புலன் நுகர் இன்பம் தரும் சந்தோசத்தையும், நிலவிய சமூகம் வலியுறுத்திய ஒழுக்கங்களை மீறிய சுதந்திரக் காதலையும் காமசூத்ரா திரைப்படம் வலியுறுத்துகிறது. மாயா ஜெய் இடையிலான காதல் இவ்வகையில் காவியத்தன்மை மிக்க காதலாக இப்படத்தில் இடம் பெறுகிறது. இதற்கு முற்றிலும் நேர்மாறாக - பாலுறவு அடிமைகளை உருவாக்கிய - பாலுறவு சுதந்திரத்தை ‘சில கட்டுதிட்டமான வரையறைகளுக்குள் அடக்கிய’ காம சாஸ்திரா நூலை இப்படம் கொண்டாடுகிறது.
காமசூத்ரா எனும் நிறுவனத்தைப் பற்றி விமர்சனங்கள் எதுவுமே திரைப்படத்தின் காட்சிகளுக்குள் கொண்டு வரப்படவில்லை.
இப்படத்தில் வரும் சிற்பியான ஜெய் முன்னொரு காலத்தில் அரண்மனைத் தாசியாக இருந்தவளின் மகன். அரண்மனைத் தாசியின் மகனுக்கும் இன்றைய அரண்மனைத் தாசிக்கும் ஏற்படும் காதலை தனது அதிகாரத்தின் மூலம் நிர்மூலமாக்கிய அரசாங்கத்தின் பிரதிநிதியின், ராஜ்சிங்கின் வீழ்ச்சியை சரியாகவே மீராநாயர் கையாண்டிருக்கிறார். ராஜ்சிங்கின் பிற நடவடிக்கைகள் மீதான விமர்சனங்கள் படத்தில் இல்லை. குறிப்பாக ஒரு பெண் குழந்தையை உடலுறவுக்கென தனியறைக்குக் கொண்டு செல்லும் காட்சி பார்வையாளனுக்கு எந்தவிதமான கோபத்தையும் ஏற்படுத்தாமல் அன்றாடம் நிகழும் யதேச்சையான காட்சியாக அமைக்கப்பட்டிருக்கிறது.
காமசூத்ரா பாடம் கற்பிக்கும் ரஸாதேவி தொடர்பான காட்சிகள் முற்றிலும் மோசமான காட்சிகள். லிங்கங்களுக்குப் பொருந்திப் போகும் பல்வகை யோனிகள் பற்றிய விளக்கங்களும் உடல் பயிற்சி மாதிரி முலைகளையும் கால்களையும் இடுப்பையும் வளைத்து தாசித் தொழிலுக்கு பன்படுத்தும் செயல்முறை விளக்கங்களையும் விளையாட்டு மைதானம் மாதிரி இடங்களில் சொல்லித் தருகிறார் ரஸாதேவி. ரஸாதேவியின் பள்ளியின் சூழ்நிலை ஒரு ஆசிரமம் மாதிரி பர்ண சாலைகளும் அமைதியும் மெல்லி ஒலியும் வெளிச்சமும் இசையும் நிறைந்ததாக படத்தில் சித்தரிக்கப்படுகிறது. ரஸா தேவிக்கும் அங்கு மார்பகங்கள் வெளித்தள்ள பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் ஆன உறவு தாய் மகள்கள் உறவு மாதிரி புனிதப்படுத்தப்பட்டிருக்கிறது.
எந்தவிதமான பிரச்ஞைபூர்வமான சுதந்திரமான கலகத்தன்மையுள்ள பாலுறவுத் தேர்வுக்கும் வழிவிடாத கட்டுதிட்டங்களும் உடலுறவு நிலைகளுமே காமசூத்ரா நூலில் சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க ஆணின் தேவைகளுக்கு தயார்படுத்தும் பெண் உடல்கள் குறித்த நூலே காமசூத்ரா நூல். மேலும் பிராமணர்களின் பெண்களும் அரசர்களின் பெண்களும் விதிவிலக்கான புனிதர்களாகவும் கடை நிலையிலுள்ளோரும் விளிம்பு நிலையிலுள்ள பெண்களும் பரத்தையர்களாக நெறிப்படுத்தப்பட்ட கருத்தியல் சட்டகமே காமசூத்ரா பாடங்களில் செயல்படுகிறது.
