பாளர்கள். ஜெய்யின் தலை நசுக்கப்பட்டுக் கொண்டிருக்க அதே வேளையில் மாயா அரண்மனையை விட்டு நகர்ப்புறத்தைவிட்டு வெளியேறிப் போய்க் கொண்டிருக்கிறாள். புழுதி எறியும் காற்று, வெளியில் ஆரஞ்சு நிற ஆகாயம். தொடுவானம் நோக்கிப் போகும் தாரா. உலகின் துக்கத்தையெல்லாம் புரட்சியபடி ஹோவென்று எழுகிறது பிரபஞ்ச சோகத்தை எழுப்பும் குரல்.

 

குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையத்தில் இணையத்திற்காக பிரத்தியேகமாக எழுதப்படும் கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் படைப்புகள் யாவும் காப்புரிமை பெற்றவை. அவற்றை மீள்பிரசுரம் பதிவேற்றம் செய்பவர்கள் globaltamilnews.net என மூலத்தை குறிப்பிட்டே மீள் பிரசுரம் செய்ய முடியும். என்பதனை நட்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

அனுப்புக Home, Literature
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
15-07-2012, 18:31
 - Posted by AVATHAANY
இத்திரைப்படத்தை பார்த்திருக்கின்றேன்.இறுதியில் யானையின் காலால் தலை நசுக்கப்பட்டு தலை நசுக்கப்படும் பொது எழும் அந்த ஒலி ஒரு பயங்கரத்தை ஏற்படுத்தும்.
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.