இந்திய மத்திய அரசு கொடுத்துள்ள நெருக்குதலால் திமுகவின் டெசோ மாநாடு நடைபெறுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
என் வாழ்வில் நிறைவேறாத கனவு தமிழீழம்தான். என் மிச்சமிருக்கும் ஆயுளுக்குள் தமிழீழம் அமைவதற்கான எழுச்சியை ஏற்படுத்திவிட்டுத்தான் செல்வேன் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, தமிழீழத்தை வலியுறுத்தும் நோக்கத்தோடு டெசோ மாநாட்டை நடத்த திமுக திட்டமிட்டது.
முதலில் விழுப்புரத்தில் ஆகஸ்ட் 5-ம் திகதி மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு மாநாடு சென்னையில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு ஆகஸ்ட் 12-ம் திகதி மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய மத்திய அரசால் திமுகவுக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளதால் மாநாடு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விடுதலைப் புலிகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை ஓர் அறிவிப்பு வெளியிட்டது.
ஆதரவு இயக்கங்கள் மூலமாக இந்தியாவின் ஆதரவைத் திரட்ட விடுதலைப் புலிகள் முயல்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் ஆதரவு பெற முயற்சிக்கின்றனர். இந்த முயற்சி இந்தியாவின் ஒருமைப்பாட்டை குலைக்கும் முயற்சியாகும்.
விடுதலைப் புலிகளின் தமிழீழ கோரிக்கை இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது. இது இந்தியாவுக்கு மிகுந்த அச்சுறுத்தலான விஷயமாகும். 2009-ம் ஆண்டு போருக்குப் பிறகு கூட அந்த இயக்கத்தினர் தமிழீழ கோரிக்கையைக் கைவிடவில்லை. இதற்காக நிதி திரட்டுவது உள்ளிட்ட முயற்சிகளை ஐரோப்பிய நாடுகளில் மேற்கொண்டுள்ளனர். எஞ்சியுள்ள புலிகள் இயக்கத்தினர் மீண்டும் ஒரு குழுவாக ஒருங்கிணைந்து தங்களது இலக்கை எட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாகவே மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கருணாநிதியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசுக்கு நெருக்குதல் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே விழுப்புரத்தில் பெரிய அளவில் மாநாடாக நடத்தத் திட்டமிட்டு, அது கைவிடப்பட்டு ஒய்.எம்.சி.ஏ.வில் சிறிய அளவில் கூட்டமாகச் சுருங்கிப் போனது. இப்போது அதற்கும் பிரச்சினை எழுந்துள்ளது.
திமுகவில் கருணாநிதி மற்றும் தொண்டர்களைத் தவிர கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் எவருக்கும் டெசோ மாநாடு நடத்துவதில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இப்போது உள்துறை அமைச்சகத்தின் நெருக்குதலால் திமுக தலைமைக்கு அவர்களும் நெருக்குதல் தருகின்றனராம்.
ஆனாலும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாநாட்டை நடத்துவதில் இருந்து கருணாநிதி பின்வாங்கமாட்டார் எனவும், அதேவேளையில் தமிழீழம் அமைய வேண்டும் என்ற ஆக்ரோஷமான குரல்கள் அந்த மாநாட்டில் இருக்காது எனவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநாட்டின் மூலம் கருணாநிதி மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் கணக்கு போட்டு வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பிரிந்து தனியாக அணி அமைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபடக் கூடும் என அவருக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை எப்படியும் திமுகவின் பக்கம் இழுக்க வேண்டும் என்பதில் அவர் குறியாக இருக்கிறார் என்றும், மக்களவைத் தேர்தலில் திமுகவின் பிரசார பீரங்கியாக வைகோ வலம் வரவேண்டும் என கருணாநிதி விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். வைகோவின் மனதை மாற்ற டெசோ பயன்படும் எனவும் அதன் மூலம் இலங்கை இறுதிப் போரில் திமுகவின் அணுகுமுறை தொடர்பான தமிழக மக்களின் கோபம் குறையும் எனவும், அதற்காகவாவது டெசோ மாநாடு நடைபெறும் எனவும் கூறுகின்றனர்.
டெசோ மாநாடு இந்திய இறையாண்மையை மீறிய செயல் என்று கூறி தமிழக அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா எனும் சந்தேகமும் திமுகவினர் மத்தியில் இருக்கிறது.
தமிழக அரசு அப்படி மாநாட்டுக்குத் தடை விதித்தால் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும் திமுக தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
கடந்த முறை கருணாநிதியைக் கைது செய்தது மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு அனுதாபம் தேடித் தந்ததுபோல, டெசோ மாநாட்டுத் தடையும் அடுத்த மக்களவைத் தேர்தலில் சாதகமாகக் கூடும் என்ற எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது திமுக.
திமுக நடத்தும் டெசோ மாநாட்டுக்கு காங்கிரஸின் ஆதரவு இல்லை - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
திமுக நடத்தும் டெசோ மாநாட்டுக்கு காங்கிரஸின் ஆதரவு இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்திபவனில் காமராஜரின் 110-வது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஞானதேசிகன், காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரையில் ஜூலை 28-ம் திகதி காமராஜர் பிறந்த தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும். இந்த ஆண்டு டிசம்பருக்குள் காங்கிரஸ் கட்சியை கிராமப்புற அளவில் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
டெசோ மாநாடு தமிழீழ ஆதரவு மாநாடு. நாங்கள் தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் அமைவது நிரந்தரத் தீர்வாக அமையாது. அடிப்படை வசதிகள், கல்வி, மருத்துவம் போன்றவைதான் இலங்கைத் தமிழர்களுக்கு இப்போதைய அவசியத் தேவை. மத்திய அரசு இதைச் செய்துகொண்டிருக்கிறது என ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.