ரஸா தேவியாக வரும் நடிகை ரேகா தேவதைமாதிரி சித்தரிக்கப்பட்டிருக்கிறார். உடம்பினை முழுக்கவும் போர்த்திய, வெள்ளாடை அணிந்த, அன்பாகவும் மெதுவாகவும் பேசும் தேவதை. காமசூத்ரா பள்ளியில் பயிற்சியில் ஈடுபடும் பிற பெண்களும் சரி படத்தில் சித்தரிக்கப்படும் மாயாவும் தாராவும் சரி மார்பகங்களை முன் தள்ளிய, இடுப்புப் பிரதேசத்தை வெளிக்காட்டும் பெண்களாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
ஐரோப்பிய மன்னராட்சி படங்களில் பெண்கள் சித்தரிக்கப்பட்டது மாதிரியான சித்தரிப்பு இது. படத்தில் காமசூத்ரா பள்ளி மாணவிகள் மாயா, தாரா தவிர்ந்த பிற பெண்கள் எவரும் இவ்வாறு சித்தரிக்கப்படவில்லை. மிக மோசமான இந்த அசமத்துவ சித்தரிப்பு வரலாற்று விரோதமானது மட்டுமல்ல, வியாபார தந்திரம் கொண்டதும் ஆகும். காமசூத்ரா சட்டகத்தின் அதிகாரத்தையும் பாலியல் சுரண்டலையும் விளிம்பு நிலைப் பெண்களை காம சாக்கடையாக்கும் அதன் அரசியலையும் மீரா நாயர் கண்டு கொண்டதற்கான சான்றுகள் திரைப்படத்தில் துப்புரவாக இல்லை.
காமசூத்ரா எனும் கருத்தியல் நிறுவனத்திற்கும் சுதந்திரக் காதல் தேர்வுக்கும் இடையில் உள்ள இந்தப்பதட்டம் திரைக் கதையில் தீர்க்கப்படவில்லை. இதனாலேயே இப்படம் ஒரு தர்க்கபூர்வமான திரைக்கதையுள்ள திரைப்படமாக முடியாமல் போகிறது. இந்தக் குறை, மாபெரு தவறு இப்படத்தில் இருந்தாலுத் கூட, ஒரே ஒரு காரணத்திற்காக இப்படம் முக்கியமான படமாக உலக சினிமாவில் பேசப்படும். இப்படம் புலன் நுகர் இன்பத்தின் சந்தோஷத்தை, நிர்வாண உடல்களின் பரஸ்பரமான கலத்தலை, அதனது மோன நிலையில் அதியற்புதமான கலையழகுடன் சித்தரிக்கிறது. ஜெய் மாயா தொடர்பான இரண்டு கலவிக் காட்சிகள் உணர்ச்சிபூர்வமான கவிதை போன்றவை.
இப்படம் குறித்த நமது விமர்சனங்கள் எத்தகையது ஆயினும் இப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டதற்காகச் சொல்லப்படும் காரணங்கள் மிகமிக அபத்தமானவை. இந்திய சினிமா தணிக்கைக் குழுவின் மதிப்பீடுகள் மிகவும் போலியானவை. தணிக்கைக் குழுவின் மதிப்பீடுகள் மட்டுமல்ல சமூகம் மாற்றம் பற்றிப் பேசுகிறேன் என்று சொல்கிற அரசியல்வாதிகள் இயக்குனர்களும் கூட இதில் அடக்கம். இந்தப் படம் பற்றி விமர்சனங்கள் எதுவுமே காமசூத்ரா எனும் கருத்தியல் நிறுவனம் பற்றியது அல்ல. மாறாக பாலுறவுக் காட்சிகளில் நிர்வாணமான உடல்கள் சித்தரிக்கப்பட்டது குறித்ததுதான்.
இந்தியத் தணிக்கைக் குழுவில் பெரும்பாலானவர்கள் சமூகநல ஊழியர்கள், வியாபார சினிமா தயாரிப்பாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், மத்திய-மாநில அரசு அதிகாரிகள் ஆகியோரே இடம் பெறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கியவர்கள். நிலவும் வைதீக சனாத கருத்தியல் சட்டகங்களுக்குள் வரையறைப்படுத்திக் கொண்டு வாழ்ந்தவர்கள். இவர்களிடம் புதிய திரைப்படப் போக்குகள் பற்றிய புரிதலை எதிர்பார்க்க முடியாது. இந்திய சினிமாவில் பாலுறவுச் சித்தரிப்பு என்பதே ‘கற்பழிப்புக் காட்சிகளில்’ மட்டுமே இடம் பெறும். பெண் உடல்கள் நிர்வாணப்பட்டு நிற்கும் இடங்கள் கூட அவர்களின் மீதான வன்முறை நிகழும் காட்சிளிலேயே இடம் பெறும். அல்லது வில்லனைச் சுற்றிலும் கைகால் அமுக்கும் பெண்களாகவோ கவர்ச்சி நடனம் ஆடம் சாகசக்காரிகளாகவோதான் பெண்களின் உடல் சித்தரிப்பப்படும்.
ஆணின் உடல்கூட மல்யுத்தத்திலோ அல்லது கிளைமாக்ஸில் சண்டைபோடும்போது சட்டை கழட்டும் வில்லன்-நாயக உடல்கள் என்ற அளவிலேதான் சித்தரிக்கப்படும். ஆக, இந்திய சினிமாவில் பெண் உடல் சித்தரிப்பென்பது வன்முறைக்குரியதாகவும் பண்டமாகவும் மட்டுமே உள்ளது. ஆண் உடல் சித்தரிப்பு வன்முறைக்கும் அதிகாரத்துக்கும் உரியதாக உள்ளது. புலன் நுகர் இன்பம் எனும் கவிதை மயமான அனுபவம் இந்திய சினிமாக்களில் இடம் பெறுவதில்லை. காட்டுமிராண்டித்தனமான பாலுறவுச் சேட்டைகளை அனுமதிக்கும் அதே தணிக்கையாளர்கள்தான் இம்மாதிரிக் காட்சிகளை ஒழுக்கத்தின் பேரில் நிராகரிக்கிறார்கள். காமசூத்ரா படத்தில் எந்தக் காட்சிளும் சித்தரிப்பும் ஆக்கப்பூர்வமானவை என்று உலக சினிமா விமர்சகர்கள், பெண்நிலைவாத ஆய்வாளர்கள் காண்கிறார்களோ, அந்தக் காட்சிகள்தான் இந்தியத் தணிக்கைக் குழுவினருக்கு பிரச்சனைகளாக உள்ளது.
மாயா ஜெய் சம்பந்தப்பட்ட கலவிக் காட்சிகளும் மாயா-ராஜசிங் சம்பந்தப்பட்ட ஒரு கலவிக் காட்சியும்தான் பிரச்சினைக்குரியதாக இருக்கின்றன.
உடல்கள் சித்தரிக்கப்படுதல் குறித்த விவாதங்களுக்குள் நாம் நீண்ட பொறுமையான பயணம் மேற்கொள்ள வேண்டும். அதுவும் காட்சிரூபம் என்று வருகிறபோது பிரச்சினை மிக மிகச் சிக்கலாகி விடுகிறது. எழுத்தில், படைப்பிலக்கியத்தில் டி.எச். லாரன்ஸ், மாப்பசான், ஆல்பர்டோ மெராவியோ, ஹென்றி மில்லர் போன்றோர் எழுத்துக்களிலும் சரி, சமப்பாலுறவாளர்களான சுனிதிநாம் ஜோஷி, ழான் ஜெனே போன்றவர்களின் எழுத்துக்களிலும் சரி, உடலுறவுச் சித்தரிப்புக்கள் படைப்புத் தன்மையையும் வாசகனுக்கு ஆன்மீக அதிர்வுகளை எழுப்பும் தன்மையையும் கொண்டுவிட்டன. மிக நெருங்கிய உதாரணமாக ஷியாம் செல்லதுரையின் ‘விந்தைப் பையன்’ நாவலை நாம் சொல்லாம்.
காட்சிரூப சாதனமான சினிமாவில் நாம் இதை எப்படி எதிர்கொள்ளவது?
ஸ்காண்டிநேவிய நாடுகளான ஸ்வீடன்-நார்வே- டென்மார்க்கிலிருந்து விகாரமான நீலப்படங்கள் நமது நாடுகளில் திருட்டுத்தனமாகப் பார்க்க முடிகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஆசியப் பெண்கள் இடம் பெறும் நீலப்பட வீடியோக்களை மிகச் சாதாரணமாக செய்தித்தாள் சாக்லேட் விற்கும் கடைகளிலேயே வாங்க முடியும். பிரெஞ்சிலிருந்து வந்து பரவலாகப் பேசப்பட்ட படமான இம்மானுவல் இரண்டு வரிசைப்படங்களாக வௌவேறு கால கட்டங்களில் எடுக்கப்பட்டுள்ளன. நேரடியான உடலுறவு தவிர்த்து அதிநவீன தொழில்நுட்ப அறிவு கொண்டவர்களால் தயாரிக்கப்படும் மெலிதான நீலப்படங்கள் இவை. இந்தப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தளத்தில் பாலுறவுப் பிரச்சினகளை, அரசியல்-மதம்-அறவியல்-அதிகாரம் போன்றவற்றின் இடையில் வைத்து, தத்துவ தளத்தில் பேசும் படங்களாக காத்திரமான படங்கள் வருகின்றன.
ஜப்பானிய திரைப்பட மேதையும் மார்க்ஸீயரும் உலகப் புரட்சிகளில் ஆதரவாளருமான ஓஸிமாவின் படங்களில் உடலுறவு அதன் மிக அடிப்படைதன்மையிலும் வெளிப்படையாகவும் இடம் பெறுகிறது. மார்ட்டின் ஸ்கோர்ஸிசே தனது தி லாஸ்ட் டெம்ப்டேசன்ஸ் ஆப் ஜீஸஸ் கிறைஸ்ட் படத்தில் இயேசுவுக்கு நேர்ந்த புலனுணர்ச்சிகளைப் பேசுகிறார். பெர்ட்டுலூஸி தனது லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ் படத்தில் மதிப்பீடுகளற்ற காதலில் விளையும் கட்டுதளையற்ற இன்பநுகர்வு குறித்துப் பேசுகிறார். பெர்ட்டுலூசியின் படத்தைப் பற்றிய உரையாடலை நாவலாசிரியர் ஆல்பர்டோ மொராவியோவும் கத்தோலிக்க அறவியலாளரும் மேற்கொள்கிறார்கள்.
உடல் குறித்த சித்தரிப்பு படைப்பு நிலையை எட்டும் தருணம் ஒன்று உண்டு. காட்சிரூப மொழியில் பாலுறவு படைப்பு நிலையை எட்டுதல் குறித்த மனத்தயாரிப்போ திறந்த மனமோ கலாச்சார மேன்மையோ நம்மிடம் இல்லை. பாலுறவுச் சித்தரிப்பு குறித்து நமது மேதாவிகளும் தணிக்கையாளர்களும் பார்த்த படங்களெல்லாம் பெரும்பாலும் விகாரமான நீலப்படங்கள் அல்லது ஆசியன் பேப் மாதிரியான படங்கள்தான். மீறி மீறிப் போனால் இம்மானுவேல் வரிசைப் படங்கள், மலையாளப் படங்களுக்கு மேல் இவர்களின் அறிவு என்பது இல்லை.
பாலுறவுச் சித்தரிப்பு பற்றிய விவாதங்களையும், அதற்குள் நிலவும் வித்தியாசங்களையும் அதையொட்டி எழும் படைப்புசார் தளத்தையும் உயர் தளத்திலான பாலுறவுச் சித்தரிப்புக் கொண்ட திரைப்படங்களைப் பார்ப்பதன் மூலமே எட்ட முடியும்.
விகாரமான வன்முறை நிறைந்த பாலுறவுப் படங்கள், கிளுகிளுப்புக்காக ஐரோப்பியர்களால் எடுக்கப்படும் வியாபாரமயமான பாலுறவுப் படங்கள், இவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமானது படைப்புத்தன்மை கொண்டது நகிஸா ஒஸிமா, பெர்ட்டுலூஸி, ஸ்கோர்சிஸே, நிஹ்லானி, ஸியாம் பெனிகல் போன்றோரின் திரைப்படங்கள். ஓவியத்தில் தமிழகத்திலிருந்து ஜெயராஜ் போடும் ஆண்பெண் படங்களுக்கும் அவர்களின் உறுப்புகள் சித்தரிக்கப்பட்ட விதத்துக்கும் பிக்கோஸோவின் படங்களின் ஆண்பெண் உடல்கள் உறுப்புக்கள் சித்தரிக்கப்பட்ட விதத்துக்கும் நம்மால் அனுபவத்தில் அடையக்கூடிய வித்தியாசம் போன்றதுதான் காட்சி ரூபத்தில் நான் சொல்லும் படைப்புத்தளம் பற்றிய வித்தியாசம்.
எதிர்பாலுறவு, சமப்பாலுறவு போன்ற உறவுகள் வரலாற்று ரீதியான காரணங்கள் கொண்டதாகவும் இயல்பானதாகவும் நோக்கப்படும் இன்றைய சூழலில், உடல்கள்-பாலுறவுகள் பற்றிய சித்தரிப்பு எவ்வாறு படங்களில் படைப்பிலக்கியங்களில் இடம் பெற முடியும்? வுpயாபாரம, பண்டம், போகப் பொருள் போன்றவை எல்லாவற்றுக்கும்தான் பொருந்துகிறது. பெண்நிலைவாதம் சமப்பாலுறவு, ஆப்ரிக்க இலக்கியம், தலித்தியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம், மார்க்ஸீய நூல்கள் போன்ற எல்லாமுமே இங்கு வியாபாரத்துக்கு உரியவையாகத்தான் இருக்கின்றன. இவை குறித்த புத்தகங்களை பகாசுர நிறுவனங்கள் வெளியிடுகின்றன. படங்களை வியாபார நிறுவனங்கள் தயாரிக்கின்றன. சேகுவேராவின் பனியன்கூட வியாபார ரீதியில் கொண்டாடப்படுகின்றன.
பெண்ணின் பாலியல்பு விழிப்புணர்ச்சி பற்றிய படங்களை, சமப்பாலுறவில் ஈடுபடும் பெண்கள் பற்றிய படங்களை பெண்களே எடுக்கிறார்கள். மீரா நாயரின் மிஸிஸிப்பி மசாலா படத்தில் விரகதாபத்தில் களியுறும் பெண் படைக்கப்பட்டிருக்கிறாள். அடித்தட்டு மக்களின் வாழ்வு வன்முறையும் மனஉளைச்சலும் நிறைந்த வாழ்வு. விளிம்பு மக்களுடனோ தெருவில் வாழ்பவர்களுடனோ பரிச்சயம் உள்ளவர்களுக்குத் தெரியும், ஒழுக்கங்கள் கடந்து வன்முறையிலும் மன உளைச்சலிலும்தான் அவர்களது உடல் உறவுகள் நிகழுகின்றன. கோவிந்த நிஹ்லானியின் ஆக்ரேஷ் படத்தின் உடலுறவுக் காட்சி தனது மனைவியின் மீதான உடைமை உணர்விலும், தன்னால் ஏதும் செய்ய முடியாத மன உளைச்சலின் உச்சத்திலும்தான் நிகழ்கிறது. நிஷாந்த் படத்தில் நிலப்பிரபு ஒருவனால் திரும்பத் திரும்ப பலாத்காரப்படுத்தப்படும் பெண்ணின் உடல், அதே நிலப்பிரபுக் குலத்தில் பிறந்த பரிவுள்ள ஒருவனிடம் அடங்கிப் போகிறது.
பாலுறவுக் காட்சிகள் கூடாது என்பது சனாதனிகளின் பார்வை. பரஸ்பர மரியாதையில் பரஸ்பர உணர்வுகளை வெளியிடும் வகையில் இரு உடல்களும் குறித்த மேல்நிலைச் சித்தரிப்பையே நாம் கோரவேண்டும். உடல் இனியது. பெண்ணுடலோ ஆணின் உடலோ இரண்டும் இனியது. புனிதப் பட்டதால்தான் போகப் பொருளெனும் தீவிர எல்லைக்குப் போகிறது. இயல்பில் கொண்டாடப்படுகிறதை மனிதன் அனுபவம் கொள்கிறபோது வக்கிரப்படுத்திக் கொள்வதும் வஸ்துவாகப் பார்ப்பதும் தகர்ந்து போகும்.
இந்திய-கிழக்கத்திய-தமிழ் மனிதனுக்கு உள்ள பிரச்சினை, தனது உடல் சம்பந்தமான பிரச்சினையை தன்னிலைப்படுத்திக் கொண்டு பார்க்கிறான். உடல்தான் ஆளுமை என்று பார்க்கிறான். உடலை வெளிக்காட்டும் பெண்ணை பரத்தை என கேவலப்படுத்துகிறான். பெண்ணுடல் புனிதம் என்று சொல்லிக் கொண்டே அசிங்கப்படுத்துகிறான். உடலுக்கும் ஒழுக்கத்திற்கும் முடிச்சுப் போட்டு வைத்திருக்கிறான். காமசூத்ரா படத்துக்கும் தமிழக தியேட்டர்களில் ஓடும் மலையாளப் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. காமசூத்ரா படம் சிந்திக்கிறவர்களாலும் விமர்சகர்களாலும் நல்ல சினிமா வினைகிறவர்களாலும் நேசிக்கப்படுகிற படமாக இருக்கின்றது.
ஆண் ஆதிக்கம் நீங்கிய பாலுறவு, வியாபாரம் தவிர்ந்த அழகுணர்வு, மத அறவியல் கடந்த பாலுறவு போன்றவற்றை நாம் விளைந்து செல்வோம். இன்பச்சுவைக் கதைகள் என்றொரு வகை நம் நாட்டுப்புறக் கதைகளில் உண்டு. நவீன இலக்கியத்திற்குள்ளும் திரைப்படங்களுக்குள்ளும் அவை இடம்பெற வேண்டும். கலவியின் சந்தோசம் அறிந்த சமூகம் ஆரோக்கியமான சமூகம் ஆகும்.
காமசூத்ரா திரைப்படம் புலன் நுகர் இன்பம் குறித்ததொரு கவிதை. படத்தில் நடித்த நவீன ஆன்ட்ரூஸ் (ராஜ்சிங்), மாயா (இந்திரவர்மா: பிரிட்டிஷ் இந்திய நாடக நடிகை) தாரா (சரிதா சௌத்ரி) ஜெய் (திக்காராம்) போன்றவர்கள் அனைவருமே இந்திய வம்சா வழியினர். திறன் வாய்ந்த நடிகர்கள். இந்தியக் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான பலநிற வண்ணங்களும் திரைச்சீலைகளும் ஆபரணங்களும் மங்கிய வெளிச்சங்களும் நேர்த்தியாகப் படத்தில் இடம் பெறுகிறது. ராஜஸ்தான் அரண்மனையும் அதன் சுற்றுப்புற மலைப்பாறைகளும் பாலைவனமும் மலைகளுக்கிடையிலான சுனைகளும் நம்மை பதினாறாம் நூற்றாண்டுக்கே இட்டுச் செல்கிறது. இப்படத்தின் சிறப்புகளில் முதன்மையானது அதன் பின்னணி இசை. விலாயத்கான், எல். சுப்ரமணியம் போன்ற 50 கலைஞர்கள் சேர்ந்து தந்த கலப்பிசை. மீராநாயரின் முன்னைய படங்களை ஒப்பிடும்போது - மிஸிஸிபி மசாலா, ஸலாம் பாம்பே, பெரஸ் பேமிலி போன்றவை - காமசூத்ரா செரிவான திரைக்கதையாக கட்டமைப்பைப் பெறவில்லை.
மீராநாயர் சொல்கிறபடி அவர் இரண்டு விசயங்களை ஆழ்ந்து நேசிக்கிறார். பெண் மற்றும் அவளது அழகு. காமசூத்ரா படத்தில் அழகு எங்கெங்கும் நிறைந்து தளும்புகிறது. மீராநாயரின் மாயா எனும் பெண், சுதந்திரம் தேடிய பெண்தான். தன்னளவில் தனது அனுபவங்களின் மூலம் வளர்ச்சியடைந்த பெண்தான். ஆனால் அவளது வளர்ச்சி பிரக்ஞைபூர்வ மானதுதானா, அதிகாரம் குறித்த விமர்ச்னபூர்வமான அறிவு கொண்டதுதானா என்கிற கேள்வியை நாம் நிச்சயம் எழுப்பித்தான் தீர வேண்டும்.
குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையத்தில் இணையத்திற்காக பிரத்தியேகமாக எழுதப்படும் கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் படைப்புகள் யாவும் காப்புரிமை பெற்றவை. அவற்றை மீள்பிரசுரம் பதிவேற்றம் செய்பவர்கள் globaltamilnews.net என மூலத்தை குறிப்பிட்டே மீள் பிரசுரம் செய்ய முடியும். என்பதனை நட்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.